Thursday 30 September 2021

சமூகத்தொடர்புகள் 56வது உலக நாளின் மையக்கருத்து

 

சென்று பாருங்கள் என்று, 2021ம் ஆண்டுக்குரிய செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, 2022ம் ஆண்டு, 'செவிமடுப்பதை மீண்டும் கற்றுக்கொள்ள' என்பதை தன் மையக்கருத்தாகத் தெரிவுசெய்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 29, இப்புதனன்று, தலைமைத் தூதர்களும் புனிதர்களுமான மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபேல் ஆகியோரின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டர் பதிவை, இம்மூவரை மையப்படுத்தி வெளியிட்டார்.

"இறைவன் அருளின் தூதர்களாக விளங்கும் தலைமைத் தூதர்களான மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபேல் ஆகியோரை திருஅவை இன்று நினைவுகூருகிறது. அவர்களிடம் நம்மையே கையளிப்போம். அதன் வழியே, நம் நற்செயல்களால் கடவுளின் அன்பு இவ்வுலகில் வெளிப்படட்டும்" என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

நமது நம்பிக்கையின் பதிலிருப்பாக, இறைவன் மீதும், அயலவர் மீதும் நாம் கொண்டுள்ள அன்பு விளங்கட்டும் என்று, தன் புதன் மறைக்கல்வி உரையில், திருத்தந்தை கூறிய ஒரு கருத்து, அவரது இரண்டாவது டுவிட்டர் பதிவாக வெளியானது.

மேலும், செப்டம்பர் 29ம் தேதி, உணவை வீணாக்குவதைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மூன்றாவது டுவிட்டர் செய்தி இக்கருத்தை வலியுறுத்தி வெளியிடப்பட்டது.

"பட்டினி என்ற பயங்கரக் கொடுமைக்கு எதிராக போராடுவது எனில், வீணாக்குவதற்கு எதிராக போராடுவது என்றும் பொருள், உணவைத் தூக்கியெறிவது, மக்களைத் தூக்கியெறிவதற்கு சமம். நன்மைகளை உருவாக்கக்கூடிய உணவு, வீணடிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பது, பெரும் இடறலாக உள்ளது" என்ற உணர்வுப்பூர்வமான சொற்கள், திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் பதிவாக வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2022ம் ஆண்டுக்குரிய சமுகத்தொடர்புகள் 56வது உலக நாளின் மையக்கருத்தை, தலைமைத் தூதர்களின் திருநாளான செப்டம்பர் 29ம் தேதி இப்புதனன்று வெளியிட்டார்.

சென்று பாருங்கள் என்று, 2021ம் ஆண்டுக்குரிய செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, 2022ம் ஆண்டு, 'செவிமடுப்பதை மீண்டும் கற்றுக்கொள்ள' என்பதை தன் மையக்கருத்தாகத் தெரிவுசெய்துள்ளார்.

"நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்" (காண்க. லூக்கா 8:18) என்று இயேசு தன் சீடர்களிடம் கூறியதை பின்னணியாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைத்தொடர்புகளின் 56வது உலகநாளுக்குரிய கருத்தை தெரிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...