இந்தியாவின் ஜபல்பூர் ஆயர்மீது மதமாற்ற குற்றச்சாட்டு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் ஜபல்பூர் கத்தோலிக்கத் தலத்திருஅவை நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லமொன்றில் மதமாற்றம் நிகழ்ந்ததாகக் கூறி அம்மறைமாவட்ட ஆயர் Gerald Almeida மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் Priyank Kanoongo மே 30, இச்செவ்வாயன்று, இந்த வழக்கைத் தொடுத்துள்ள வேளை, அவ்வாதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகம் இந்து குழந்தைகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக அவ்வழக்கில் குற்றம் சுமத்தியுள்ளார் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்டத்திலுள்ள இந்த ஆதரவற்றோர் இல்லத்தை ஜபல்பூர் மறைமாவட்டம் நிர்வகித்து வருவதால், இந்த வழக்கில் ஆயரின் பெயரை Kanoongo சேர்த்துள்ளதாகவும் அச்செய்திக் கூறியுள்ளது.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த இவ்வாதரவற்றோர் இல்லத்தில் பணிபுரிந்து வருபவரும், கார்மேல் அன்னை சபையைச் சேர்ந்தவருமான அருள்சகோதரி ஸ்டெல்லா அவர்கள், "இது முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டு" என்று யூக்கான் செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டு இந்த ஆதரவற்றோர் இல்லத்தின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் முன் திட்டமிடப்பட்ட நடவடிக்கையைத் தவிர வேறில்லை என்றும், இந்திய இரயில்வே அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, 2005-ஆம் ஆண்டு முதல் இந்த மையம் அனைத்து அரசு விதிகளுக்கும் உட்பட்டே செயல்பட்டு வருகிறது என்றும் உரைத்துள்ளார் அருள்சகோதரி ஸ்டெல்லா.
இந்த ஆதரவற்றோர் இல்லம் இப்பகுதியிலுள்ள இரயில் நிலையங்களில் இருந்து மீட்கப்பட்ட 47 குழந்தைகளைக் கவனித்து வருகிறது. மேலும் இங்குதான் அண்மையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தியது. (UCAN)
No comments:
Post a Comment