Friday 2 September 2022

ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை

 

ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை


கென்யா மலையில் தற்போது உள்ள 11 சிறிய பனி ஆறுகள் வேகமாகச் சிறியதாகி வருவதாகவும், இவை 2025ஆம் ஆண்டுக்குள் மறைந்துவிடும் எனவும் கூறப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

கென்யா நாட்டின் மத்திய பகுதியில், பூமியின் நிலநடுக்கோட்டிற்கு தெற்கே 320 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்ற, அந்நாட்டின் மிக உயரமான கென்யா மலை ஆப்ரிக்கக் கண்டத்தின் இரண்டாவது மிக உயரமான மலையாகும். எரிமலை வகையைச் சேர்ந்த கென்யா மலை, ஏறத்தாழ முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று சொல்லப்படுகிறது. இம்மலை, சுவகீலி மொழியில் “வெண்மை மலை” என்ற பொருளில் Kirinyaga (Kere-Nyaga) எனவும் அழைக்கப்படுகிறது. பாட்டியன் (Batian 5,199 மீ.), நெலியோன் (Nelion 5,188 மீ.) லெனானா (Lenana 4,985 மீ.) ஆகிய மூன்றும் இம்மலையின் மிக உயரமான சிகரங்களாகும். 5,199 மீட்டர் உயரமுள்ள கென்யா மலையில், பனி உறையத் தொடங்குவதற்குமுன்பு இது ஏழாயிரம் மீட்டர் உயரத்தைத் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பனி முகடால் மூடப்பட்டிருந்த இம்மலையில் தற்போது உள்ள 11 சிறிய பனி ஆறுகள் வேகமாகச் சிறியதாகி வருவதாகவும், இவை 2025ஆம் ஆண்டுக்குள் மறைந்துவிடும் எனவும் கூறப்படுகிறது. இம்மலைச் சரிவுகளிலுள்ள காடுகள், கென்யா நாட்டு நீர்வளத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளன. இம்மலையின் அடிவாரத்திலிருந்து உச்சி வரையும் பல்வேறு வகையான காய்கறிகள் பயிர்செய்யப்படுகின்றன. இம்மலையின் மத்திய பகுதியைச் சுற்றி ஏறத்தாழ 715 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேசிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இம்மலை, 1997ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சொத்து இடமாகவும் குறிக்கப்பட்டது. இப்பூங்காவிற்கு ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலுமிருந்து 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கென்யா மலையைச் சுற்றி, Kikuyu, Ameru, Embu, Maasai ஆகிய இனத்தவர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இம்மலையை, தங்களின் கலாச்சாரங்களுக்கு முக்கிய அம்சமாகவும் இவ்வினத்தவர் கருதுகின்றனர். எல்லா வல்லமையும் நிறைந்த Ngai கடவுளின் இல்லமாக இம்மக்கள் இம்மலையை வழிபட்டனர். கென்யா மலையோடு தொடர்புடைய மாசாய் இனத்தவரின் ஓர் இறைவேண்டல் இதோ.. கடவுள் எம் பிள்ளைகளை ஆசிர்வதிப்பாராக. அவர்கள், Morintat ஒலிவ மரம்போல் இருப்பார்களாக. Ngong குன்றுகள், கென்யா மலை, கிளிமஞ்சாரோ மலை போன்று எண்ணிக்கையில் பலுகிப் பெருகுவார்களாக. Francis Sakuda என்பவர், Oloshoibor அமைதி அருங்காட்சியகத்திலிருந்து இந்த செபத்தை எடுத்து பதிவுசெய்துள்ளார். கென்யா மலையை, 1849ஆம் ஆண்டில் Johann Ludwig Krapf என்ற ஐரோப்பியரே முதலில் பார்த்தவர் ஆவார். 1899ஆம் ஆண்டில் பிரித்தானிய புவியியல் ஆய்வாளரான Halford John Mackinder அவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டு César Ollier மற்றும், Joseph Brocherel ஆகியோருடன் இம்மலைச் சிகரத்தில் முதன் முதலில் ஏறினார்

பின் குறிப்பு

கென்யா மலையில் உருவான எரிமலை, கிழக்கு ஆப்ரிக்க மலைத்தொடர் (East African Rift - EAR) உருவாகத் தொடங்கியதற்குப்பின் உருவானது. கிழக்கு ஆப்ரிக்க மலைத்தொடர், 2 கோடியே 20 இலட்சம் முதல், 2 கோடியே 50 இலட்சம் வரையிலான ஆண்டுகளுக்குமுன் வளரத் தொடங்கியது. இம்மலைத்தொடர் முன்பொரு காலத்தில் ஆசியா மைனருக்கு வடக்கே வரை பரவியிருந்த மிகப்பெரிய மலைத்தொடர் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி என கருதப்படுகிறது. (நன்றி: விக்கிப்பீடியா)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...