பச்சைமலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருச்சி, பெரம்பலூர், சேலம் என மூன்று மாவட்டங்களை இணைக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ’பேரரசி’யாக விளங்குகிறது பச்சைமலை. தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத் தொடர்களுள் ஒன்று இது. பழம்பெரும் பாடல்களில் பச்சைமலை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ‘பச்சை மலை, பவள மலை எங்கள் மலை’ என குற்றாலக் குறவஞ்சி இத்தலத்தினை பெருமைபட பேசுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல, கண்கள் காணும் இடமெல்லாமல் பசுமை போர்த்தியதுபோல் பச்சைப்பசேலென்ற மரங்கள், சில்லென்ற காற்று, மூலிகை வாசனை என மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கிறது இம்மலை.
'பச்ச மலைப் பூவு, நீ உச்சி மலைத்தேனு... குத்தங்குறை ஏது... நீ நந்தவனத் தேரு...' என்ற திரைப்பட பாடலைக் கேட்டாலே, நம் மனதை அந்த இசையும் வரிகளும் மயக்குவதுபோல் இந்தப் பச்சைமலையும் நம்மை மயக்குகிறது. பட்டாம்பூச்சிக் கூட்டம், மலைவாழ் மக்கள், தேன், பலாப்பழம், பெரிய ஆலமரங்கள், அதில் விளையாடும் சிறுவர்கள் எனப் போகிற வழி முழுவதும் கட்டடங்கள் எதுவுமில்லாமல் ஆத்மார்த்தமான, இயற்கையோடு இணைந்த தூய்மையான மூலிகை வாசம் காற்றுடன் கலந்து வருகிறது. பச்சைமலை சுமார் 19,076 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் இருக்கிறது இம்மலை.
இந்த மலையில் வனத்துறை கணக்கெடுப்பின்படி, 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும், இந்த மலைப்பகுதிக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வந்து செல்கின்றன. மயில்கள், குயில்கள் அரிய வகைக் குருவிகள் பறவைகள், மான், காட்டுப்பூனை போன்ற விலங்குகளையும் மூலிகைச் செடிகளையும் காணலாம். சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகளும் இந்த பச்சைமலையில் தான் உற்பத்தியாகின்றன. பச்சைமலையில் ’மங்களம் அருவி’, ’எருமைப்பள்ளி அருவி’, ’மயிலூற்றுஅருவி’, ’கோரையாறு அருவி’ எனப் பல அருவிகள் இருக்கின்றன. இதனாலயே பச்சைமலையை ’அருவிகளின் மலை’ என்றுகூடச் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment