Saturday, 1 September 2012

cATHOLIC nEWS IN tAMIL - 01/09/12

1. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்

2. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி தனது 85வது வயதில் இறைபதம் அடைந்தார் 

3. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்புக்குத் தலைவர்களின் இரங்கல் செய்திகள்

4. டாக்கா உயர்மறைமாவட்டத்தின் 125ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்குத் திருத்தந்தையின்  பிரதிநிதி கர்தினால் O’Connor

5. Genfest அனைத்துலக இளையோர் கூட்டத்துக்குத் திருத்தந்தை செய்தி

6. உலகில் மரணதண்டனைகள் நிறுத்தப்பட ஐ.நா.கோரிக்கை

7. வரதட்சணை கேட்போருக்கான தண்டனை உயர்கிறது


------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்

செப்.01,2012. இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 22 ஆண்டுகள் பணியாற்றிய இயேசு சபை கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி தனது 85வது வயதில் இவ்வெள்ளி (ஆகஸ்ட் 31) பிற்பகலில் இறைபதம் அடைந்தார். 
கர்தினால் மர்த்தினி அவர்களின் இறப்பையொட்டி மிலானின் தற்போதைய பேராயர் கர்தினால் Angelo Scola அவர்களுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், "புனித லொயோலா இஞ்ஞாசியாரின் அன்புப் புதல்வராகிய இந்த அன்புச் சகோதரர், நற்செய்திக்கும் திருஅவைக்கும் தாராள உள்ளத்துடன் பணியாற்றியவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்தினால் மர்த்தினி, சிறந்த ஆசிரியர், விவிலிய நிபுணர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம் மற்றும் பாப்பிறை விவிலிய நிறுவனத்தின் அன்புக்குரிய அதிபர் என்றெல்லாம் தனது தந்திச் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை, அம்புரோசியன் மறைமாவட்டத்தின் ஞானமுள்ள மற்றும் ஊக்கம் தளராத பேராயர் என்றும் பாராட்டியுள்ளார்.
உண்மையுள்ள ஊழியர் மற்றும் தகுதியுடைய ஆயரை நம் ஆண்டவர் விண்ணக எருசலேமுக்குள் அழைத்துக் கொள்ள வேண்டுமென்று புனித கன்னிமரியின் பரிந்துரை மூலம் செபிக்கின்றேன் எனவும், கர்தினால் மர்த்தினியின் இறப்பால் வருந்தும் அனைவருக்கும் தனது ஆறுதலை கனிவோடு அளிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கர்தினால் மர்த்தினியின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 206 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 118 ஆகவும் மாறியது.

2. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி தனது 85வது வயதில் இறைபதம் அடைந்தார் 

செப்.01,2012. 1927ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இத்தாலியின் தூரின் நகரில் பிறந்த கர்தினால் மர்த்தினி, தனது 17வது வயதில் 1944ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். 1952ம் ஆண்டில் குருவானார். உலகப் புகழ்பெற்ற விவிலிய நிபுணரான இவர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைகழகம் மற்றும் பாப்பிறை விவிலிய நிறுவனத்தின் விவிலியத்துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1969ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டுவரை இவ்விரண்டு நிறுவனங்களின் அதிபராகவும் இருந்தார். விவிலிய நிபுணர் என்ற வகையில், பல விவிலியத் தலைப்புக்களிலும், புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகம் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். இவரின் நூல்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய உயர்மறைமாவட்டங்களில் ஒன்றான மிலான் பேராயராக 1979ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் நியமிக்கப்பட்டார். திருஅவைக்கும் நவீன உலகுக்கும் இடையே உரையாடலை ஊக்குவித்ததில் சிறந்தவர் என்று ஊடகங்களால் பாராட்டப்படுகிறார் கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி. விவிலியத்தின் மீது தணியாத் தாகம் கொண்ட கர்தினால் மர்த்தினி, 2002ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பணி ஓய்வு பெற்ற பின்னர் எருசலேம் சென்றார். பார்க்கின்சன் நோய் முற்றியதும் 2008ம் ஆண்டில் எருசலேமிலிருந்து இத்தாலி திரும்பி கல்லராத்தே என்ற நகரில் இயேசு சபையினரின் இல்ல்த்தில் வாழ்ந்து வந்தார். இவர் 16 ஆண்டுகள் பார்க்கின்சன் நோயால் துன்புற்று ஆகஸ்ட் 31ம் தேதி பிற்பகல் 03.45 மணிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ்ந்து நிற்க தனது ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார் கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி.   

3. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்புக்குத் தலைவர்களின் இரங்கல் செய்திகள்

செப்.01,2012. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்பு, இத்தாலியத் தலத்திருஅவைக்கும் அகில உலகக் கத்தோலிக்கத் திருஅவைக்கும் மட்டுமல்லாமல் இத்தாலி நாட்டுக்கும் பெரும் இழப்பு என்று இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitano தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தனது இத்தாலிய நாட்டுக்கு மகனாகவும், தனது வாழ்வின் பெரும் பகுதியை போதிப்பதிலும் அர்ப்பணத்துடன் செயல்நடுவதிலும் செலவழித்த கர்தினால் மர்த்தினி தனது மேய்ப்புப்பணியின் மூலம் சமூக வாழ்வில் மிகுந்த தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றும் நாப்போலித்தானோ கூறியுள்ளார்.
கர்தினாலின் ஞானமும் உலகளாவிய கண்ணோட்டமும் கிறிஸ்தவத்தின் மிகப்பரந்த தன்னமையைக் காட்டி மதங்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட உரையாடலுக்குப் பாதை அமைத்தன என்றும், அவர் தனது இறுதிக் காலத்தில் நோயால் துன்புறும்போதும்கூட தனது மிகச்சிறந்த அறிவுக்கூர்மை மற்றும் நன்னெறி வாழ்வால் இத்தாலியர்களிடம் பேசி வந்தார் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.
கர்தினால் மர்த்தினியுடன் நடத்திய பல தனிப்பட்ட சந்திப்புக்களையும் இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitano நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், கர்தினால் மர்த்தினியின் இறப்பு, பெரியதொரு மிலான் உயர்மறைமாவட்டத்தையும் கடந்து பலரின் உள்ளத்தைப் பெரிதும் தொட்டுள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். 
இன்னும், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco, புனிதபூமி காவலர் பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை Pierbattista Pizzaballa, மிலான் யூதமதத் தலைவர் பேராசிரியர் Giuseppe LARAS, MEIC என்ற இத்தாலிய கத்தோலிக்க கலாச்சார இயக்கம், கத்தோலிக்க இயக்கம் எனப் பல இத்தாலிய தேசிய இயக்கங்கள் ஆகிய அனைவரும் கர்தினால் மர்த்தினியின் இறப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்தினால் மர்த்தினியின் அடக்கச்சடங்கு திருப்பலி செப்டம்பர் 3, வருகிற திங்களன்று மிலான் பேராலயத்தில் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு நடைபெறும்.

4. டாக்கா உயர்மறைமாவட்டத்தின் 125ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்குத் திருத்தந்தையின்  பிரதிநிதி கர்தினால் O’Connor

செப்.01,2012. பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 125ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்கு, தனது சிறப்புப் பிரதிநிதியாக இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டரின் முன்னாள் பேராயர் கர்தினால் Cormac Murphy-O’Connorஐ இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
டாக்கா உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 125ம் ஆண்டு மற்றும் பங்களாதேஷில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக கர்தினால் O’Connor கலந்து கொள்வார்.
இக்கொண்டாட்டங்கள் வருகிற நவம்பர் 9, 10 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1850ம் ஆண்டு திருத்தந்தை 9ம் பத்திநாதரால் கிழக்கு வங்காளத்தின் அப்போஸ்தலிக்கப் பகுதியாக உருவாக்கப்பட்ட டாக்கா உயர்மறைமாவட்டம், 1886ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1887ம் ஆண்டில் டாக்கா மறைமாவட்டம் எனவும் பெயரிடப்பட்டது. 1950ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி திருத்தந்தை 12ம் பத்திநாதரால் உயர்மறைமாவட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டது. 1982ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி இதனை டாக்கா உயர்மறைமாவட்டமாக அறிவித்தார் திருத்தந்தை அருளாளர் 2ம் ஜான் பால்.

5. Genfest அனைத்துலக இளையோர் கூட்டத்துக்குத் திருத்தந்தை செய்தி

செப்.01,2012. ஹங்கேரி நாட்டு புடாபெஸ்ட் நகரில் இவ்வெள்ளிக்கிழமையன்று தொடங்கியுள்ள Genfest 2012 என்ற Focolare இயக்கம் நடத்தும் அனைத்துலக இளையோர் மாநாட்டுக்குச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 
பாலம் அமைப்போம் என்ற தலைப்பில் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் இந்தக் கொண்டாட்டங்களுக்கு இந்த புடாபெஸ்ட் நகரே இளையோருக்குப் பல விதங்களில் நல்ல தூண்டுதல்கள் தரும் அடையாளங்களைக் கொண்டுள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள இச்செய்தியில் திருத்தந்தையின் இக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
புடா மற்றும் பெஸ்ட்டின் முன்னாள் குடியிருப்புக்களை இணைக்கும் எண்ணற்ற  பாலங்கள் இரண்டாம் உலகப்போரின்போது அழிக்கப்பட்டுவிட்டன, எனினும் அந்தக் கொடும் சண்டையில் மிஞ்சிய சாம்பல்களிலிருந்து உண்மையான அடித்தளங்கள் மீதான நிலையான அமைதியைக் கட்டி எழுப்புவதற்கு எடுக்கப்பட்ட உறுதி, Focolare இயக்கத்தை ஆரம்பிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதியுடன் புடாபெஸ்டும் சேர்ந்து சர்வாதிகார ஆட்சியில் அதிகம் தொடர்ந்து துன்புற்றது, எனினும், பனிப்போர் முடிந்த பின்னர் சுதந்திரத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் புதிய நம்பிக்கை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன எனவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த அழகான நம்பிக்கையின் அடையாளம் இளையோரிலும் தூண்டுதலை ஏற்படுத்தும் என்ற திருத்தந்தையின் நம்பிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஞ்ஞாயிறன்று நிறைவடையும் Genfestன் இந்தப் பத்தாவது மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 12,500 பேர் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டுக்கு மூவாயிரம் தன்னார்வப் பணியாளர்களும் உதவி வருகின்றனர்.

6. உலகில் மரணதண்டனைகள் நிறுத்தப்பட ஐ.நா.கோரிக்கை

செப்.01,2012. காம்பியா, ஈராக், தென்சூடான் ஆகிய நாடுகளில் அண்மையில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது, உலகில் பல நாடுகளில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவதில் தீவிரம் காட்டப்படுவதை வெளிப்படுத்துகின்றன என்று ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றுவதைச் சட்டத்திலிருந்து நீக்குவதற்கு இதுவரை  ஆப்ரிக்கக் கண்டத்தில் முன்னணியில் நின்ற காம்பிய நாடு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கடந்த வாரத்தில் ஒன்பது கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றியதைக் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனப் பேச்சாளர் Rupert Colville.
காம்பியாவிலுள்ள அனைத்து மரணதண்டனை கைதிகளுக்கும் இந்த செப்டம்பர் பாதிக்குள் அத்தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டுமென அந்நாட்டு அரசுத்தலைவர் Yahya Jammeh அறிவித்த சில நாள்களுக்குள் ஒன்பது கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஈராக்கில் இந்த 2012ம் தொடங்கியதிலிருந்து 96 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் இந்த ஆகஸ்டில் மட்டும் 26 பேருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் Colville கூறினார்.
ஐ.நா.வின் 150 உறுப்பு நாடுகள் சட்டத்தில் அல்லது நடைமுறையில் மரணதண்டனைகளை இரத்து செய்துள்ளன அல்லது தண்டனை காலத்தை மாற்றியுள்ளன என உரைத்த Colville, உலகில் மரணதண்டனைகள் முழுவதுமாக நிறுத்தப்படுமாறு மீண்டும் ஐ.நா. கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
உலக அளவில் பார்க்கும்போது இத்தண்டனை வழங்குவது குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
7. வரதட்சணை கேட்போருக்கான தண்டனை உயர்கிறது
 
செப்.01,2012. இந்தியாவில் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவோருக்கானத் தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
வரதட்சணை கொடுமை ஒழிப்புச் சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், இதன்படி, திருமணத்தின் போது அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும் எனவும், இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஓர் ஆண்டுவரைச் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத்தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் பெற்றோரே அதிகம் பாதிக்கப்படுவோராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும், வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும்  வழிவகை செய்யப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...