மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருஅவையின் பொறுப்பான பகுதிகளில், பொதுநிலையினர், சிறப்பாக, பெண்கள் அதிகம் பங்கேற்பதற்கு ஊக்குவிக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச்செய்தி ஒன்றின் வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அக்டோபர் 08, இவ்வியாழன் மாலையில், இம்மாதச் செபக்கருத்தையொட்டிய தன் சிந்தனைகளைக் காணொளிச் செய்தியில் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் பெண்களுக்கு தலைமைத்துவப் பங்கு அதிகமாக வழங்கப்படுவதற்கு இறைவனை மன்றாடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
திருஅவையின் திருத்தூதுப் பணியில், பொதுநிலையினரே முக்கியமானவர்கள் எனவும், திருஅவையின் பொறுப்பான பகுதிகளில் பெண்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் என்ற காரணத்தால், அவர்களுக்கு தலைமைத்துவப் பங்கு அதிகம் வழங்கப்படவேண்டும் எனவும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
எவரும் திருமுழுக்குப் பெறுகையில், அருள்பணியாளராகவோ, ஆயராகவோ அவருக்கு அது வழங்கப்படவில்லை, மாறாக நாம் அனைவரும் பொதுநிலையினராகவே திருமுழுக்கு வழங்கப்பட்டுள்ளோம். பொதுநிலையினர், திருஅவையின் முக்கிய கதாநாயகர்கள். இன்று, திருஅவையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட, பரந்துபட்ட அளவில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பொதுநிலைப் பெண்களின் பங்கு வலியுறுத்தப்படவேண்டும். திருஅவையில், குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் பெண்கள் இணைக்கப்படவேண்டும். இவ்வாறு அந்த அக்டோபர் மாதச் செபக்கருத்தில் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப்பணியை ஏற்றதிலிருந்து, திருஅவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதை, பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வருகிறார். எடுத்துக்காட்டாக, 2013ம் ஆண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று திருத்தந்தை வெளியிட்ட, நற்செய்தின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடலில், ஆண்களும், பெண்களும் சம மாண்புகொண்டவர்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், பெண்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படவேண்டும், இந்தச் சவாலை நாம் சாதாரணமாக ஒதுக்கிவிடமுடியாது (104) என்று கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதமும் தனது செபக்கருத்தை காணொளி வழியாக வெளியிட்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். பொதுநிலையினரை மையப்படுத்திய இந்த அக்டோபர் மாதச் செபக்கருத்தின் காணொளிச் செய்திக்கு, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை உதவியுள்ளது.
No comments:
Post a Comment