ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆப்கானிஸ்தானில், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்பதையும், அனைவரையும் உள்ளடக்கிய ஓர் உரையாடல் இடம்பெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தி, திருப்பீடத்தின் பிரதிநிதி ஒருவர், ஐ.நா.அவை நடத்திய கூட்டமொன்றில் உரையாற்றினார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில், ஆகஸ்ட் 24, இச்செவ்வாயன்று, நடைபெற்ற மனித உரிமைகள் கழகத்தின் 31வது அமர்வில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற அருள்பணி John Putzer அவர்கள், ஆப்கானிஸ்தானைக் குறித்து திருப்பீடம் கொண்டுள்ள கவலையை வெளியிட்டார்.
ஆப்கானிஸ்தானில், ஆயுதங்களின் ஓசை குறைந்து, உரையாடலின் வழியே மக்களுக்கு நன்மை தரும் தீர்வுகள் அமைவதற்கு செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையில் விடுத்த விண்ணப்பத்தை, அருள்பணி Putzer அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மனிதரும் மாண்புடையவர் என்பதை உணர்த்தும் அடிப்படை மனித உரிமை ஆப்கானிஸ்தானில் மதிக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன், வாழ்வுரிமை, மத உரிமை, இடம்விட்டு இடம் செல்லும் உரிமை, அமைதியான முறையில் மக்கள் கூடிவரும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் என்றும் அருள்பணி Putzer அவர்கள், இக்கூட்டத்தில் அழைப்பு விடுத்தார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடி நிலை நீங்குவதற்கு, அனைத்து மக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஓர் உரையாடல் இடம்பெறும் என்று திருப்பீடம் நம்புகிறது என்று அருள்பணி Putzer அவர்கள், தன் உரையில் கூறினார்.
மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள புலம்பெயர்ந்தோரைக் குறித்து அறிக்கைகள் விடுவதோடு ஒவ்வொரு நாடும் திருப்தியடையாமல், அவர்களை வரவேற்கவும் தயாராக இருக்குமாறு, திருப்பீடம் விழைகிறது என்ற விண்ணப்பத்தோடு, அருள்பணி Putzer அவர்கள், தன் உரையை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment