திருத்தந்தை 6ஆம் பால்- வரலாறு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தை 23ஆம் ஜான் துவக்கி வைத்த 2ஆம் வத்திக்கான் சங்கக்கூட்டத்தை வழிநடத்தி நிறைவு செய்த, மற்றும் உலகின் பல நாடுகளுக்கும் விமானம் மூலம் மேய்ப்புப்பணி சார்ந்த திருப்பயணங்களை துவக்கிவைத்த ஒரு திருத்தந்தையைக் குறித்து இன்று நாம் காண உள்ளோம்.
திருத்தந்தை 6ஆம் பால் 1897ஆம் ஆண்டு வடஇத்தாலியின் Lombardy பகுதியிலுள்ள Brescia மாவட்டத்தின் Concesio என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் Giovanni Battista Enrico Antonio Maria Montini. இவரின் தந்தை ஒரு பிரபல வழக்குரைஞராகவும்; அரசியல்வாதியாகவும் இருந்தார். 1920ஆம் ஆண்டு தன் 23ஆம் வயதில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், இரண்டே ஆண்டுகளில் திருப்பீடச் செயலகத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார். பின்னாள் திருத்தந்தை 12ம் பயஸ், திருப்பீடச்செயலராக பணியாற்றியபோது 1937ல் திருப்பீடத் துணைச் செயலராக நியமிக்கப்பட்டார் இவர். 1944ல் திருஅவையின் உள்விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவம் நியமிக்கப்பட்டார் Montini. 1950ஆம் ஆண்டின் புனித ஆண்டு கொண்டாட்டங்கள், 1954ல் மரியன்னை ஆண்டு கொண்டாட்டங்கள் போன்றவைகளை சிறப்புடன் ஏற்பாடு செய்ததில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. 32 ஆண்டுகள் திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றிய இவரை 1954ல் இத்தாலியின் மிலான் நகர் பேராயராக நியமித்தார் திருத்தந்தை 12ஆம் பயஸ். இருப்பினும் இவரை கர்தினாலாக திருத்தந்தை 12ஆம் பயஸ் உயர்த்தவில்லை. 1958ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திருத்தந்தை 23ஆம் ஜானின் முதல் நடவடிக்கைகளுள் ஒன்று, பேராயர் Montiniயை கர்தினாலாக உயர்த்துவதாக இருந்தது. ஆம், 1958ஆம் ஆண்டு டிசம்பர் 15ந்தேதி இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
திருத்தந்தை 23ஆம் ஜான் 1963ஆம் ஆண்டு ஜூன்மாதம் 3ஆம் தேதி உயிரிழந்தபோது, அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான கர்தினால்களின் கூட்டத்தில் இருவித பிரிவுகள் இருந்தன. திருத்தந்தை 23ஆம் ஜானின் சீர்திருத்தங்களை ஏற்க மறுத்த ஒரு கூட்டம், அவரின் சீர்திருத்தங்கள் தொடரவேண்டும் என விரும்பிய இன்னொரு கூட்டம். தொடர வேண்டும் என விரும்பிய குழுவே வெற்றியும் பெற்றது. ஆம், சீர்திருத்தங்களை ஆதரித்த கர்தினால் Montini ஜூன்மாதம் 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி திருத்தந்தையாக முடிசூட்டப்பட்ட புதிய திருத்தந்தை 6ஆம் பால், ஒன்பது மொழிகளில் தன் அருளுரையை வழங்கினார். திருத்தந்தை ஒருவர் மணிமகுடம் சூட்டப்பட்டது அதுவே கடைசி முறையாகும். அவர் தனக்கு சூட்டப்பட்ட மணிமகுடத்தை அமெரிக்க தலத்திருஅவைக்கு வழங்கி, அதிலிருந்து பெற்ற பணத்தை உலகின் ஏழைகளுக்கென அளித்தார். அந்த மணிமகுடம் இன்றும் வாஷிங்டன் அமலஉற்பவ அன்னை தேசிய திருத்தலத்தில் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ளது. திருஅவையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு, குறிப்பாக தலமொழியில் திருப்பலி, வழிபாடு, கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைப்புக்கான முயற்சிகள் ஆகியவைகளுக்கு வழிவகுத்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை சிறப்பான முறையில் வழிநடத்தி 1965ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நிறைவுக்கு கொணர்ந்தார் திருத்தந்தை 6ஆம் பால்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடந்துகொண்டிருந்தபோதே, 1964ஆம் ஆண்டு ஜனவரி மாத துவக்கத்தில் புனித பூமிக்கும் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை 6ஆம் பால். கி.பி. 62ல் முதல் திருத்தந்தை புனித பேதுரு யெருசலேமிலிருந்து வெளியேறியபின், திருத்தந்தை ஒருவர் அம்மண்ணில் காலடி பதித்தது 1964ல்தான். கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து 1054ல் பிரிந்த கீழை ரீதி கிறிஸ்தவ ஒன்றிப்பு
சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் Athenagoras அவர்களை இப்பயணத்தின்போது சந்தித்து ஆரத் தழுவி நட்புணர்வை வெளிப்படுத்தினார் திருத்தந்தை. அக்கிறிஸ்தவ சபை கத்தோலிக்க திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததையும் அகற்றினார். அனைத்துலக நற்கருணை மாநாட்டையொட்டி 1964 டிசம்பரில் மும்பை வந்தார். 1965 அக்டோபரில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க்குக்கும் சென்றார். இங்கு ஐக்கிய நாட்டு சபை கட்டிடத்தில் இவர் பிரெஞ்ச் மொழியில் ஆற்றிய உரையின்போது, ‘போர் என்பதே இனிமேல் வேண்டாம்’ என்று உறுதியாக கூறியது பிரபலமானது. தன் பதவிக்காலத்தின் போது பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களை வத்திக்கானிலும், தன் திருப்பயணங்களின்போது அந்தந்த நாடுகளிலும் சந்தித்தார் பாப்பிறை. 1969ஆம் ஆண்டு ஜெனிவா சென்று உலக கிறிஸ்தவ சபைகளின் அவைக் கூட்டத்தில் உரையாற்றினார். திருஅவையை வழி நடத்தியக் காலக்கட்டத்தில் ஜோர்தான், இஸ்ரயேல், லெபனன், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, போர்த்துக்கல்லின் பாத்திமா, துருக்கி, கொலம்பியா, Bermuda, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா, உகாண்டா, ஈரான், பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், Samoa தீவு, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, Hong Kong, இலங்கை ஆகிய இடங்களுக்கு திருப்பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை 6ஆம் பால். இவர் திருஅவையை வழிநடத்திய 15 ஆண்டுகளில் 38 பேரை அருளாளர்களாகவும், 84 பேரை புனிதர்களாகவும் அறிவித்துள்ளார். இவர் 1970ஆம் ஆண்டில் புனிதர்கள் அவிலா திரேசாவையும், சியென்னாவின் கத்தரீனாவையும் திருஅவையின் மறைவல்லுனர்களாக அறிவித்தார். 1967ல் வெளியிடப்பட்ட Populorum progressio சுற்றுமடல் உட்பட, இவரின் 7 மடல்களுள் மிகவும் பிரபலமானது, மனித வாழ்வு குறித்த Humanae vitae (1968 ஜூலை 25) என்ற சுற்றுமடலாகும்.
திருத்தந்தை 6ஆம் பாலின் வாழ்வின் கடைசி காலக்கட்டத்தில் அவருக்கு மிகுந்த மனக்கவலையை வழங்கிய ஒரு நிகழ்வு இடம் பெற்றது. இத்தாலியின் முன்னாள் பிரதமரும், திருத்தந்தையின் பள்ளிக்கால நண்பருமான Aldo Moro சிலரால் கடத்தப்பட்டு 1978ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி கொலைச் செய்யப்பட்டார். திருத்தந்தை 6ஆம் பால் கலந்துகொண்ட கடைசி பொது நிகழ்ச்சி, புனித ஜான் இலாத்ரன் பெருங்கோவிலில் அந்த முன்னாள் பிரதமரின் சவ அடக்கத் திருப்பலியில் பங்கேற்றதாகும். 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் மட்டுமே திருத்தந்தைக்கான தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற புதிய நியதியை புகுத்தியவர் திருத்தந்தை 6ஆம் பாலே. அனைத்து ஆயர்களும் தாங்களே முன்வந்து தங்களின் 75ஆம் வயதில் தங்கள் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகும் கடிதத்தை திருஅவை தலைமைப்பீடத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தவரும் இவரே. இவர் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி, திருத்தந்தையர்களின் Castle Gandolfo கோடை விடுமுறை இல்லத்தில் காலமானார். இவரின் விருப்பப்படியே இவர் உடல் தூய பேதுரு பசிலிக்கா அடிமட்டக் கல்லறையில் நிலமட்டத்தில் புதைக்கப்பட்டது. இவரை 2014ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அருளாளராகவும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி புனிதராகவும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நேயர்களே! திருத்தந்தை 6ஆம் பாலுக்குப்பின் பொறுப்பெற்றவர் திருத்தந்தை முதலாம் ஜான் பால். மிகக் குறுகியக் காலமே திருஅவையை வழிநடத்திய இந்த புன்னகை திருத்தந்தையைக் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.
No comments:
Post a Comment