மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், மேகமலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை, நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள மலைவாழிடங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், இந்த மேகமலை.
பசுமையான நிலபரப்புடன், பெரிய பெரிய மரங்களுடன் இந்தப் பகுதி காணப்படுகிறது. மிக அழகான, சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களைக் காண, கண்கள் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என பல இயற்கை அழகுகள் கொட்டிக்கிடக்கும் பகுதி மேகமலை.
18 ஊசி வளைவுகளில் ஆர்வம் மிகுந்த பயணத்திற்கு பிறகு இங்கு வந்தவுடன், இந்த இடம் எவ்வளவு பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது என்பதை அறியமுடியும். மூடுபனி இங்கு நிரந்தரமாக இருப்பதுபோல் தெரிகிறது. கட்டடங்களின் பெருக்கத்தால் தீண்டப்படாத மேகமலை, ஒரு சிறப்புக் கவர்ச்சியில் திளைக்கிறது. எப்போதும் இதமான காலநிலை, அமைதியான காற்று, மற்றும் கண்கவர் காட்சிகள், இதனை மிகவும் விரும்பப்படும் இடமாக மாற்றுகின்றன. வனவிலங்கு சரணாலயம், மேகமலை அருவி, சுருளி அருவி, அணைகள், மகாராஜா மெட்டு காட்சிமுனை, வெள்ளிமலை, ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டங்கள் ஆகியவை, இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும்.
மணலார் அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் மூச்சடைக்கக்கூடிய காட்சி, மற்றும் அழகான குக்கிராமங்களின் பரந்த காட்சியை அனுபவிக்க, நெடுஞ்சாலை அணைக்கும், சுருளி தீர்த்தத்திற்கும் சென்று வரலாம். எந்த பருவமாக இருந்தாலும் தண்ணீர் குறையாமல் கொட்டும் மேகமலை அருவி, ஒரு காட்சி விருந்தாகும். யானை, காட்டெருது, புள்ளிமான் போன்ற காட்டு விலங்குகளையும் இங்கு காணலாம். (விகடன் & சுற்றுலாத் துறை, தமிழ்நாடு அரசு)
No comments:
Post a Comment