Monday, 20 September 2021

திருப்பீடம்: சுத்தமான குடிநீர் பெறுவது, அடிப்படை மனித உரிமை

 


அனைவருக்கும் சுத்தமான குடிநீரும், நலவாழ்வு வசதிகளும் கிடைக்குமாறு செய்வதற்கு, உலக அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தண்ணீர், ஒரு விற்பனைச் சரக்கு அல்ல, மாறாக, அது, வாழ்வின் ஊற்றாகவும், நலவாழ்வின் உலகளாவிய அடையாளமாகவும் உள்ளது, எனவே, அது குடிப்பதற்கும், நலவாழ்வுப் பணிகளுக்கும், அனைவருக்கும் கிடைப்பதற்கு உறுதிசெய்யப்படவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டார்.

தண்ணீர், மற்றும், நலவாழ்வு பற்றி, ஜெனீவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 48வது கலந்துரையாடலில் உரையாற்றிய, திருப்பீடப் பிரதிநிதி பேரருள்திரு John Putzer அவர்கள், உயிர் வாழ்வுக்கு முக்கியத் தேவைகளில் ஒன்றான, குடி நீரைப் பெறுவது, மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும், இதை ஊக்குவிக்கும் பணிகளுக்கு, திருப்பீடம் எப்போதும் முன்னுரிமை கொடுக்கின்றது என்றும் கூறினார்.

உலக அளவில் நிலவும் தண்ணீர் பிரச்சனை பற்றிய, ஐ.நா. அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய பேரருள்திரு Putzer அவர்கள், காலநிலை மாற்றம், கோவிட்-19 பெருந்தொற்று போன்றவற்றால், இப்பிரச்சனை அதிகமாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தொழில்நுட்பம் அதிகளவில் வளர்ந்துள்ள இக்காலத்திலும், அனைத்து மக்களும், பாதுகாப்பான, மற்றும், சுத்தமான குடிநீரைப் பெற இயலாமல் உள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய பேரருள்திரு Putzer அவர்கள், உலகில் ஏற்கனவே நிலவும் சமூக, மற்றும், பொருளாதார இடைவெளி, பெருந்தொற்றால் மேலும் விரிவடைந்துள்ளது என்றும், இது தேவையில் இருக்கும் மக்கள் மத்தியில், தண்ணீர் பிரச்சனையையும் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரும், நலவாழ்வு வசதிகளும் கிடைக்குமாறு செய்வதற்கு, உலக அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்பதையும், திருப்பீட அதிகாரி, ஐ.நா. அவையில் வலியுறுத்திக் கூறினார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...