மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
2023ம் ஆண்டில், 'கூட்டொருங்கியக்கம்' என்ற தலைப்பில், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல்கட்டத் தயாரிப்புக்கள், உலகெங்கும் தலத்திருஅவைகளில் துவங்கவிருக்கும் இவ்வேளையில், செப்டம்பர் 18, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது உரோம் மறைமாவட்டத்தின் ஏறத்தாழ நான்காயிரம் விசுவாசிகளை, வத்திக்கானின் புனித 6ம் பவுல் அரங்கில் சந்தித்து, 'கூட்டொருங்கியக்கம்' பற்றிய தன் விரிவான எண்ணங்களை எடுத்துரைத்தார்.
கூட்டொருங்கியக்கம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்கள், 2021ம் ஆண்டுக்கும், 2023ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மூன்று கட்டங்களாக இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, இத்தயாரிப்புக்கள், திருஅவையில் அனைத்து நிலைகளில் உள்ளவர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறினார்.
இத்தயாரிப்புக்களில், அனைத்து விசுவாசிகளின் கருத்துக்களைச் சேகரிப்பது என்பதோடு, தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுப்பது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, முதல் கட்டத் தயாரிப்புக்கள், 2021ம் ஆண்டு அக்டோபர் முதல், 2022ம் ஆண்டு ஏப்ரல் வரை நடைபெறும் என்றும் கூறினார்.
'கூட்டொருங்கியக்கம்' என்பதன் பொருளை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது திருஅவை பற்றிய ஆய்வுக்கட்டுரையின் ஒரு பிரிவு அல்ல, மாறாக, இது திருஅவையின் இயல்பு, அதன் வடிவம், அதன் வாழ்க்கைமுறை, அதன் மறைப்பணி போன்றவற்றை வெளிப்படுத்துவதாகும் என்றும் கூறினார்.
கூட்டொருங்கியக்கத் திருஅவை என்று நாம் பேசும்போது, மாற்றுச்சிந்தனைகளோடு சிந்திக்கும் ஒரு முறை என்று, தான் கருதுவதாகத் தெரிவித்த திருத்தந்தை, மாமன்றம் என்பது, ஒன்றுசேர்ந்து நடத்தல் என்று கூறி, அதற்கு விவிலியத்திலிருந்து பல்வேறு மேற்கொள்களையும் குறிப்பிட்டார்.
உலக ஆயர்கள் மாமன்றத்திற்கென நடைபெறும் தயாரிப்புக்கள், மறைமாவட்ட அளவில் நடைபெறுவது மிகவும் முக்கியம், ஏனெனில் இது திருமுழுக்குப்பெற்ற அனைவரின் குரலுக்குச் செவிமடுப்பதாக உள்ளது எனவும், இறைவனின் வாக்குறுதிகளைப் பெற்றுள்ள மிகப்பெரும் மக்களின் ஓர் அங்கம் என உணர்வது அவசியம் எனவும் உரைத்த திருத்தந்தை, இறைமக்கள் என்ற சொல்லாடல் பற்றியும் விளக்கினார்.
இத்தயாரிப்புப் பாதையில் செவிமடுத்தல் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும், இத்தயாரிப்பில் ஊக்கப்படுத்தவே இன்று உங்களைச் சந்தித்தேன் என்றும் உரைத்த திருத்தந்தை, தூய ஆவியாருக்குச் செவிகொடுங்கள், எவரையும் புறக்கணியாதீர்கள், அவ்வாறு இருப்பது, உரோம் மறைமாவட்டத்திற்கும், உலகளாவிய திருஅவைக்கும் நல்லது என்று கூறினார்.
உரோம், பல்வேறு மக்களையும், பல்வேறு நிலையில் உள்ளவர்களையும் கொண்ட மாநகரம், இந்த பெருந்தொற்று காலத்தில், நலிந்தவர்களைப் பாரமரிக்கும் திருஅவையாகச் செயல்பட உங்களை ஆண்டவர் அழைக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரோம் மறைமாவட்ட விசுவாசிகளிடம் கூறி, தன் நீண்ட உரையை நிறைவுசெய்தார்.
No comments:
Post a Comment