Saturday, 24 September 2022

ROBERT JOHN KENNEDY: கொல்லி மலை

ROBERT JOHN KENNEDY: கொல்லி மலை:   பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன கிறிஸ்டோபர் பிரான்...

ROBERT JOHN KENNEDY: அகத்தியமலை (பொதிகைமலை)

ROBERT JOHN KENNEDY: அகத்தியமலை (பொதிகைமலை):   பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கூறுகின்றனர். மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது கிறிஸ்டோபர்...

ROBERT JOHN KENNEDY: ஏலக்காய் மலை

ROBERT JOHN KENNEDY: ஏலக்காய் மலை:   ஏலக்காய் மலை வனங்களும், மலைகளும் மனிதகுலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனநிலைக்கு நாம் மாறவேண்டும் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கா...

ROBERT JOHN KENNEDY: ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை

ROBERT JOHN KENNEDY: ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை:   ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை கென்யா மலையில் தற்போது உள்ள 11 சிறிய பனி ஆறுகள் வேகமாகச் சிறியதாகி வருவதாகவும், இவை 2025ஆம் ஆண்டு...

ROBERT JOHN KENNEDY: சேர்வராயன் மலை

ROBERT JOHN KENNEDY: சேர்வராயன் மலை:   சேர்வராயன் மலை கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையில், புகழ்பெற்ற சுற்றுலா மையமாக ஏற்காடு மலை அமைந்துள்ளது. கிறிஸ்டோபர்...

காடுகளால் சூழப்பட்ட வால்பாறை

 


கிராமிய வசீகரத்துடன், காடுகளால் சூழப்பட்டதாக, தேயிலைத் தோட்டங்களும் காபி பண்ணைகளும் ஒன்றுசேர்ந்து கண்கவர் காட்சியை உருவாக்கும் வால்பாறை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அழகான, மலைப்பாங்கான குக்கிராமத்தில், அனைத்து சலசலப்புகளிலிருந்தும் விலகி ஓர் அமைதியான, மறக்கமுடியாத நேரத்தைச் செலவிட விரும்புவோருக்கு வால்பாறை சிறந்த இடம். விலைமதிப்பற்ற பசுமை பரவல், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்த பாதைகள், நம் நிம்மதியின் தேடலுக்கு நிறைய உதவுவதாக உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள வால்பாறை, கிராமிய வசீகரத்துடன், காடுகளால் சூழப்பட்டதாக, தேயிலைத் தோட்டங்களும் காபி பண்ணைகளும் ஒன்றுசேர்ந்து கண்கவர் காட்சியை உருவாக்குகின்றது. மேல்சோலையாறு அணை, நீராறு அணை, ஆழியாறு அணை, குரங்கு அருவி, பாலாஜி கோவில் (கரிமலை), வேளாங்கண்ணி ஆலயம் (கரிமலை), பஞ்ச முக விநாயகர் கோயில் (சோலையாறுக்கு அருகில்) ஆகியவை நம்மை பார்க்க ஈர்க்கும் சில முக்கிய இடங்கள். மலையேறுபவர்களுக்கு, வால்பாறை ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வால்பாறை மலைத்தொடர், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடமாகவும் உள்ளது. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம், வால்பாறையின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாகும். சோலைமந்தி, கேளையாடு (குரைக்கும் மான்கள்), காட்டுப்பன்றிகள், நீலகிரி மற்றும் பொதுவான மந்தி (லங்கூர்)  போன்றவற்றை இங்கு காணலாம். மலை இருவாட்சி, மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி ஆகியவை இங்கே இருப்பதால், பறவை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகவும் வால்பாறை உள்ளது.

காடுகளால் மூடப்பட்ட குறுகலான வளைந்த பாதை சின்னக்கல்லார் அருவிக்குச் செல்கிறது. இந்த இடம் மூன்றாவது அதிக மழையைப் பெறும் பெருமைக்குரியது.  மழையின் காரணமாக மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் சின்னக்கல்லாறு, பசுமையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. (சுற்றுலாத் துறை,தமிழ்நாடு அரசு)

திருப்பதியின் திருமலை

 


புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், திருமலையின் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் உள்ளது

இனியது இயற்கை - திருப்பதியின் திருமலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆந்திர மாநிலத்தின் திருமலை என்பது திருப்பதி நகரத்திலுள்ள திருவேங்கடமலைப் பகுதியைக் குறிப்பதாகும். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை தமிழ்ச் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.

திருமலை, கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைச் சிகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேசாலம்- வெளிகொண்டா மலைத் தொடரில் அமைந்துள்ள இம்மலையைச் சுற்றிலும் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி,அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்திரி மற்றும் வெங்கடாத்திரி என ஏழு சிகரங்கள் உள்ளன. புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசல பெருமாள் திருக்கோயில் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் உள்ளது. திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரு பாதைகள் உள்ளன.

திருப்பதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் தென்மேற்கில் இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜய நகர பேரரசரின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.

 

Friday, 23 September 2022

மேகங்கள் ஆட்சிபுரியும் மேகமலை

 


மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், மேகமலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை, நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள மலைவாழிடங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், இந்த மேகமலை.

பசுமையான நிலபரப்புடன், பெரிய பெரிய மரங்களுடன் இந்தப் பகுதி காணப்படுகிறது. மிக அழகான, சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களைக்  காண, கண்கள் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என பல இயற்கை அழகுகள் கொட்டிக்கிடக்கும் பகுதி மேகமலை.

18 ஊசி வளைவுகளில் ஆர்வம் மிகுந்த பயணத்திற்கு பிறகு இங்கு வந்தவுடன், இந்த இடம் எவ்வளவு பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது என்பதை அறியமுடியும். மூடுபனி இங்கு நிரந்தரமாக இருப்பதுபோல் தெரிகிறது. கட்டடங்களின் பெருக்கத்தால் தீண்டப்படாத மேகமலை, ஒரு சிறப்புக் கவர்ச்சியில் திளைக்கிறது. எப்போதும் இதமான காலநிலை, அமைதியான காற்று, மற்றும் கண்கவர் காட்சிகள், இதனை மிகவும் விரும்பப்படும் இடமாக மாற்றுகின்றன. வனவிலங்கு சரணாலயம், மேகமலை அருவி, சுருளி அருவி, அணைகள், மகாராஜா மெட்டு காட்சிமுனை, வெள்ளிமலை, ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டங்கள் ஆகியவை, இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும்.

மணலார் அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் மூச்சடைக்கக்கூடிய காட்சி, மற்றும் அழகான குக்கிராமங்களின் பரந்த காட்சியை அனுபவிக்க, நெடுஞ்சாலை அணைக்கும், சுருளி தீர்த்தத்திற்கும் சென்று வரலாம். எந்த பருவமாக இருந்தாலும் தண்ணீர் குறையாமல் கொட்டும் மேகமலை அருவி, ஒரு காட்சி விருந்தாகும். யானை, காட்டெருது, புள்ளிமான் போன்ற காட்டு விலங்குகளையும் இங்கு காணலாம். (விகடன் & சுற்றுலாத் துறை, தமிழ்நாடு அரசு)


கேரள வயநாடு மலைகள்

 


ஏறக்குறை 300 மீட்டர் உயரத்திலிருந்து விழும் மூன்று நிலை அருவியான மீன்முட்டி நீர்வீழ்ச்சி, வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரிய அருவியாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தமிழகத்துக்கு வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது வயநாடு எனும் மலை சூழ் பசுமை மாவட்டம். இந்த மாவட்டம் அடர்ந்த காடுகளும், பச்சை பசேலென்று படர்ந்திருக்கும் சூழல்களையும் கொண்டது. இங்குக் கண்டு இரசிப்பதற்கு, முக்கியமாக மீன் முட்டி நீர்வீழ்ச்சி, சூச்சிப்பாறா நீர்வீழ்ச்சி, செம்பரா சிகரம், பானசுரா அணைக்கட்டு, காட் காட்சி முனை, முத்தங்கா காட்டுயிர் பூங்கா, எனப் பல உள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்திலிருக்கும் செம்பரா சிகரம் வயநாட்டின் தென்பகுதியிலுள்ள மேப்பாடி அருகில் அமைந்துள்ளது. இது இந்தப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான சிகரம் ஆகும்.

வடநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கல்பேட்டாவிற்கு அருகில் அமைந்துள்ளது நீலிமலை. நீலிமலை உச்சியிலிருந்து மீன்முட்டி அருவிகள் மற்றும் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளைக் காண்பது சிலிர்ப்பூட்டும் காட்சிகளாகும். நீலிமலையில் அமைந்துள்ள, கண்கவர் மீன்முட்டி நீர்வீழ்ச்சி ஊட்டியையும் வயநாட்டையும் இணைக்கும் முக்கியச் சாலையிலிருந்து 2 கி.மீ. நடந்து செல்லும் துரத்தில் உள்ளது. ஏறக்குறைய 300 மீட்டர் உயரத்திலிருந்து விழும் மூன்று நிலை அருவியான இது வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரிய அருவியாகும்.

வயநாட்டில் வருகையாளர்களை ஈர்க்கும் மற்றுமொரு நீர்வீழ்ச்சி செதலயம் நீர்வீழ்ச்சியாகும், இது வயநாட்டின் சுல்தான் பத்தேரிக்கு அருகில் அமைந்துள்ளது. மீன்முட்டியை ஒப்பிடும்போது இது சிறிய நீர்வீழ்ச்சியாகும்.

பட்சபாதாளம் என்பது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரம்மகிரி குன்றுகளில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது. இங்குள்ள மிகவும் ஆழமான குகைகள், பல்வேறு காட்டுப் பறவைகள், விலங்குகள் மற்றும் வெவ்வேறு வகையான தாவரங்கள் ஆகியவற்றின் வாழிடமாக உள்ளன.

வயநாடு மாவட்டத்தின் தென்பகுதியில் கரலாடு ஏரிக்கு அருகில் அமைந்துள்ள வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம், காந்தன்பாரா நீர்வீழ்ச்சி, வயநாடு வனவிலங்கு சரணாலயம், நீலிமலா காட்சி முனை, குருவத்வீப், எடக்கல் குகைகள் எனப் பலவற்றைத் தன்னுள்ளே அடக்கி அழகுடன் நிற்கிறது வயநாடு மலை.

 

Tuesday, 13 September 2022

பறம்பு மலை

 

கபிலர், ஔவையார், நக்கீரர், பெருஞ்சித்திரனார், திருஞான சம்பந்தர், திருஞான சம்பந்தர் ஆகியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பறம்பு மலை, சங்க காலத்தில் முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும், சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும் பெயர் பெற்ற இம்மலை, தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. 2,450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் கட்டப்பொம்மன் சிறைப்பட்டவுடன் அங்கிருந்து தப்பித்த ஊமைத்துரை மருதுபாண்டியர்களை நாடி வந்தபோது அவரை மனிதர்கள் யாரும் காணமுடியாதபடி பிரான்மலையுச்சியில் ஒளித்து வைத்துள்ளனர். இந்த இடம் இன்றும் ஊமையன் குடம்பு என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான மருதுபாண்டியர்களின் போரில் பறம்புமலை எனப்படும் பிரான்மலை ஒரு முக்கியக் கோட்டையாக விளங்கியிருக்கிறது. மலையுச்சியில் இன்றும் ஒரு பெரிய பீரங்கி அதன் நினைவாக இருக்கிறது.

முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

 

மருந்துவாழ் மலை (மருத்துவா மலை)

 

இந்திய தென்முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ மூலிகைகள் நிறைந்து மருத்துவாமலையில் காணப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மருந்துவாழ் மலை இந்தியாவில் முக்கியமான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. மருத்துவ மூலிகைகள் நிறைந்துள்ளதால் மருத்துவாமலை என அழைக்கப்படுகிறது. இதன் உயர்ந்த முகடு 1800 அடி உயரமுள்ள மலையாகும். இது நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.

இராமாயணத்தில் இராவணனுடனான போரில் இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துச் சென்றதாக உள்ளது. பெயர்த்துச் சென்றது இந்த மலைதான் என்று வாய்மொழி கதைகளில் கூறப்படுகிறது. வடக்கில் இருந்து பெயர்த்து வந்தபோது தமிழ்நாட்டில் சிதறி விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலை ஒன்று என்ற கருத்தும் உள்ளது. இம்மலையின் உயர்ந்த முகட்டில் பாறை வெடிப்புக்குள் பிள்ளைத்தடம் எனும் குகை உள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்கோடி முனையான இதனருகில் அய்யா நாராயணசாமி ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே அய்யாவழி சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது. சுவாமித்தோப்பில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் உள்ளது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பண்டிகையன்று இம்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இந்த ஊரில் ஸ்ரீ நாராயணகுரு போதித்த சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயத்தை அமைக்கும் பணியில் உருவாக்கப்பட்ட சதயபூஜா சங்கத்தின் நிர்வாகத்தில் 1992ஆம் ஆண்டில் “ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம்” எனும் பெயரில் மடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


கொல்லி மலை

 


பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கொல்லி மலை, தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால், இது 'மூலிகைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுவதுண்டு. கொல்லி மலைப் பகுதியில் தேன் கரடி, கருத்த வரையாடுகள், காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகள் உள்ளன.

பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பகுதி இதுவாக இருக்கக்கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி, அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்.

சிறுமலை

 

அனுமன் இமய மலையை கையில் கொண்டு செல்லும்போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என கூறப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 25 கிலோ மீட்டர்கள் அருகிலும், மதுரைக்கு 40 கிலோ மீட்டர்கள் அருகிலும் அமைந்துள்ளது. அனுமன் இமய மலையை கையில் கொண்டு செல்லும்போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது

இம்மலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 17வது கொண்டை ஊசி வளைவில் ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது, மற்றும் கீழே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கவரும்வண்ணம் இங்கு பார்வையாளர்கள் நிறுத்தம் உள்ளது. அன்னை வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் வெள்ளிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் இங்கு வருகிறார்கள். மலை உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது, 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் உள்ளது.

இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. எலுமிச்சம் பழம், வாழைப் பழம், பலாப் பழம் போன்றவை அதிகமாக விளைகின்றன. சிறுமலை வாழைப் பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. 60,000 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இது, அழிந்துவரும் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் களஞ்சியமாக உள்ளது. புள்ளிமான், குரைக்கும் மான், எலி மான் போன்ற மான் வகைகள் இங்கு காணப்படுகின்றன. காட்டுப்பன்றி, சோம்பல் கரடி, குள்ளநரி, மெல்லிய லோரிஸ், சிறுத்தை போன்ற மற்ற காட்டு விலங்குகளும் இம்மலையில் வாழ்கின்றன.

மனிதரால் உருவாக்கப்பட்ட சிறுமலை ஏரி, 2010ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, அங்கு படகு வசதிகள் உள்ளன.


அகத்தியமலை (பொதிகைமலை)

 

பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கூறுகின்றனர். மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அகத்தியமலை அல்லது பொதிகைமலை என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இது தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்லைகளையும், கேரளத்தில் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மாவட்ட எல்லைகளையும் கொண்டதாகப் பரவி அமைந்துள்ளது.

தாமிரபரணி ஆறு, கரமனை ஆறு, நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மலை அகத்திய முனிவரின் பக்தர்களால் புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது. பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கூறுகின்றனர். இந்த மலை  சங்ககால இலக்கியங்களில் பொதியம் என்றும் பொதியில் என்றும் அழைக்கப்பெற்றது.

2,000க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களுடன், பல அரிதான காட்டு விலங்குகளின் வாழ்விடமாகவும் அகத்திய மலை இருப்பது குறிப்பிடத்தக்கது. புலி, சிங்கவால் குரங்கு, மலைமொங்கான், தேவாங்கு போன்ற விலங்குகள் இக்காப்பகத்தில் காணப்படுகின்றன. தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி, நிலாம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனை மலை காப்பகங்கள் ஏற்கனவே உள்ள நிலையில், 5ஆவது காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 2 September 2022

ஏலக்காய் மலை

 

ஏலக்காய் மலை


வனங்களும், மலைகளும் மனிதகுலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனநிலைக்கு நாம் மாறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

"காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை'' என்றார் பாரதி.

வனங்களும், மலைகளும் மனிதகுலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனநிலைக்கு நாம் உடனே மாறவேண்டும், மற்றும், மலைகள் இயற்கை வளங்களோடு மதிக்கப்பட வேண்டும். இந்நோக்கத்துடன் அண்மை நாள்களில் நாம் வழங்கும் இனியது இயற்கை நிகழ்ச்சியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏலக்காய் மலை குறித்து காண்போம்

இது தமிழ்நாட்டின் தென் மேற்குப் பகுதியிலும் கேரளாவின் தென் கிழக்குப் பகுதியிலும் உள்ளது ஏலக்காய் மலை. இம்மலைப் பகுதியில் ஏலக்காய் அதிகம் பயிராவதால் இதற்கு ஏலக்காய் மலை என பெயர் ஏற்பட்டது. ஏலக்காய் தவிர, காப்பி மற்றும் மிளகும் இங்கு பயிராகின்றன. ஆழமான பள்ளத்தாக்குகள் உடைய மலைப் பகுதிகளைக் கொண்ட இதன் பரப்பு 2,800 சதுர கி.மீ ஆகும். மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு, பம்பை ஆறு ஆகியவை இம்மலைப் பகுதி வழியாகப் பாய்கின்றன. இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை ஆகியவை இம்மலைத்தொகுதியில் உள்ளன. இதன் வடமேற்கில் ஆனை மலையும் வடகிழக்கில் பழனி மலையும், தென் பகுதியில் அகத்திய மலையும் உள்ளன.

குளிர் காலத்தில் இம்மலைப் பகுதியின் வெப்பநிலை சராசரியாக 15° செல்சியசும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் 31° செல்சியசும் இருக்கும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு பெரியாறு உள்ள பகுதிகளில் 2,000 - 3,000 மி.மீ ஆகும்.

ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை

 

ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை


கென்யா மலையில் தற்போது உள்ள 11 சிறிய பனி ஆறுகள் வேகமாகச் சிறியதாகி வருவதாகவும், இவை 2025ஆம் ஆண்டுக்குள் மறைந்துவிடும் எனவும் கூறப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

கென்யா நாட்டின் மத்திய பகுதியில், பூமியின் நிலநடுக்கோட்டிற்கு தெற்கே 320 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்ற, அந்நாட்டின் மிக உயரமான கென்யா மலை ஆப்ரிக்கக் கண்டத்தின் இரண்டாவது மிக உயரமான மலையாகும். எரிமலை வகையைச் சேர்ந்த கென்யா மலை, ஏறத்தாழ முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று சொல்லப்படுகிறது. இம்மலை, சுவகீலி மொழியில் “வெண்மை மலை” என்ற பொருளில் Kirinyaga (Kere-Nyaga) எனவும் அழைக்கப்படுகிறது. பாட்டியன் (Batian 5,199 மீ.), நெலியோன் (Nelion 5,188 மீ.) லெனானா (Lenana 4,985 மீ.) ஆகிய மூன்றும் இம்மலையின் மிக உயரமான சிகரங்களாகும். 5,199 மீட்டர் உயரமுள்ள கென்யா மலையில், பனி உறையத் தொடங்குவதற்குமுன்பு இது ஏழாயிரம் மீட்டர் உயரத்தைத் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பனி முகடால் மூடப்பட்டிருந்த இம்மலையில் தற்போது உள்ள 11 சிறிய பனி ஆறுகள் வேகமாகச் சிறியதாகி வருவதாகவும், இவை 2025ஆம் ஆண்டுக்குள் மறைந்துவிடும் எனவும் கூறப்படுகிறது. இம்மலைச் சரிவுகளிலுள்ள காடுகள், கென்யா நாட்டு நீர்வளத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளன. இம்மலையின் அடிவாரத்திலிருந்து உச்சி வரையும் பல்வேறு வகையான காய்கறிகள் பயிர்செய்யப்படுகின்றன. இம்மலையின் மத்திய பகுதியைச் சுற்றி ஏறத்தாழ 715 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேசிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இம்மலை, 1997ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சொத்து இடமாகவும் குறிக்கப்பட்டது. இப்பூங்காவிற்கு ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலுமிருந்து 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கென்யா மலையைச் சுற்றி, Kikuyu, Ameru, Embu, Maasai ஆகிய இனத்தவர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இம்மலையை, தங்களின் கலாச்சாரங்களுக்கு முக்கிய அம்சமாகவும் இவ்வினத்தவர் கருதுகின்றனர். எல்லா வல்லமையும் நிறைந்த Ngai கடவுளின் இல்லமாக இம்மக்கள் இம்மலையை வழிபட்டனர். கென்யா மலையோடு தொடர்புடைய மாசாய் இனத்தவரின் ஓர் இறைவேண்டல் இதோ.. கடவுள் எம் பிள்ளைகளை ஆசிர்வதிப்பாராக. அவர்கள், Morintat ஒலிவ மரம்போல் இருப்பார்களாக. Ngong குன்றுகள், கென்யா மலை, கிளிமஞ்சாரோ மலை போன்று எண்ணிக்கையில் பலுகிப் பெருகுவார்களாக. Francis Sakuda என்பவர், Oloshoibor அமைதி அருங்காட்சியகத்திலிருந்து இந்த செபத்தை எடுத்து பதிவுசெய்துள்ளார். கென்யா மலையை, 1849ஆம் ஆண்டில் Johann Ludwig Krapf என்ற ஐரோப்பியரே முதலில் பார்த்தவர் ஆவார். 1899ஆம் ஆண்டில் பிரித்தானிய புவியியல் ஆய்வாளரான Halford John Mackinder அவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டு César Ollier மற்றும், Joseph Brocherel ஆகியோருடன் இம்மலைச் சிகரத்தில் முதன் முதலில் ஏறினார்

பின் குறிப்பு

கென்யா மலையில் உருவான எரிமலை, கிழக்கு ஆப்ரிக்க மலைத்தொடர் (East African Rift - EAR) உருவாகத் தொடங்கியதற்குப்பின் உருவானது. கிழக்கு ஆப்ரிக்க மலைத்தொடர், 2 கோடியே 20 இலட்சம் முதல், 2 கோடியே 50 இலட்சம் வரையிலான ஆண்டுகளுக்குமுன் வளரத் தொடங்கியது. இம்மலைத்தொடர் முன்பொரு காலத்தில் ஆசியா மைனருக்கு வடக்கே வரை பரவியிருந்த மிகப்பெரிய மலைத்தொடர் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி என கருதப்படுகிறது. (நன்றி: விக்கிப்பீடியா)

சேர்வராயன் மலை

 

சேர்வராயன் மலை


கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையில், புகழ்பெற்ற சுற்றுலா மையமாக ஏற்காடு மலை அமைந்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் சேர்வராயன் மலை, தமிழகத்தின் இதயம் போன்று அமைந்துள்ளது. இது மலைத்தொடரலிருந்து விலகித் தனக்கென 400 ச.கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இந்த மலையில் இயற்கையின் ஊற்றாக நிறைய மரங்களும், மூலிகைச் செடிகளும், வன விலங்குகளும் இருக்கின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில், புகழ்பெற்ற சுற்றுலா மையமாக ஏற்காடு மலை அமைந்துள்ளது. ஏரிக்காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இதனை “ஏழைகளின் ஊட்டி” என்றும் அழைப்பார்கள்.

சேர்வராயன் மலை, மல்லாபுரம் மலைத்தொடருக்கும் மஞ்சவாடிக் கணவாய்க்கும் இடையில் பரந்து கிடக்கின்றன. இம்மலைத் தொடரானது, நடுவில் ஓடும் வாணியாற்றின் பள்ளத்தாக்கால் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரண்டு பிரிவுகளும் அமைப்பில் வேறுபடுகின்றன. சேர்வராயன் மலையில் மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது.

சேர்வராயன் மலை உச்சியில் ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள சேர்வராயன் கோவில், தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காவேரி தேவியும் சேர்வராயன் கடவுளும் சுற்றியுள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் கடவுள்களாக கருதப்படுகிறார்கள். இந்த கோயில் குகை மிகவும் ஆழமாக இருப்பதால் அது காவேரி ஆற்றை தொடுகிறது என்று நம்பப்படுகிறது.

பச்சைமலை

 

பச்சைமலை



‘பச்சை மலை, பவள மலை எங்கள் மலை’ என குற்றாலக் குறவஞ்சி, பச்சைமலை குறித்து பெருமைபட பேசுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருச்சி, பெரம்பலூர், சேலம் என மூன்று மாவட்டங்களை இணைக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ’பேரரசி’யாக விளங்குகிறது பச்சைமலை. தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத் தொடர்களுள் ஒன்று இது. பழம்பெரும் பாடல்களில் பச்சைமலை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ‘பச்சை மலை, பவள மலை எங்கள் மலை’ என குற்றாலக் குறவஞ்சி இத்தலத்தினை பெருமைபட பேசுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல, கண்கள் காணும் இடமெல்லாமல் பசுமை போர்த்தியதுபோல் பச்சைப்பசேலென்ற மரங்கள், சில்லென்ற காற்று, மூலிகை வாசனை என மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கிறது இம்மலை.

'பச்ச மலைப் பூவு, நீ உச்சி மலைத்தேனு... குத்தங்குறை ஏது... நீ நந்தவனத் தேரு...' என்ற திரைப்பட பாடலைக் கேட்டாலே, நம் மனதை அந்த இசையும் வரிகளும் மயக்குவதுபோல்  இந்தப் பச்சைமலையும் நம்மை மயக்குகிறது. பட்டாம்பூச்சிக் கூட்டம், மலைவாழ் மக்கள், தேன், பலாப்பழம், பெரிய ஆலமரங்கள், அதில் விளையாடும் சிறுவர்கள் எனப் போகிற வழி முழுவதும் கட்டடங்கள் எதுவுமில்லாமல் ஆத்மார்த்தமான, இயற்கையோடு இணைந்த தூய்மையான மூலிகை வாசம் காற்றுடன் கலந்து வருகிறது. பச்சைமலை சுமார் 19,076 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் இருக்கிறது இம்மலை.

