அதிகரித்து வரும் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை
மெரினா ராஜ் – வத்திக்கான்
உலகளவில் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார் ஏறக்குறைய 16 கோடி பேரும் இத்தாலியில் 3,36,000 சிறாரும் குழந்தைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், 14 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களில் ஐந்தில் ஒருவர் குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் Save the Children அமைப்பின் இயக்குனர் Raffaela Milano.
ஜூன் 9 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள
Save the Children இத்தாலிய-ஐரோப்பிய செயல்பாடுகளுக்கான இயக்குனர் Raffaela Milano அவர்கள், 58 ஆயிரம் சிறாரின் பள்ளிப்படிப்பு மற்றும் மன நிலை இதனால் பாதிக்கப்டும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்ப வறுமையினால் அதிகரித்து வரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆரம்ப பள்ளியை விட்டு மாணவர்கள் வெளியேறுவதை அதாவது இடைநிற்றலைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் Raffaela.
போர், ஆயுத மோதல்கள், கோவிட்-19 பெருந்தொற்று, காலநிலை நெருக்கடி ஆகியவற்றின் தாக்கத்தை சமாளிக்க புலம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் வறுமையில் மூழ்கிய குடும்பங்களில் குழந்தைத் தொழிளாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், ஐரோப்பாவில் ஒரு வருடத்தில், 2,00,000 க்கும் அதிகமான பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் Raffaela.
ஜூன் 12 ஆம் நாள் திங்களன்று சிறப்பிக்கப்படவிருக்கும் 22ஆவது அனைத்துலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இவ்வறிக்கையானது சிறாரின் எதிர்காலத்திற்கு உறுதி அளித்தல், குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தின் அடிப்படை உரிமை மீறல் குறித்த எச்சரிக்கையையும் எடுத்துரைத்துள்ளது.
No comments:
Post a Comment