Friday 2 June 2023

புனித திருத்தந்தை 23ஆம் ஜான்

 

புனித திருத்தந்தை 23ஆம் ஜான்



வயது முதிர்ந்தவராக இருந்தாலும், 23ம் ஜான்தான் அடுத்த திருத்தந்தையென பலர் எதிர்பார்த்தனர். ஏனெனில் அத்தேர்வில் பங்குபெற்ற 51 கர்தினால்களுள் 24 கர்தினால்கள் இவரைவிட வயதில் பெரியவர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடவுளின் வழிகள் மிகவும் வித்தியாசமானவை. நாளை என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது. நாம் எதிர்பார்ப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கின்றது. அதுபோல்தான் திருத்தந்தை 23ம் ஜானின் வாழ்விலும் நடந்தது. வயதான காலத்தில், அதுவும் பெரிய பின்னணி இல்லாமல் திருத்தந்தையான இவர் என்ன செய்யப்போகிறார், அல்லது இவரால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களே இவர் பொறுப்பேற்றபோது இருந்தது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கினார் இத்திருத்தந்தை. திருஅவை ஓட்டத்தில் ஒரு புதிய பாதையைக் காட்டியது மட்டுமல்ல, திருத்தந்தையர்களிலேயே அதிக மக்களால் அன்பு கூறப்பட்டவராக நோக்கப்படுகிறார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுலோ, அதிக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு மக்களை சென்று பார்வையிட்டு மக்களால் அதிகம் அன்பு கூறப்பட்டவரானார். ஆனால் நம் திருத்தந்தை 23ஆம் ஜானோ, எந்த நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளாமலேயே உரோம் நகரில் அமர்ந்துகொண்டே அனைவரையும் தன் அன்பாலும் கருணை உள்ளத்தாலும் கவர்ந்தார். இவர் 1881ஆம் ஆண்டு வடஇத்தாலியின் பெர்கமோ என்னும் பகுதியைச் சார்ந்த சொத்தோ இல் மோந்தே எனும் கிராமத்தில் ஓர் ஏழைக்குடும்பத்தில் 13 குழந்தைகளுள் நான்காவதாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்காலி. இறையியல் படிப்பை முடித்து, 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், பெர்கமோ மறைமாவட்ட ஆயரின் செயலராகப் பணியாற்றினார். அதே சமயம் பெர்கமோ குருமடத்தில் திருஅவை வரலாறு கற்பித்தார். முதலாம் உலகப்போர் காலத்தில் இராணுவத்தில் ஆன்மிக குருவாக சேவையாற்றினார். 1921ஆம் ஆண்டு திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் அவர்கள், இவரை விசுவாசப் பரப்புதல் அவையின் இத்தாலிய தேசிய இயக்குனராக நியமித்தார்.

  திருத்தந்தை 23ஆம் ஜான், அருள்பணியாளராக இருந்தபோது வரலாற்றில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். மிலான் நூலகத்தில் இவர் ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தபோது, அந்த நூலக பொறுப்பாளர் Ambrogio Damiano Achille Ratti பின்னாளில் திருத்தந்தை 11ஆம் பயஸ் ஆனார். திருத்தந்தை 11ஆம் பயஸ் திருஅவையின் இவ்வுலகத் தலைவராக பதவியேற்றபின், அருள்பணியாளர் ரொங்காலியை அதாவது பின்னாள் திருத்தந்தை 23ம் ஜானை, பேராயராக உயர்த்தி திருப்பீட வெளியுறவுத்துறைப் பணியில் புகுத்தினார். பேராயர் ரொங்காலியும் பல்கேரியா, துருக்கி, கிரேக்கம் ஆகியவைகளில் பணியாற்றினார். தன் பணிக்காலத்தின்போது ஏனைய கிறிஸ்தவ சபைகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டார். பிரான்சிலும் திருப்பீடப் பிரதிநிதியாக சேவையாற்றியுள்ள இவரை 1953ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தி, வெனிஸ் நகரின் முதுபெரும் தலைவராகவும் அறிவித்தார் திருத்தந்தை 12ஆம் பயஸ். 1958ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி திருத்தந்தை 12ஆம் பயஸ் உயிரிழந்தபின், அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுக்க 51 கர்தினால்கள் கூடினர். கம்யூனிச அரசுகள் அனுமதிக்காததால்  இரு கர்தினால்கள் வரமுடியவில்லை. 77 வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும், மிகவும் நகைச்சுவையாக உயிர்த்துடிப்புடன் உரையாடும் கர்தினால் ரொங்காலியும் இத்திருத்தந்தை தேர்வில் கலந்துகொண்டார்.