இந்த மலையில்  வனத்துறை கணக்கெடுப்பின்படி, 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும், இந்த மலைப்பகுதிக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வந்து செல்கின்றன. மயில்கள், குயில்கள் அரிய வகைக் குருவிகள் பறவைகள், மான், காட்டுப்பூனை போன்ற விலங்குகளையும் மூலிகைச் செடிகளையும் காணலாம். சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகளும் இந்த பச்சைமலையில் தான் உற்பத்தியாகின்றன. பச்சைமலையில் ’மங்களம் அருவி’, ’எருமைப்பள்ளி அருவி’, ’மயிலூற்றுஅருவி’, ’கோரையாறு அருவி’ எனப் பல அருவிகள் இருக்கின்றன. இதனாலயே பச்சைமலையை ’அருவிகளின் மலை’ என்றுகூடச் சொல்கிறார்கள்.

இனியது இயற்கை – ஜவ்வாது மலை

 

இனியது இயற்கை – ஜவ்வாது மலை


ஜவ்வாது மலையில் உள்ள நீர்மத்தி மரங்களை 15 பேர் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்டிப்பிடிக்க முடியும். அந்தளவுக்கு அதன் விட்டம் பெரியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஜவ்வாது மலை. இந்த மலையின் மேற்குப் பகுதியில் மனதுக்கு குளிர்ச்சி தரும் ஏலகிரி மலை உள்ளது. கிழக்குப் பகுதியில், வரலாற்று தகவல்கள், பொது அறிவுத் தகவல்கள் புதைந்துள்ள, ஒரு சுற்றுலாத் தலமாக ஜம்னாமத்தூர் பகுதி உள்ளது.

ஜவ்வாது மலையின் மையப் பகுதியான ஜம்னாமத்தூர், திருவண்ணாமலையில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. ஜம்னாமத்தூரிலிருந்து 3 கி.மீ தொலைவு சென்றால் அழகான பீமன் நீர் வீழ்ச்சியுள்ளது. இங்கு நீர் 80 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது.

மலையின் சில இடங்களில் நீர்மத்தி மரங்கள் உள்ளன. இந்த மரங்களை 15 பேர் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்டிப்பிடிக்க முடியும். அந்தளவுக்கு அதன் விட்டம் பெரியது. தெற்குப் பகுதியில் பர்வதமலை என்ற மலை, இம்மலையை ஒட்டியுள்ளது. இங்குள்ள அம்மன் கோயில் சிறப்பு வாய்ந்ததாகும்.

மலையில் பேஎள் என்ற எள் விளைகிறது. இதிலிருந்து கொழுப்பு சத்து இல்லாத எண்ணெய் எடுக்க முடியும். அதேபோல், மலைப் பகுதியில் மட்டுமே விளையும் சாமை என்ற தானியம் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றது.

ஜம்னாமத்தூரில் இருந்து 15 கி.மீ தூரம் சென்றால் காவனூர் வருகிறது. ஆசியாவின் மிகப் பெரிய தொலைநோக்கி மையம் இதுதான். ஜம்னாமத்தூரில் இருந்து அமிர்திக்குச் செல்லலாம். 32 வது கி.மீட்டரில் உள்ளது அமிர்தி. இங்கு நீர்வீழ்ச்சியும், விலங்கியல் பூங்காவும் உள்ளன.

படைப்பு பாதுகாக்கப்பட அனைவரின் அர்ப்பணத்திற்கு அழைப்பு

 

படைப்பு பாதுகாக்கப்பட அனைவரின் அர்ப்பணத்திற்கு அழைப்பு


காலநிலை மாற்றம் குறித்த COP27, COP15 ஆகிய இரு உச்சி மாநாடுகள், காலநிலை மாற்றம், பல்லுயிரினங்களின் அழிவு ஆகிய இரு நெருக்கடிகளைக் களைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கு உலகினரின் உண்மையான அர்ப்பணம் அவசியம் என்று, ஆகஸ்ட் 31, இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் வழங்கிய புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின்னர் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 01, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் படைப்பைப் பாதுகாக்கும் இறைவேண்டல் நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இப்பூமிக்கோளம் பாதுகாக்கப்படுவதற்கு உலகினர் எல்லாரும் இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

“படைப்பின் குரலைக் கேளுங்கள்” என்ற தலைப்பில், இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுகின்ற இந்நாள், இப்பூமி பராமரிக்கப்பட ஓர் உண்மையான அர்ப்பணத்தை அனைவரிலும் பேணிவளர்க்கும் என்ற தன் நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்தார்.

படைப்பை மிதமிஞ்சி நாம் நுகர்வதால் ஏற்படும் கடுமையான வலியால் பெருமூச்சு விடுகின்ற இப்பூமி, இந்த அழிவு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்று நம்மிடம் கெஞ்சிக் கேட்கிறது என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடத்தும் காலநிலை மாற்றம் குறித்த COP27 மற்றும், COP15 ஆகிய இரு உலக உச்சி மாநாடுகள், காலநிலை மாற்றம், பல்லுயிரினங்களின் அழிவு ஆகிய இரு  நெருக்கடிகளைக் களைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற தன் எதிர்பார்ப்பையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

படைப்பின் காலம்

கடவுளின் படைப்பு பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அசிசி நகர் புனித பிரான்சிசின் திருநாளாகிய அக்டோபர் 4ம் தேதி வரை, உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் படைப்பின் காலம் என்ற நிகழ்வைச் சிறப்பிக்கின்றனர்.

ஈராக் மக்களுக்காக செபம்

மேலும், இப்புதன் காலையில் வழங்கிய மறைக்கல்வியுரைக்குப்பின்னர், அண்மை நாள்களில் ஈராக் தலைநகர் பாக்தாதில் இடம்பெறும் வன்முறைகள் பற்றிக் கவலையோடு குறிப்பிட்டு, அந்நாட்டு மக்களுக்கு ஆண்டவர் அமைதி அருளவேண்டும் என கடவுளை மன்றாடுவோம் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டில் ஈராக்கிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, பல்வேறு மதங்கள் மத்தியில் அமைதியான நல்லிணக்கம் நிலவுவதையும், அந்நாடு சாதாரண வாழ்வுக்குத் திரும்ப ஆவல்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன், அம்மக்கள் இந்த இலக்கை எட்டவும், தற்போதைய பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் உரையாடலும், உடன்பிறந்த உணர்வுமே முக்கிய வழிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.


 

மூன்றாம் உலகப்போரில் நாம் வாழ்கின்றோம்: திருத்தந்தை பிரான்சிஸ்


“நன்மை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றைத் தினமும் தெளிந்துதேர்ந்துகொள்வதில் நமது அன்னை மரியா உங்களுக்குத் துணை இருக்கட்டும்” : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த கால அனுபவங்களின் நினைவு, உங்களிலும், உங்கள் குடும்பங்களிலும், சமூக மற்றும் அனைத்துலக வாழ்விலும் அமைதியை வளர்க்க உங்களைத் தூண்டட்டும் என்று தான் வழங்கிய புதன் பொது மறைக்கல்வியுரையின்போது தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 31, இப்புதனன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரையின்போது, இரண்டாம் உலகப் போர் வெடித்த 83-வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குறிப்பாக, அங்குக் கூடியிருந்த போலந்து மொழி பேசும் விசுவாசிகளிடம் உரையாற்றியபோது, "போலந்து நாட்டை கொடியதாகப் பாதித்த இரண்டாம் உலகப் போர் வெடித்த ஆண்டு நிறைவை, நாளைய தினம் நீங்கள் நினைவு கூர்கிறீர்கள் என்று குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைனில் நடந்துவரும் போரின் மீதும் தனது கவனத்தைத் திருப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று நாம் ஒரு மூன்றாம் உலகப் போரில் வாழ்கிறோம் என்றும், இப்போர் உலகைத் துண்டு துண்டாக உடைக்கப் போராடுகிறது என்றும் கவலை தெரிவித்தார்.

உக்ரைன்  மக்களுக்காகச் செபிப்பதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  "உங்கள் இதயங்களில் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் உள்மனச் சுதந்திரத்தை உருவாக்கும், நன்மை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றைத் தினமும் தெளிந்துதேர்ந்துகொள்வதில் நமது அன்னை மரியா உங்களுக்குத் துணை இருக்கட்டும்” என்று இறைவேண்டல் செய்தார்.

இரண்டாம் உலகப் போர் 1 செப்டம்பர் 1939 இல் தொடங்கி 2 செப்டம்பர் 1945 வரை நிகழ்ந்தது.