Tuesday, 27 June 2023

பன்னாட்டு நகைச்சுவை நாள்

 

பன்னாட்டு நகைச்சுவை நாள்


'' failed to upload. Invalid response: RpcError

1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க எழுத்தாளரான wayne reinagel என்பவரால் இந்த பன்னாட்டு நகைச்சுவை நாள் கொண்டாடத் தொடங்கப்பட்டது. இவரது நகைச்சுவை புத்தங்களின் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட இந்நாள் காலப்போக்கில் நாடுகளளவில் கொண்டாடப்படும் நாளாக உருவானது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! 'சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே சொந்தமான கையிருப்பு சிரிப்பு என்று நகைச்சுவை பற்றிய பல கவிஞர்களின் வரிகளைப் பாடல்களாக நாம் கேட்டு மகிழ்ந்திருப்போம். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி பன்னாட்டு நகைச்சுவை நாள் கொண்டாடப்படுகின்றது. நாம் மனம்விட்டு சிரிக்கும் போது நம்மை வெறுக்கும் பகைவர்கள் கூட நண்பர்களாக மாறுகின்றார்கள். மனதில் ஒருவித மகிழ்ச்சியும் கலகலப்பான உணர்வும் சிரிக்கும் போது ஏற்படுகிறது. நமது உடலில் ஏற்படும் நோய்களான மூக்கடைப்பு, சளி,இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் அனைத்தும் இம்மியூனோ குளோபுலின் ஏ என்னும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபட்டால் ஏற்படுகின்றன. நாம் வாய்விட்டு மனம் திறந்து சிரிக்கும் போது இந்த இம்மியூனோ குளோபுலின் ஏ என்னும் நோய் எதிர்ப்பாற்றல் நமது உமிழ்நீரில் அதிகளவு சுரக்கப்படுகின்றது. இதனால் உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் உற்பத்தியாகி, நமது உடல்நோய்கள் குணமாக்கப்படுகின்றன. சிரித்து மகிழ்வதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் வந்த நோய்களும் விரைவில் குணமாவதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பல இலட்சம் மலர்கள், பூக்கள் இவ்வுலகில் மலர்ந்து மணம் வீசினாலும் சிரிப்பு தான் சிறந்தது என்பது சிரித்து சிந்தித்து செயல்பட்டவர்களின் கருத்து. அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டி சிரிப்பு, புன்சிரிப்பு என சிரிப்பில் பலவகை உண்டு. மலர்களில் பல வகை இருந்தாலும், ரோஜாவுக்கு என்று தனிச்சிறப்பு இருப்பதுபோல், எத்தனை வகை சிரிப்புகள் இருந்தாலும், புன்னகை புன்சிரிப்புக்கு என்று தனி மரியாதை உள்ளது. புன்னகையும் புன்சிரிப்பும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் பயன்படக்கூடியதாக இருப்பதைக் கண்டு, சிரிப்பை வைத்து வியாபாரம் செய்ய முடியுமென்று சின்சினாடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேரன் மேக்லேட் கண்டறிந்தார். வர்த்தக நிர்வாகக் கல்லூரியைச் சேர்ந்தவராக இருந்த அவர் முதலில் விளம்பரப் படங்களில் நகைச்சுவையைத் திணித்தார். நகைச்சுவை நிரம்பிய விளம்பரங்களில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளும், விளம்பரப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் நம்பகத் தன்மையும் வாடிக்கையாளர்களிடம் வெகுவாக அதிகரித்தன. இன்றளவும் விளம்பரத்தில் வரும் நபர் நகைச்சுவையாக நடித்தால் அந்த விளம்பரம் மக்களிடத்தில் உடனடியாக வரவேற்பைப் பெறத்தான் செய்கிறது. அதுவே நகைச்சுவையின் பலமாக இருக்கிறது.

உலகம் முழுக்க ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் புன்னகைப்பவர்களாக இருக்கிறார்கள். எட்டு வாரக் குழந்தையாக இருக்கும்போதே ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகளே முதலில் சிரிக்கிறார்கள். புன்னகை பெண்களுக்கு இயல்பாக, அவர்களின் உடல்கூறுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. அதோடு இயல்பிலேயே பெண்கள் சமாதானப்படுத்துபவர்களாக இருப்பதால் அவர்களால் அதிகம் புன்னகைக்க முடிகிறது என்பதும் உளவியல் காரணமாக இருக்கிறது. தன் வாழ்நாளில் எவன் ஒருவன் அதிகமாக சிரிக்கின்றானோ அவனது ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகின்றது. உறவுகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் வாய்விட்டுச் சிரிப்பதும் புன்னகை செய்வதும் உதவுகிறது. புன்னகை என்பது நகைச்சுவையோ சிரிப்போ மட்டுமல்ல அது உறவுகளின் துணையோடு வருவது. இதனால் தான் சிலரைப் பார்த்தவுடன் புன்னகைக்கிறோம். ஒரு நகைச்சுவையான திரைப்படம் அல்லது காட்சி எவ்வளவு நகைச்சுவையாக இருந்தாலும் அதைத் தனியே பார்த்து சிரிப்பதைவிட, நண்பர் குழுவுடன் இணைந்து பார்க்கும்போது இன்னும் அதிகமாக இரசித்து சிரிக்கிறோம்.

நாகரீகம் பெற்ற மனிதர்களாக வாழ்த்தொடங்கிய காலத்திலிருந்தே நகைச்சுவைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாலும் பண்டைய கிரேக்கர்கள் தான் முதன்முதலில் நகைச்சுவைகளைச் சொன்னார்கள் என்று  சில அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் அதனை சுமேரியர்களிடம் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிய நகைச்சுவைகளை புகழ்பெற்ற கவிஞர்களும் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்தியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நகைச்சுவைகள் அதன் தற்போதைய பொழுதுபோக்கு வடிவத்தைப் பெறவில்லை அதனைத்தொடர்ந்த காலங்களில் தான் நகைச்சுவை துணுக்குகள், கதைகள் அடங்கிய புத்தகங்கள் வெளிவரத் துவங்கி அது பொழுதுபோக்கு வடிவமாக மாறத்துவங்கியது. சமூக பிரச்சனைகள், அரசியல் மற்றும் சமூக தலைவர்களின் குறைகளையும் அலட்சியப் போக்கையும் இலைமறை காயாக மக்களுக்கு வெளிப்படுத்தவும் காலப்போக்கில் நகைச்சுவைகள் உருவாகின. 1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க எழுத்தாளரான wayne reinagel என்பவரால் இந்த பன்னாட்டு நகைச்சுவை நாள் கொண்டாடத் தொடங்கப்பட்டது. இவரது நகைச்சுவை புத்தங்களின் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட இந்நாள் காலப்போக்கில் நாடுகளளவில் கொண்டாடப்படும் நாளாக உருவானது.

மனஅழுத்தத்தைக் குறைத்து  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நகைச்சுவை உணர்வு பல ஆரோக்கியமான நன்மைகளை உடலுக்கு அளிக்கின்றது. வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகள் இல்லா மனிதனே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் உண்டு. ஆனால் அதிலேயே நமது கவனத்தை வைத்தோமானால் நம்மால் எந்தவிதமான செயல்களையும் சிறப்புடன் செய்ய முடியாது. நகைச்சுவை உணர்வு நம்மில் உள்ள பயம் தயக்கம் என்னும் பனிச்சுவர்களை உடைத்து, ஒற்றுமையுடன் மனித உடன்பிறந்த உறவுடன் வாழ வழிவகுக்கின்றது.,

பன்னாட்டு நகைச்சுவை நாளை கொண்டாடும் நாம் நகைச்சுவை உணர்வை நம்மில் வளர்த்துக் கொள்ள முயல்வோம். கடினம் என்று நாம் கருதும் வார்த்தைகளை மனப்பாடம் செய்வதை விட ஒரு நல்ல நகைச்சுவையை நயம்படக் கூறுவது கடினம். நகைச்சுவை உணர்வு ஒரு கலை. விருப்பம் உள்ளவர்களால் மட்டுமே அதனை கற்க முடியும் கற்பிக்கவும் முடியும்.  நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கும் போது அதிலிருக்கும் நகைச்சுவை துணுக்குகளையும் வாசிக்கத் தொடங்குவோம். அதனைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வோம். எவ்வளவு தான் கடினமான ஆளாக இருந்தாலும் நகைச்சுவை உணர்வு ஒரு மனிதனை இயல்பான மனிதனாக மாற்றிவிடும். மனஅழுத்தங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் அளவை சரியாக்கி நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஊக்கத்தை அளிக்கின்றது நகைச்சுவை. இதனால் இரத்த ஓட்டத்தின் அளவு சீராகி இதயம்  ஆரோக்கியமாகின்றது. நம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

பன்னாட்டு நகைச்சுவை நாளினை சிறப்பிக்கும் நாம்,  மனதார சிரித்து, மற்றவர்களையும் நம்மையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிப்போம். இயந்திரமயமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில் சிரிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் பலர் ஓடி ஓடி உழைக்கின்றனர். விளைவு இலவச இணைப்புக்களாக ஏராளமான நோய்கள் வந்து தாக்குகின்றன. தான் வாழும் சூழலில் உடன் வாழும் மனிதர்களிடத்தில் நமது அன்றாட நிகழ்வுகளை வர்ணித்து மகிழ்வடைவதை மறந்து சிரிப்பை சிகிச்சையாக பெற மையங்களைத் தேடி அலையும் சூழல் உருவாகி விட்டது. உடற்பயிற்சிக் கூடங்கள் போல  சிரிப்பு சிகிச்சை எனப்படும்  நகைச்சுவை தெரபி மையங்கள் பல உருவாகி எப்படி சிரிக்க வேண்டும் எப்போது சிரிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் காலகட்டத்திற்கு நாம் வந்து விட்டோம்.

நகைச்சுவை உணர்வு பற்றி மருத்துவ ஆய்வுகள் பல நிகழ்த்தி அதன் முடிவுகளை பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய இருண்ட சூழலில் இருந்து நம் மனதை திசைதிருப்ப சிரிப்பு உதவுகின்றது. நாம் நலமாக இருப்பதற்கான ஒரு வழியாகவும் அது திகழ்கின்றது என்று கூறியுள்ளார் மேரிலந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சார்ந்த இதய மருத்துவர் மைக்கல் மில்லர் (Michael Miller). மேலும் அதிக மனஅழுத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் நிலை அதிகரிப்பதால் மனஅழுத்தம் ஏற்படும்போது நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பது பதற்றத்தையும் குறைக்க உதவும் என்ற அவர், நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களுக்கு ஆயுள் காலம் கூடுவதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

"சிரிப்பவர்களைக் கண்டால் தனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார் மகாத்மா காந்தி. மூதறிஞர் ராஜாஜி புன்னகை தவழும் முகத்துடன் வேலை செய்பவர்கள் திறமையுடனும் சரியாகவும் ஆவலுடனும் தங்களது வேலையைச் செய்கிறார்கள்' என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் சிரிப்பு மனிதர்களுக்கே உரியது. அதன் அருமையை உணராமல் இருக்க வேண்டாம்' என்றார்.  மனிதர்கள் பொதுவாக தனிமையில் இருக்கும்போது சிரிப்பதை விட, குழுவாக நாலுபேருடன் இணைந்திருக்கும் போதுதான் அதிகம் சிரிக்கக்கூடியவர்கள் என்று ராபர்ட் புரோவின் கண்டறிந்தார். இவர் சிரிப்பதற்கு நகைச்சுவை உணர்வு 15 விழுக்காடும் உறவுகள் 85 விழுக்காடும் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். நகைச்சுவைக் காணொளிகளைப் பார்ப்பதால் ஞாபக சக்தி, கற்கும் ஆற்றல் அதிகரிப்பதாக லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக் கழக ஆய்வு கண்டுபிடித்துள்ளது. நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பது மீள்திறனுக்கும் மிக முக்கியம் என்றார் கொலம்பியா (Columbia) பல்கலைக் கழகத்தின் மனோவியல் பேராசிரியர் ஜார்ஜ் பொனான்னோ (George Bonanno) சந்தோஷமான சூழலில் சந்தோஷமான மனதோடு செய்யும் எந்த வேலையும் ஒவ்வொருவருக்கும் உடல்நலத்தையும், மனநலத்தையும் மேம்படுத்தித் தரவே செய்யும். அதனால்தானோ என்னவோ வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்றார்கள் நம் முன்னோர்கள்.

உடல்மொழியின் மிக முக்கிய அங்கமான சிரிப்பாராய்ச்சியை உலகம் கவனிக்கத் தொடங்கியதும் அதை மருத்துவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். சிரிப்பாராய்ச்சியின் முடிவுகளை வைத்து அமெரிக்க மருத்துவர்கள் ‘சிரிப்பு அறை’ ஒன்றை அமைத்தார்கள். அதில் நகைச்சுவையான புத்தகங்கள், படங்கள், ஒலி நாடாக்களை நிரப்பி, அந்த அறைக்குள் நுழைபவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாதவாறு அமைத்தார்கள். ஒவ்வொரு நோயாளியும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அந்த அறையில் இருக்க வைக்கப்பட்டார்கள். இதற்கு நல்ல பயன் கிடைத்தது. நோயாளிகளின் உடல் நலம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. மருத்துவமனையில் இருக்கும் நாள்கள் குறைந்தன. மிக முக்கியமாக நோயாளிகளைக் கையாள்வது மருத்துவர்களுக்கு மிக எளிமையானதாக இருந்தது.

வயிறு குலுங்கச் சிரிப்பவர்கள் பிராணவாயுவை அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் உண்டாகும் அதிர்வு இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உள் உறுப்புகளை நன்கு இயங்கத் தூண்டுகிறது. உணவு நன்கு செரித்து மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. இதேநிலை தொடரும் போது நமது உடலில் தேங்கும் கரியமில வாயு உடனுக்குடன் நீக்கப்பட்டு உடல் புத்துணர்வு பெறும். நமக்கு வரக்கூடிய நோயின் தன்மை குறையலாம். நாளடைவில் நோய் தீரவும் வழி பிறக்கும். அமெரிக்க நாட்டு பிரபல பத்திரிகைகளில் ஒன்று சண்டே ரெவ்யூ'. இதில் பத்திரிகையாளராகப் பணி புரிந்தவர் நோர்மன் கொவ்சின். இவருக்கு முதுகுத்தண்டு வலி நோய் வந்தது. விரைவில் அந்நோய் குணமாகவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தார். ஓர் பழைய திரைப்படக் கருவியை விலைக்கு வாங்கினார். சிரிப்பை வரவழைக்கக் கூடிய நல்ல நகைச்சுவைப் படங்களை ஓடவிட்டு வாய் விட்டுச் சிரித்தார். கூடவே மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்தார். சிரிப்புப் படத்தை ஒருமுறை பார்த்த பிறகு இவரால் இரண்டு மணிநேரம் வலி இல்லாமல் இருக்க முடிந்தது. சிரிப்பினால் நாளடைவில் இவருக்கு வலி தந்த வியாதி இவரை விட்டு முற்றிலுமாக விலகி ஓடியது. நாம் ஒருநாளைக்கு எத்தனை முறை சிரிக்க வேண்டும் என கணக்கு எதுவும் கிடையாது. ஆனால் ஒரு நாளைக்கு 17 முறை குறைந்தபட்சம் கட்டாயமாகச் சிரிக்க வேண்டும் என மருத்துவ உலகம் கூறுகிறது. அதிகமாகச் சிரிப்பதால் சாதாரணமாக நாம் உட்கொள்ளும் பிராணவாயுவின் அளவு அதிகரிக்கும். இதனால் நம் உடலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் ஆறி விடவும் வாய்ப்பு உண்டாகிறது.

சிரிப்பைப் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அதில் முதல் வகை உடனே சிரிப்பவர்கள், 2. புரியாமல் சிரிப்பவர்கள், 3. புரியாமல் இருந்து விட்டுப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பின்னர் சிரிப்பவர்கள், 4. கேட்டவுடன் சிரிக்காமல் இருந்துவிட்டு தனியாக இருக்கும்போது திடீரெனச் சிரிப்பவர்கள்.

சிரித்த முகத்துடன் இருப்பவர்களுக்கு சமூகத்தில் மரியாதை உடனடியாகக் கிடைத்துவிடுகின்றது. புன்னகைக்கும் முகம், நகைச்சுவை ததும்பும் பேச்சு உடையவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். கவலையை மறக்க மனிதனுக்கு இறைவன் அளித்த வரமே சிரிப்பு. மனிதனைத் தவிர வேறெந்த விலங்கிற்கும் சிரிக்கும் தன்மை கிடையாது. மனிதனுக்கு இருக்கும் கவலைகள் ஏராளம். மனிதன் கவலையைக் குறைக்க பழகுவதைக் காட்டிலும் அதை மறைக்கவே அதிகமாகக் கற்றுக் கொண்டுள்ளான். கவலையை மறைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.

பொருளாதார நெருக்கடிகள், தொற்றுநோய், பொது முடக்கம்,  இணையவழிக்கல்வி, அதிக வேலை, வேலையின்மை என்பன போன்ற பல்வேறு மாற்றங்களால் ஏராளமான மனநல நெருக்கடிகள் உண்டாகின்றன. அவை உடல்நலமின்மை, தூக்கமின்மை, மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றை உருவாக்கி இறுதியில் தற்கொலை எண்ணங்களையும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழலையும் உருவாக்குகின்றன. உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், மனிதனின் மனநெருக்கடிகளைக் காக்கும் தடுப்புகளில் ஒன்று நகைச்சுவை உணர்வு என்று கூறுகின்றார். நமது மனநலத்தைப் பாதுகாப்பதில் நகைச்சுவை உணர்வு மிக மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கும் பொருள்கள் தன்னுள் இருக்கும் அழுத்தத்தை வெளியேற்றுவது போல நமது மனதின் அழுத்தங்களை நகைச்சுவை வழியாக வெளியேற்றுவோம். நகைச்சுவை உணர்வை வளர்த்து நமது மனநலனையும், உடல்  நலனையும் காத்துக்கொள்வோம். அனைவருக்கும் இனிய பன்னாட்டு நகைச்சுவை நாள் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...