கிராமிய வசீகரத்துடன், காடுகளால் சூழப்பட்டதாக, தேயிலைத் தோட்டங்களும் காபி பண்ணைகளும் ஒன்றுசேர்ந்து கண்கவர் காட்சியை உருவாக்கும் வால்பாறை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அழகான, மலைப்பாங்கான குக்கிராமத்தில், அனைத்து சலசலப்புகளிலிருந்தும் விலகி ஓர் அமைதியான, மறக்கமுடியாத நேரத்தைச் செலவிட விரும்புவோருக்கு வால்பாறை சிறந்த இடம். விலைமதிப்பற்ற பசுமை பரவல், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்த பாதைகள், நம் நிம்மதியின் தேடலுக்கு நிறைய உதவுவதாக உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள வால்பாறை, கிராமிய வசீகரத்துடன், காடுகளால் சூழப்பட்டதாக, தேயிலைத் தோட்டங்களும் காபி பண்ணைகளும் ஒன்றுசேர்ந்து கண்கவர் காட்சியை உருவாக்குகின்றது. மேல்சோலையாறு அணை, நீராறு அணை, ஆழியாறு அணை, குரங்கு அருவி, பாலாஜி கோவில் (கரிமலை), வேளாங்கண்ணி ஆலயம் (கரிமலை), பஞ்ச முக விநாயகர் கோயில் (சோலையாறுக்கு அருகில்) ஆகியவை நம்மை பார்க்க ஈர்க்கும் சில முக்கிய இடங்கள். மலையேறுபவர்களுக்கு, வால்பாறை ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வால்பாறை மலைத்தொடர், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடமாகவும் உள்ளது. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம், வால்பாறையின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாகும். சோலைமந்தி, கேளையாடு (குரைக்கும் மான்கள்), காட்டுப்பன்றிகள், நீலகிரி மற்றும் பொதுவான மந்தி (லங்கூர்) போன்றவற்றை இங்கு காணலாம். மலை இருவாட்சி, மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி ஆகியவை இங்கே இருப்பதால், பறவை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகவும் வால்பாறை உள்ளது.
காடுகளால் மூடப்பட்ட குறுகலான வளைந்த பாதை சின்னக்கல்லார் அருவிக்குச் செல்கிறது. இந்த இடம் மூன்றாவது அதிக மழையைப் பெறும் பெருமைக்குரியது. மழையின் காரணமாக மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் சின்னக்கல்லாறு, பசுமையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. (சுற்றுலாத் துறை,தமிழ்நாடு அரசு)
No comments:
Post a Comment