கபிலர், ஔவையார், நக்கீரர், பெருஞ்சித்திரனார், திருஞான சம்பந்தர், திருஞான சம்பந்தர் ஆகியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பறம்பு மலை, சங்க காலத்தில் முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும், சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும் பெயர் பெற்ற இம்மலை, தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. 2,450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.
பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் கட்டப்பொம்மன் சிறைப்பட்டவுடன் அங்கிருந்து தப்பித்த ஊமைத்துரை மருதுபாண்டியர்களை நாடி வந்தபோது அவரை மனிதர்கள் யாரும் காணமுடியாதபடி பிரான்மலையுச்சியில் ஒளித்து வைத்துள்ளனர். இந்த இடம் இன்றும் ஊமையன் குடம்பு என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான மருதுபாண்டியர்களின் போரில் பறம்புமலை எனப்படும் பிரான்மலை ஒரு முக்கியக் கோட்டையாக விளங்கியிருக்கிறது. மலையுச்சியில் இன்றும் ஒரு பெரிய பீரங்கி அதன் நினைவாக இருக்கிறது.
முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment