Saturday, 4 September 2021

திருஅவையின் மூன்று புதிய இறையடியார்களின் புண்ணிய வாழ்வு ஏற்பு

 


யூதர்களோடு பணிபுரிந்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற உழைத்ததற்காக, நாத்சி படைகளால் கொடுமைப்படுத்தப்பட்டு 1944ம் ஆண்டு உயிரிழந்த துறவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஓர் அருள்பணியாளர், இரண்டு பெண் பொதுநிலையினர் என மூன்று இறையடியார்களின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஆகஸ்ட் 30, இத்திங்களன்று சமர்ப்பிக்கப்பட்டன.

இன்றைய குரவேஷியா நாட்டில் இருக்கும் Cherso எனுமிடத்தில், 1907ம் ஆண்டு பிறந்து, 1944ம் ஆண்டு இத்தாலியில் உயிரிழந்த, கன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையின் அருள்பணி Placido Cortese, 1969ம் ஆண்டு இத்தாலியில் பிறந்து அந்நாட்டிலேயே 1995ம் ஆண்டில் உயிரிழந்த குடும்பத் தலைவி, இறையடியார் Maria Cristina Cella Mocellin,  1914ம் ஆண்டு இத்தாலியின் உரோம் நகரில் பிறந்து 2012ம் ஆண்டு அந்நகரிலேயே உயிர்துறந்த பொதுநிலை விசுவாசி Enrica Beltrame Quattrocchi  ஆகிய மூவரின் புண்ணிய வாழ்வு விவரங்களை, புனிதர், மற்றும், அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து சமர்ப்பித்தார்.

இத்தாலியிலுள்ள பதுவை நகர் புனித அந்தோனியார் பெருங்கோவிலில் பணியாற்றிய இறையடியார், அருள்பணி Placido Cortese அவர்கள், இரண்டாம் உலகப்போரின்போது, புலம்பெயர்ந்த மக்களோடு, குறிப்பாக, யூதர்களோடு பணிபுரிந்து அவர்களின் உயிரைக்காப்பற்ற உழைத்ததற்காக, நாத்சி படைகளால் கொடுமைப்படுத்தப்பட்டு 1944ம் ஆண்டு உயிரிழந்தார்.

தற்போது, வீரத்துவ பண்புகளுக்காக ஏற்கப்பட்டுள்ள Enrica Beltrame Quattrocchi அவர்களின் பெற்றோர் Luigi Beltrame Quattrocchiயும், Maria Corsiniயும், ஏற்கனவே திருஅவையில் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறையடியார் Maria Cristina Cella Mocellin என்பவர், தன் மூன்றாவது குழந்தையை கருவில் சுமந்துகொண்டிருந்தபோது, இடது காலில் ஏற்பட்ட அரிதான ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தன் கருவை கலைக்க சம்மதிக்காத தாயாக, தன் 26ம் வயதில்  காலமானார்.


No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...