Tuesday, 11 September 2012

Catholic News in Tamil - 04/09/12

1. லெபனன் மக்கள் வேறுபாடுகளைக் களைந்து திருத்தந்தையை வரவேற்குமாறு மாரனைட்ரீதி தலைவர் வேண்டுகோள்

2. அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேசிய அளவில் பொருளாதாரப் புதுப்பித்தல் இடம்பெறுமாறு ஆயர்கள் வேண்டுகோள்

3. ஆப்ரிக்கக் கருத்தரங்கு : நற்செய்தி அறிவிப்பின் சவால்களை ஆராய்ந்து வருகிறது

4. ஆசியத் திருஅவை டிஜிட்டல் உலகத்தில் நற்செய்தி அறிவிக்க வேண்டும்

5. Rimsha Masih கடவுளின் திருவருளால் காப்பாற்றப்பட்டுள்ளார் : லாகூர் அமைதி மைய இயக்குனர்

6. சட்டத்தின் சலுகைகளை அனுபவிக்க ஏழ்மை தடையாய் இருக்கக் கூடாது ஐ.நாஅதிகாரி

7. வளரும் நாடுகளில் நகர்ப்புறமயமாதலைக் குறைப்பதற்கு கொள்கைகள் வகுக்கப்படுமாறு ஐ.நா.அதிகாரி வலியுறுத்தல்

8. இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாது : ஆஸ்திரேலிய அரசு


------------------------------------------------------------------------------------------------------

1. லெபனன் மக்கள் வேறுபாடுகளைக் களைந்து திருத்தந்தையை வரவேற்குமாறு மாரனைட்ரீதி தலைவர் வேண்டுகோள்

செப்.04,2012. லெபனன் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளைக் களைந்து,  அன்பு மற்றும் உண்மையுடன் தங்கள் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையை வரவேற்குமாறு கேட்டுள்ளார் அந்நாட்டு மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Bechara Rai.
லெபனன் மக்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகள், அந்நாட்டுக்குத் இம்மாதம் 14 முதல் 16 வரை திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை வரவேற்பதற்குத் தடையாய் இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் முதுபெரும் தலைவர் Rai.
வத்திக்கானில் 2010ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத்தொகுப்பை வெளியிடுவது திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
லெபனன் மக்கள் தொகையில் ஏறக்குறைய 59.7 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 21 விழுக்காட்டினர் மாரனைட்ரீதி கத்தோலிக்கர். 8 விழுக்காட்டினர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையினர். 5 விழுக்காட்டினர் கிரேக்கரீதிக் கத்தோலிக்கர். 7 விழுக்காட்டினர் பிற கிறிஸ்தவ சபையினர். இவர்களில் அர்மேனிய ரீதிக் கிறிஸ்தவர்கள் 4 விழுக்காட்டினர்.

2. அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேசிய அளவில் பொருளாதாரப் புதுப்பித்தல் இடம்பெறுமாறு ஆயர்கள் வேண்டுகோள்

செப்.04,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடுமையாக உழைக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறுகின்றன என்று அந்நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இத்திங்களன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய தொழிலாளர் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற ஆணையத் தலைவர் ஆயர் Stephen E. Blaire, தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பலர் வேலையிழந்திருப்பதையும், அதனால் குடும்பங்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்நாட்டில் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை தேடுவதாகவும், இலட்சக்கணக்கானவர்கள் வேலை தேடுவதையே நிறுத்தி விட்டதாகவும், 4 கோடியே 60 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், ஒரு கோடியே 60 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் வறுமையிலே வளர்வதாகவும் அச்செய்தி கூறுகிறது.
நாட்டின் பொருளாதார வாழ்வில் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பங்களையும் மையப்படுத்தும் நாடு தழுவிய பொருளாதாரப் புதுப்பித்தல் இடம்பெறுமாறும் அமெரிக்க ஆயரின் செய்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
3. ஆப்ரிக்கக் கருத்தரங்கு : நற்செய்தி அறிவிப்பின் சவால்களை ஆராய்ந்து வருகிறது

செப்.04,2012. இன்றைய ஆப்ரிக்காவில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குச் சாட்சிகளாய் இருப்பது என்ற தலைப்பில் திருப்பீட பொதுநிலையினர் அவை காமரூன் நாட்டு யவுண்டேயில் கருத்தரங்கு ஒன்றை இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளது.
ஆப்ரிக்காவின் எல்லா நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் இக்கருத்தரங்கு குறித்துப் பேசிய திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanislaw Rylko, இந்தப் பெரிய ஆப்ரிக்கக் கண்டத்தில் நற்செய்தியை அறிவிப்பதில் பொதுநிலையினருக்கு இருக்கும் முக்கிய பணி இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்படும் என்று கூறினார்.
ஆப்ரிக்காவின் சமய, சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் துன்பங்கள் நிறைந்த சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட கர்தினால் Rylko, பொதுநிலையினர் இந்தச் சவால்களைச் சந்திப்பதற்கு கருத்துக்களும் ஆலோசனைகளும் இக்கருத்தரங்கில் வழங்கப்படும் என்று கூறினார்.
இக்கருத்தரங்கு வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

4. ஆசியத் திருஅவை டிஜிட்டல் உலகத்தில் நற்செய்தி அறிவிக்க வேண்டும்

செப்.04,2012. ஆசியத் திருஅவை டிஜிட்டல் உலகத்தில் நற்செய்தி அறிவிப்பதற்கு, இந்தத் துறையில் முன்னேறியுள்ள வத்திக்கான் வானொலியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாங்காக் புனித யோவான் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் Chainarong Monthienvichienchai கூறினார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் BISCOM என்ற சமூகத்தொடர்பு ஆணையம் நடத்தும் 8வது கூட்டத்தில் உரையாற்றிய Chainarong, டிஜிட்டல் கலாச்சாரத்தில் ஒவ்வொருவரது கருத்தும் மதிப்புமிக்கது என்று கூறியதாக, இக்கூட்டத்தில் பங்கு கொள்ளும் வத்திக்கான் வானொலியின் இயேசு சபை அருள்தந்தை Joseph Paimpalli செய்தி அனுப்பியுள்ளார்.
இணையதளத்தில் ஒருவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்தால் அவற்றுக்கு மற்றவர்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர், எனவே டிஜிட்டல் கலாச்சாரத்தில் ஒவ்வொருவரது கருத்தும் மதிப்புமிக்கது என்று Chainarong தெரிவித்தார். 
சிற்றலை, பண்பலை போன்ற பாரம்பரியத் தொழில்நுட்பங்களிலிருந்து புதிய வகை தொழில்நுட்பங்களை வளர்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளது என்று வத்திக்கான் வானொலி இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அண்மையில் கூறியதைக் குறிப்பிட்டுப் பேசிய Chainarong, கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். 
வருகிற வெள்ளிக்கிழமைவரை நடைபெறும் இக்கூட்டத்தில் 12 தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து 14 ஆயர்கள் உட்பட 45 பேர் கலந்து கொள்கின்றனர்.

5. Rimsha Masih கடவுளின் திருவருளால் காப்பாற்றப்பட்டுள்ளார் : லாகூர் அமைதி மைய இயக்குனர்

செப்.04,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் பலிகடா ஆக்கப்பட்டுள்ள மனநலம் குறைபாடுள்ள சிறுமி Rimsha Masih, கடவுளின் திருவருளால் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று லாகூர் அமைதி மைய இயக்குனர் அருள்தந்தை James Channan கூறினார்.
சிறுமி Rimsha, குர்-ஆனின் பக்கங்களை எரித்ததன் மூலம் இஸ்லாத்தை இழிவுபடுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அவளது பையிலிருந்து எடுக்கப்பட்ட எரிந்த சில காகிதங்களுடன் இருந்த குர்ஆனின் பக்கங்களை Hafiz Mohammed Khalid Chishti என்ற இசுலாமிய மதபோதகர் வைத்ததாக நீதிபதியிடம் ஒருவர் சாட்சி சொன்னதைத் தொடர்ந்து அந்த மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த அருள்தந்தை Channan, இச்சிறுமியின் விவகாரத்தில் நீதி கிடைத்து அவள் விடுதலை செய்யப்படுவாள் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு தவறாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதற்கு சிறுமி Rimsha Masihன் கைதே சான்று எனவும் அக்குரு கூறினார்.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள 14 வயதுச் சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி சிறையில் வைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள இசுலாமிய மதகுரு Khalid Chishtiவும் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென ரிம்ஷியின் வழக்கறிஞர் கூறினார்.

6. சட்டத்தின் சலுகைகளை அனுபவிக்க ஏழ்மை தடையாய் இருக்கக் கூடாது ஐ.நாஅதிகாரி

செப்.04,2012. வறுமைக்கு எதிராகப் போராடுவது முக்கியமான மனித உரிமை என்று சொல்லி, ஏழைகளுக்கு நீதி கிடைப்பதற்கான வழிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா.வல்லுனர் ஒருவர் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீதி கிடைப்பதற்கு வழிசெய்வது தன்னிலே மனித உரிமையாகும் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கு முக்கியமானதாகும் என்றுரைத்த, கடும் ஏழ்மை ஒழிப்பு குறித்த ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி Magdalena Sepúlveda, வறுமையில் வாடும் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழிசெய்யாமல் இருக்கும் சட்ட ஒழுங்குகள் அர்த்தமற்றவை என்று குறை கூறினார்.
சட்ட ஒழுங்குகள் குறித்த ஐ.நா. உயர்மட்ட அளவிலான கூட்டம் இம்மாதம் 24ம் தேதி நடைபெறவிருப்பதையொட்டி உறுப்பு நாடுகளுக்கு இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளார் Sepúlveda.
சட்ட ஒழுங்குகளை அனுபவிப்பதற்கு ஏழ்மை ஒருபோதும் தடையாய் இருக்கக் கூடாது எனவும், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும் Sepúlveda கேட்டுள்ளார்.

7. வளரும் நாடுகளில் நகர்ப்புறமயமாதலைக் குறைப்பதற்கு கொள்கைகள் வகுக்கப்படுமாறு ஐ.நா.அதிகாரி வலியுறுத்தல்

செப்.04,2012. வளரும் நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாதலைக் குறைப்பதற்கு கொள்கைகள் வகுக்கப்படுமாறு ஐ.நா.அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலியின் நேப்பில்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.குடியிருப்பு நிறுவன இயக்குனர் Joan Clos, வளரும் நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாதலைச் சுனாமிக்கு ஒப்பிட்டுப் பேசி, இந்த நிலை, அந்த நகரத்தை நிர்வகிப்பதற்குரிய திறமைகளையும் விஞ்சிவிடும் என்று எச்சரித்தார்.
உலகின் தெற்கே, வளர்ச்சியோடு நகர்ப்புறமயமாதலும் வேகமாக வளருவதைக் காண முடிகின்றது என்றுரைத்த க்ளோஸ், நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்கு நகரங்கள் மீண்டும் வடிவமைக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
நகரங்களுக்கென வகுக்கப்படும் திட்டங்கள் குடிமக்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் வளமையையும் நாடுகளுக்கு உதவ வேண்டுமெனக் கூறிய அவர், வளரும் நாடுகளில் நகர்ப்புறமயமாதலைக் களைவதற்கு கொள்கைகள் வகுக்கப்படுமாறு வலியுறுத்தினார்.

8. இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாது : ஆஸ்திரேலிய அரசு

செப்.04,2012. இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கேட்கும் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கூறியிருப்பதை அந்நாட்டின் அரசும், அகதிகளுக்காக குரல்கொடுப்பவர்களும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர் எனச் செய்திகள் கூறுகின்றன.
இலங்கை அகதிகள் ஆஸ்திரேலிய சட்ட விதிமுறைகளுக்குள் வருவதற்கு முன்னரே, அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வசதியாக இலங்கை அரசுடன் ஆஸ்திரேலிய அரசு ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இலங்கையிலிருந்து தஞ்சம் கோருபவர்கள், பொருளாதார நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதால் அவர்கள் அகதிகள் அல்ல என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஜூலி பிசப் கூறியுள்ளார்.
ஆயினும், ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினரின் கூற்றுக்குப் பதிலளித்த அந்நாட்டு குடியேற்றதாரர் துறையின் அமைச்சர் கிறிஸ் போவன், ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கேட்கும் இலங்கை மக்களின் கோரிக்கைகளை ஐநாவின் அகதிகளுக்கான விதிமுறையின் அடிப்படையில் கையாள வேண்டிய கடமை ஆஸ்திரேலிய அரசுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலிய கிறிஸ்தவசபைகளின் கூட்டமைப்பும், அகதிகளை ஏற்பதை அந்நாடு மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்தத் திட்டம் மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று அகதிகளுக்காகக் குரல் கொடுக்கும் மற்ற ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.
நடுக்கடலில் படகில் தவித்த இலங்கையர்கள் 50 பேர் இந்தோனேசிய மீனவர்களால் மீட்கப்பட்டதாக வந்த செய்திகளையடுத்து, ஜூலி பிசப் இலங்கை அகதிகள் குறித்த தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
குழந்தைகள், பெண்கள் உட்பட இந்தப் படகில் வந்தவர்கள் நடுக்கடலில் பசியுடனும், நீர்ச்சத்து குறைந்தும் துன்புற்றனர் எனவும் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...