திருத்தந்தை முதலாம் ஜான் பால்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருஅவையின் அண்மைக்கால வரலாற்றில் மிகக்குறுகிய காலமே பதவி வகித்தவர் திருத்தந்தை முதலாம் ஜான் பால். 33 நாட்களே பதவியில் இருந்தாலும் எண்ணற்ற உள்ளங்களை கவர்ந்து சென்றவர் இவர். ‘புன்னகைத் திருத்தந்தை’ என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார். ஏனெனில், எப்போதும் சிரித்த முகத்துடனேயே காணப்பட்டவர் இவர். இதுதவிர இவருக்கென்று தனிச்சிறப்புகள் பல உண்டு. இவருக்குப்பின் இத்தாலியில் பிறந்த எவரும் திருத்தந்தையானதில்லை. அதாவது, இதுவரையுள்ள வரலாற்றின்படி, இவரே கடைசி இத்தாலியத் திருத்தந்தை. திருத்தந்தையர் வரலாற்றிலேயே இரண்டு பெயர்களை இணைத்து வைத்துக்கொண்ட முதல் பாப்பிறை இவர்தான். தனக்கு முன்னர் பதவி வகித்த திருத்தந்தையர்கள் 6ஆம் பால் மற்றும் 23ஆம் ஜானை கௌரவிக்கும் விதமாக, தான் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி திருத்தந்தையாக தேர்வுச் செய்யப்பட்டபோது, ஜான்பால் என்ற பெயரை தனக்கென தேர்வு செய்தார். திருத்தந்தை 23ஆம் ஜான் இவரை ஆயராக திருநிலைப்படுத்தியிருந்தார், திருத்தந்தை 6ஆம் பால் இவரை கர்தினாலாக உயர்த்தியிருந்தார்.
Albino Luciani என்ற இயற்பெயர் கொண்ட இத்திருத்தந்தை, மூன்று கோணங்கள் கொண்ட மணிமகுடம், பதவியேற்பு விழாவின்போது தனக்கு சூட்டப்படுவதை மறுத்தார். எளிமையான இத்திருத்தந்தை, ஓர் ஏழைக்குடும்பத்தில் இத்தாலியின் Belluno மாவட்டத்தில் Canale d'Argordo எனுமிடத்தில் 1912ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பிறந்தார். நான்கு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த இவர், தன் 10ஆம் வயதிலேயே கப்புச்சின் துறவு சபையின் அருளாளர் ஒருவரின் மறைபோதகத்தால் கவரப்பட்டு, 11ஆம் வயதிலேயே இளங்குருமடத்தில் இணைந்தார். குருத்துவப் பயிற்சி இல்லத்தில் இருந்தபோது, இவர் இயேசு சபையில் சேர விரும்பி தன் எண்ணத்தை வெளிப்படுத்திட, குருமட அதிபரோ அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. 1935ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தன் 23ஆம் வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1937ல் Belluno மறைமாவட்ட குருமட துணைஅதிபராக நியமிக்கப்பட்டார். அதே குருமடத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1947ல் உரோம்நகர் கிரகோரியன் பல்கலைக்கழகத்திலிருந்து இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
1958ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி திருத்தந்தை 23ஆம் ஜான், அருள்பணி லுச்சியானியை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் வைத்து ஆயராக திருநிலைப்படுத்தினார். Vittorio Veneto என்ற மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்ட இவர், 11 ஆண்டுகள் அம்மறைமாவட்ட வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். 1962ல் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் பங்கேற்கத் துவங்கினார். 1969ஆம் ஆண்டு டிசம்பர் 15ல் வெனிஸ் பெருமறைமாவட்ட முதுபெரும் தலைவராக நியமிக்கப்பட்டார் ஆயர் லுச்சியானி. 1971ஆம் ஆண்டு உரோம் நகரில் இடம்பெற்ற ஆயர்கள் மாநாட்டில் திருத்தந்தையின் தனிப்பட்ட அழைப்பின்பேரில் கலந்துகொண்ட ஆயர் லுச்சியானி அவர்கள், வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவ வேண்டியக் கடமையை வலியுறுத்தினார். இவரை 1973, மார்ச் 5ஆம் தேதி கர்தினாலாக அறிவித்தார் திருத்தந்தை 6ஆம் பால். கர்தினாலாக இருந்தபோது, போர்த்துக்கல் சென்று, அன்னை மரியாவை பாத்திமாவில் காட்சியில் கண்ட மூவருள் ஒருவரான அருள்சகோதரி Lucia dos Santos அவர்களை நேரில் கண்டு உரையாடினார். திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களால் பயன்படுத்தப்பட்டு, திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்களால் ஆயர் லுச்சியானிக்குக் கொடுக்கப்பட்ட ஆயருக்குரிய தங்க சங்கிலியையும் தங்க சிலுவையையும் 1976ஆம் ஆண்டு விற்று மொத்த பணத்தையும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கென வழங்கினார் வெனிஸ் நகர் கர்தினால் லுச்சியானி.
திருத்தந்தை 6ஆம் பால் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து அதே மாதம் 26ஆம் தேதி கூடிய கர்தினால்கள், நான்காவது வாக்கெடுப்பிலேயே அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுத்ததுதான் ஆச்சரியம். கர்தினால்களின் மூன்றில் இருபங்கு வாக்குகளுக்கு மேல் பெற்று தேர்வு செய்யப்பட்டார் இத்தாலியின் வெனிஸ் நகர கர்தினால் அல்பினோ லுச்சியானி. இவர் முதலாம் ஜான் பால் என்ற பெயரை தேர்வுசெய்து கொண்டார். இவர் கர்தினால்களுக்கு ஆற்றிய முதல் உரையில், ‘திருச்சபை இவ்வுலகில் தனக்காக இருக்கவில்லை, மாறாக இவ்வுலகில் சேவையாற்றவே இருக்கிறது’ என்பதை வலியுறுத்திக் கூறினார். தான் பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லப்படுவதை மறுத்தார். ஆனால் திருத்தந்தையைப் பார்க்க விரும்பிய மக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதால் பல்லக்கில் தூக்கி, பெருங்கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்படுவதை அரைமனதாக ஏற்றுக்கொண்டார். செப்டம்பர் 3ஆம் தேதி திருஅவையின் இவ்வுலகத் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட இவர், அதே மாதம் 23ஆம் தேதி திருத்தயர்களின், அதாவது, உரோம் ஆயர் என்ற முறையில் உரோம் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித இலாத்தரன் பெருங்கோவில் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்.
செப்டம்பர் 28ஆம் தேதி இரவு, அதாவது தான் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 நாட்களுக்குப்பின் தன் படுக்கையில் வாசித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பால் காலமானார் திருத்தந்தை முதலாம் ஜான்பால். வழிகாட்டும் விண்மீன்போல் திருஅவையில் திடீரென்று தோன்றி மறைந்தார் திருத்தந்தை முதலாம் ஜான்பால். இஸ்பெயின், Zaire, லெபனான் ஆகிய நாடுகள் மூன்று நாள் துக்கத்தை அறிவித்தன. 1978ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற அடக்கத் திருப்பலிக்குப்பின் அவரின் உடல் அதே பெருங்கோவில் அடிநிலக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இளவயதிலேயே மிகவும் ஏழ்மை நிலையை அனுபவித்தார் இத்திருத்தந்தை. கண்ணாடி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு சாதாரண தொழிலாளியின் மகனாகப் பிறந்த திருத்தந்தை முதலாம் ஜான் பால், ஏழைகளின் தந்தையாகவும் நண்பனாகவும் செயல்படுவார் என ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். அவரும் அந்த வழியில்தான் தன் வாழ்வைத் துவக்கினார். ஆனால் இறைவனின் திட்டங்கள் வித்தியாசமானவைகளாக இருந்தன.
1990ஆம் ஆண்டே 4 கர்தினால்கள் உட்பட 226 பிரேசில் நாட்டு ஆயர்கள், திருத்தந்தை முதலாம் ஜான் பாலை புனிதராக அறிவிப்பதற்கான பணிகள் துவக்கப்படவேண்டும் என திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களுக்கு நேரடியாக விண்ணப்பம் ஒன்றை விடுத்தனர். 2003ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி முதலாம் ஜான் பாலை இறையடியார் என அறிவித்தார் திருத்தந்தை 2ஆம் ஜான் பால். அதுவே புனிதர் பட்ட நிலைகளுக்கான முதல் படி. 2017ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இறையடியார் முதலாம் பாலின் வீரத்துவ பண்புகளுக்காக அவரை வணக்கத்துக்குரியவர் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வணக்கத்துக்குரிய திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றினை 2021ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அங்கீகரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் திருப்பலியில் அவரை அருளாளராக அறிவித்தார்.
1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இரவு திருத்தந்தை முதலாம் ஜான் பால் இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து கர்தினால்களால் அடுத்த திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டவர், போலந்தைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொய்த்தேவா. இந்த திருத்தந்தை உலகின் அனைத்து மக்களுக்கும், ஏன் நம் வத்திக்கான் வானொலி நேயர்களுக்கும் மிகவும் பழக்கமானவர். இருமுறை இந்தியா வந்துள்ளார். இத்திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.
No comments:
Post a Comment