கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அகத்தியமலை அல்லது பொதிகைமலை என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இது தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்லைகளையும், கேரளத்தில் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மாவட்ட எல்லைகளையும் கொண்டதாகப் பரவி அமைந்துள்ளது.
தாமிரபரணி ஆறு, கரமனை ஆறு, நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மலை அகத்திய முனிவரின் பக்தர்களால் புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது. பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கூறுகின்றனர். இந்த மலை சங்ககால இலக்கியங்களில் பொதியம் என்றும் பொதியில் என்றும் அழைக்கப்பெற்றது.
2,000க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களுடன், பல அரிதான காட்டு விலங்குகளின் வாழ்விடமாகவும் அகத்திய மலை இருப்பது குறிப்பிடத்தக்கது. புலி, சிங்கவால் குரங்கு, மலைமொங்கான், தேவாங்கு போன்ற விலங்குகள் இக்காப்பகத்தில் காணப்படுகின்றன. தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி, நிலாம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனை மலை காப்பகங்கள் ஏற்கனவே உள்ள நிலையில், 5ஆவது காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment