Wednesday, 29 September 2021

“உடன்பிறந்த உணர்வு: காலத்தின் அறிகுறி” நூலுக்கு அணிந்துரை

 உடன்பிறந்த உணர்வு, நீதி, அமைதி, மற்றும், மாண்பு ஆகியவை, அனைவருக்கும் கிடைக்கும் ஒரு சமுதாயத்தில், இறையாட்சி வெளிப்படுத்தப்படுகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உடன்பிறந்த உணர்வும், திருஅவையின் சமுதாயக் கோட்பாடும், மனித சமுதாயத்தின் மீது கடவுள் வைத்துள்ள அன்பில் வேரூன்றியுள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலுக்கு எழுதிய அணிந்துரையில் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்களும், அருள்பணி Christian Barone அவர்களும் இணைந்து, “உடன்பிறந்த உணர்வு: காலத்தின் அறிகுறி” என்ற தலைப்பில், எழுதிய நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வு மற்றும், சமுதாய நட்புறவு குறித்த, “Fratelli tutti” அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் எனப்படும், தனது திருமடலை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வும், திருஅவையின் சமுதாயப் போதனைகளும், இறையியலுக்கு அப்பாற்பட்டவை அல்ல, மாறாக, அவை, மனித சமுதாயத்தின் மீது கடவுள் வைத்துள்ள ஆழமான அன்பில் வேரூன்றியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மானுவேலாய் கடவுள் நம்மோடு இருக்கவந்த இயேசுவாகிய இறையாட்சியை அறிவிப்பதே நற்செய்தியின் மையம் என்றும், கடவுள், படைப்பின்மீது தமக்குள்ள ஆளுமையை உருவாக்கி, இயேசுவில், மனித சமுதாயத்தின் மீது தாம் வைத்துள்ள அன்பை முழுமையாக வெளிப்படுத்துகிறார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். 

உடன்பிறந்த உணர்வும் இறையாட்சியும்

உடன்பிறந்த உணர்வு என்ற கருத்தியல், இறையாட்சியில் எவ்வாறு வேரூன்றப்பட்டுள்ளது என்பதை தனது அணிந்துரையில் விளக்கியுள்ள திருத்தந்தை, இவ்வுலகில் இறையாட்சியை விதைப்பதற்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், அந்த இறையாட்சிப் பணியில், கிறிஸ்தவ நம்பிக்கையின் சமுதாயக்கூறை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

ஆன்மாவைக் கொல்லும் தான் என்ற முனைப்பை முறியடித்து, நற்செய்தி கூறும் உடன்பிறந்த உணர்வோடு, நம்பிக்கையை விதைத்து, மீட்பு மற்றும், விடுதலைக் கதவுகளைத் திறப்பதன் வழியாக, இவ்வுலகில் இறையாட்சியின் கனவு நிறைவேற ஒவ்வொருவரும் நம் பங்கை ஆற்றவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.  

உடன்பிறந்த உணர்வு, நீதி, அமைதி, மற்றும், மாண்பு ஆகியவை, அனைவருக்கும் கிடைக்கும் ஒரு சமுதாயத்தில், இறையாட்சி வெளிப்படுத்தப்படுகிறது என்றும், இந்த ஓர் உணர்வில், நம் அன்னை பூமியைப் பாதுகாக்கவும், அனைவரும் உடன்பிறந்தோர் என்ற ஒருமைப்பாட்டுணர்வில் சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் நாம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

இத்தாலிய மொழியில் எழுதப்பட்டுள்ள “உடன்பிறந்த உணர்வு: காலத்தின் அறிகுறி” என்ற இந்நூலை, வத்திக்கான் பதிப்பகம் வெளியிடுகிறது. செப்டம்பர் 30, வருகிற வியாழனன்று, திருப்பீடத் தகவல் தொடர்பகம், இந்நூலை, செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...