கருவில் வளரும் குழந்தைகளின் உயிர்கள், குறிப்பாக, அவ்வுயிர்களின் பாலினம், அவற்றில் உருவாகும் குறைபாடுகள் ஆகியவற்றைப் பொருத்து, அவ்வுயிர்களின் மாண்பு குறைக்கப்படுவதை, திருப்பீடம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது – பேராயர் காலகர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இனப்பாகுபாட்டின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள அனைத்துலக ஒப்பந்தத்தில் இணைந்துள்ள திருப்பீடம், இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியரின் மீது உருவாகும் அச்சம், மற்றும் அதனால் எழும் வன்முறைகள் அனைத்திற்கும் எதிராகப் போராடிவருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் ஆற்றிய உரையில் கூறினார்.
ஆப்ரிக்க வழிமுறையில் வந்த மக்களுக்கு சமத்துவம், இன அடிப்படையில் நீதி, மற்றும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஈடு வழங்குதல் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட டர்பன் அறிக்கையின் (Durban Declaration) 20ம் ஆண்டு நிறைவையொட்டி, ஐ.நா. அவையில் இடம்பெற்ற கூட்டத்தில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
இனவெறியை வேரறுக்கும் கடமை
ஒவ்வொரு மனிதரும், சமமான மாண்புடனும், உரிமைகளோடும் படைக்கப்பட்டுள்ளார் என்ற அடிப்படை உண்மைக்கு எதிராக வளர்ந்துள்ள இனவெறியை வேரறுப்பதோடு, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உணர்வை வளர்ப்பது நம் அனைவரின் கடமை என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.
மனித சமுதாயத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னேற்ற முயற்சிகளிலும், இனவெறியும், இன பாகுபாட்டு நடவடிக்கைகளும் பரவியிருப்பதை, Fratelli Tutti என்ற தன் திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் நினைவுறுத்தினார்.
ஆப்ரிக்க வழிமுறை வந்த மக்களுக்கு உதவிகள்
ஆப்ரிக்க வழிமுறையில் வந்த மக்களுக்கு உதவிகள் செய்ய ஒரு நிரந்தர அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை திருப்பீடம் பெரிதும் வரவேற்கிறது என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், இவ்வமைப்பின் செயல்பாடுகள், ஒவ்வொரு நாட்டிலும், பன்னாட்டளவிலும் செயல்பட திருப்பீடத்தின் ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு என்பதையும் எடுத்துரைத்தார்.
மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக...
சகிப்புத்தன்மை குறைந்து, பகைமை உணர்வுகளும், வன்முறைகளும் பெருகியுள்ளதற்கு தன் கவலையை வெளியிட்டுள்ள டர்பன் அறிக்கை, இத்தகைய சகிப்பற்ற தன்மை மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராகவும் பின்பற்றப்படுவதைக் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளது என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
கருவில் வளரும் குழந்தையின் உரிமை
இதேவண்ணம், மனித உயிர்களுக்கு வழங்கப்படும் மாண்பு பல்வேறு வழிகளில் தரம் பிரிக்கப்படுவதால், கருவில் வளரும் குழந்தைகளின் உயிர்கள், குறிப்பாக, அவ்வுயிர்களின் பாலினம், அவற்றில் உருவாகும் குறைபாடுகள் ஆகியவற்றைப் பொருத்து, அவ்வுயிர்களின் மாண்பு குறைக்கப்படுவதை, திருப்பீடம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பதையும், பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
இனவெறியும், இன பாகுபாடுகளும் மனித மனங்களிலிருந்து வேரறுக்கப்படவில்லையெனில், எத்தனை சட்டங்கள் வந்தாலும், இந்தப் பிரச்சனையை முற்றிலும் தீர்க்க இயலாது என்பதை வலியுறுத்திக் கூறி, மனித மனமாற்றத்துக்கு அழைப்பு விடுத்து, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment