ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆபிரகாமின் வழிமரபில் வந்த மூன்று முக்கிய மதங்களின் தொட்டிலாக விளங்கும் மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'அனைவரும் உடன்பிறந்தோர்' ('Fratelli tutti’) திருமடல், ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று ஜோர்டன் நாட்டின் இளவரசர் Hassan Bin Talal அவர்கள் கூறியுள்ளார்.
அக்டோபர் 4ம் தேதி வெளியிடப்பட்ட திருமடலைக் குறித்து al-Arab என்ற அரபு மொழி இதழுக்கு இளவரசர் Hassan Bin Talal அவர்கள் வழங்கிய பேட்டியில், இந்தத் திருமடல், திருத்தந்தையும், அல் அசார் தலைமை குருவும் வெளியிட்ட 'மனித உடன்பிறந்த நிலை' என்ற இணை அறிக்கைக்கு விளக்கம் தருவதுபோல் அமைந்துள்ளது என்று கூறினார்.
ஜோர்டன் நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள பலசமய ஆய்வு அரச நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றும் இளவரசர் Hassan Bin Talal அவர்கள், இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதரும் சமமான உரிமைகள், கடமைகள் மற்றும் மாண்பினைப் பெற்றுள்ளனர் என்பதை திருத்தந்தையின் திருமடல் வலியுறுத்துகிறது என்று கூறினார்.
உடன்பிறந்த நிலை என்பதை வெறும் உணர்ச்சியாக மட்டும் கருதாமல், அந்த நிலை, மனிதருக்கு, குறிப்பாக, வறியோருக்கு ஆற்றப்படும் பணிகள் வழியே வெளிப்படவேண்டும் என்பதை இத்திருமடல் வலியுறுத்துகிறது என்று இளவரசர் Hassan Bin Talal அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கம் உலகெங்கும் பாகுபாடின்றி பரவியுள்ளது என்ற உண்மை, மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவுறுத்துகிறது என்று கூறிய இளவரசர் Hassan Bin Talal அவர்கள், இவ்வேளையில், 'அனைவரும் உடன்பிறந்தோர்' என்ற இத்திருமடல் வெளிவந்திருப்பது காலத்தின் அவசியம் என்று கூறினார். (Fides)
No comments:
Post a Comment