   வயது முதிர்ந்தவராக இருந்தாலும், இவர்தான் அடுத்த திருத்தந்தையென பலர் எதிர்பார்த்தனர். ஏனெனில் அத்தேர்வில் பங்குபெற்ற 51 கர்தினால்களுள் 24 கர்தினால்கள் இவரைவிட வயதில் பெரியவர்கள். திருத்தந்தை 23ம் ஜான், வத்திக்கான் வெளியுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயர் உணர்ந்தவர். பிரெஞ்ச், பல்கேரியன், ருஷ்யம், துருக்கியம், கிரேக்கம் ஆகிய மொழிகள் அவருக்குத் தெரியும். ஆன்மீகப் பலமும் பிறரன்பும் அவரின் சிறப்பு பண்புகளாக இருந்தன. ஆகவே இவர்தான் வருவார் என்ற பலரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கீழை வழிபாட்டுமுறை, மற்றும் மேற்கத்திய திருஅவைகளை மட்டுமல்ல, அனைத்து மக்களையும் அணைத்துச் செல்பவராக திருத்தந்தை 23ஆம் ஜான் இருந்தார். அனைத்துப் பிரிவினரையும் இணைத்துக் கொண்டுவரும் பாலமாக அவர் இருந்தார். அக்டோபர் 28ஆம் தேதி 1958ஆம் ஆண்டு இவர் தேர்வு செய்யப்பட்டபோது 23ஆம் ஜான் என்ற பெயரை எடுத்துக்கொண்டார்.

ஜான் என்ற பெயரை எடுத்துக் கொண்டோமானால் பல ஆச்சரியங்கள் சூழ்ந்திருக்கும். 23ஆம் ஜான் என்ற பெயரில்  ஏற்கனவே ஓர் எதிர் திருத்தந்தை, 1400ஆம் ஆண்டு முதல் 1415 வரை திருத்தந்தையர்கள் 9ஆம் பொனிபாஸ், ஏழாம் இன்னசென்ட், 12ஆம் கிரகரி ஆகியோரை எதிர்த்து தன்னையே திருத்தந்தையாக அறிவித்து நடந்துள்ளார். அது மட்டுமல்ல, திருத்தந்தையர் வரலாற்றில் 20ஆம் ஜான் என்று ஒரு திருத்தந்தையே இல்லை. இப்பெயரை யாரும் பயன்படுத்தவில்லை. மேலும் ஜான் என்ற பெயர்தான் அதிக திருத்தந்தையர்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட பெயர். யேசுவுக்கு நெருக்கமாயிருந்தவர்களுள் திருமுழுக்கு ஜானும், நற்செய்தியாளர் ஜானும் முக்கியமானவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தவர்களுள் இரு ஜான் முக்கியமானவர்கள், மற்றும் இப்பெயரே அதிக அளவில் திருத்தந்தையர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை நம் திருத்தந்தை 23ம் ஜானும் காரணமாகக் கூறினார். அதேவேளை, சில வரலாற்று ஆசிரியர்கள், திருத்தந்தை 23ஆம் ஜானின் தந்தையின் பெயரும் ஜான், திருத்தந்தை திருமுழுக்குப் பெற்ற கோவிலும் புனித ஜானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர். இவர் பொறுப்பேற்று, தூய பேதுரு பெருங்கோவில் முகப்பில் தோன்றியபோது மக்களின் ஆரவாரம் வானைப் பிளந்தது என்கின்றனர். இவரின் முதல் ஆசீர்வாதம் வரலாற்றிலேயே முதன்முறையாக தொலைக்காட்சிவழி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. புனித சார்லஸ் பொரொமேயோவால் அதிகம் கவரப்பட்டிருந்த இந்த திருத்தந்தை,  அப்புனிதரின் திருவிழாவான நவம்பர் 4ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். தன் முடிசூட்டு விழாவில், பாரம்பரிய வழக்கு முறையில் இருந்து விலகி, இவரே மறையுரையை வழங்கினார். தான் ஒரு நல்ல ஆயனாக செயல்பட விரும்புகிறேன் என்பதை வலியுறுத்திக் கூறினார். அந்த ஆண்டு, அதாவது 1958ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவின்போது உரோம் நகரின் சிறைகளைச் சென்று பார்வையிட்டார். சிறைக்கைதிகளோடு உரையாடினார். இந்த பழக்கம் 1870ம் ஆண்டு உரோம் நகர் ஆக்கிரமிக்கப்படும் வரை திருத்தந்தையர்களால் பின்பற்றப்பட்டுவந்த ஒன்றுதான். அப்பழக்கத்திற்கு இத்திருத்தந்தை உயிர்கொடுத்தார். மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்தார். புனித வியாழன் வழிபாட்டின்போது இவரே கீழிறங்கிவந்து, இயேசு ஆற்றியதன் நினைவாக, பன்னிருவரின் கால்களைக் கழுவினார். புனித வெள்ளி சிலுவைப்பாதையில் மக்களோடு நடந்து சென்றார். 

  நேயர்களே! இத்திருத்தந்தை 23ஆம் ஜான் புகுத்திய நல்வழிகளைத்தான், பின்னர் வந்த திருத்தந்தை 2ஆம் ஜான் பால் பின்பற்றினார் என்கின்றனர் வல்லுனர்கள். இத்திருத்தந்தை 23ஆம் ஜான் பற்றிப் பேசவேண்டுமானால், நாட்கள் போதாது. அவரின் நிர்வாக மற்றும் பிறரன்புப் பணிகள் குறித்து நம் அடுத்த வார நிகழ்ச்சியில் நோக்குவோம்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...