கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் முன்வைக்கப்படவிருக்கும் நிதி திட்டங்கள் குறித்த ஒப்புரவு சட்டவரைவில், உரிய அனுமதியின்றி நாட்டிற்குள் வாழும் வெளிநாட்டவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்ட திருத்தங்கள் கொணரப்பட வேண்டும் என்பதற்கு அந்நாட்டின் அனைத்து ஆயர்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களின் சமுதாயப் பாதுகாப்பு வளையத்தை மேலும் விரிவாக்கும் நோக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 350 கோடி டாலர் திட்டத்தில், உரிய அனுமதியின்றி வாழும் வெளிநாட்டவர்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் திட்டத்தையும் உள்ளடக்கும் அரசின் முயற்சிகளுக்கு தங்கள் முழு ஆதரவையும் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.
அனுமதியின்றி குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுள் நியாயமான கோரிக்கையுடையோர் அங்கீகரிக்கப்படவேண்டும் என சில விதிமுறைகளை செப்டம்பர் 13, திங்கள்கிழமை, அமெரிக்க செனட் அவையின் நீதி குழு நிறைவேற்றியதைக் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்ட அமெரிக்க ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் அவைத்தலைவர், ஆயர் Mario E. Dorsonville அவர்கள், இந்த நடவடிக்கை, பொதுநலனுக்கும் குடும்பங்களுக்கும் ஒரு பெரிய மைல்கல் என கூறினார்.
சட்ட அனுமதியின்றி வாழ்வோரும் நாட்டின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளதால், அவர்களை, சமுதாயத்தின் பின்தங்கிய நிலைகளில் வாழும்படித் தள்ளுவது, நாட்டுக்கு அழகல்ல என, மேலும் எடுத்துரைத்தார், ஆயர் Dorsonville.
ஒப்புரவு சட்டவரைவின் இறுதி வடிவம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு மனிதனின் மாண்பும் மதிக்கப்படுவதை உறுதிச் செய்யும்வகையில் புதிய சீர்திருத்தங்கள் சட்டத்தில் இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொருளாதார கடைநிலையில் வாழும் அனைத்து மக்களுக்கும் உதவிகள், குடும்ப பலப்படுத்தல்கள், மதவிடுதலை பாதுகாக்கப்படுதல், படைப்பின் மீது அக்கறையை ஊக்குவித்தல், கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வின் மாண்பும் உரிமையும் மதிக்கப்படுதல் போன்றவைகளை வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment