Friday, 23 October 2020

இலண்டன் மாநகரில் இயேசு சபையினரின் அமைதி போராட்டம்

 இலண்டன் இந்திய தூதரகத்தின் முன், பிரித்தானிய இயேசு சபையினரின் போராட்டம்

அருள்பணி ஸ்டான் அவர்கள் மீது பொய்யான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதும், முதிர்ந்த வயதில் சிறையில் அடைத்திருப்பதும், சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியாவில் நடைபெறுவது, பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை விடுவிக்கக்கோரி, பிரித்தானியாவில் பணியாற்றும் இயேசு சபையினரும், அவர்களுடன் உடன்பணியாற்றுவோரும், அக்டோபர் 21, இப்புதனன்று, இலண்டன் மாநகரில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டனர்.

பிரித்தானிய இயேசு சபையினரின் மாநிலத்தலைவரான அருள்பணி டேமியன் ஹாவர்டு (Damian Howard) அவர்கள், இலண்டனில் இயங்கிவரும் இந்திய தூதரகத்தின் தலைமை அதிகாரி Gaitri Issar Kumar அவர்களை நேரில் சந்தித்து, அருள்பணி ஸ்டான் அவர்களின் விடுதலையைக் கோரும் விண்ணப்பத்தை அளிக்க முயன்றதாக ICN கத்தோலிக்க செய்தி கூறியுள்ளது.

எங்கள் இயேசு சபை குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரர், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார். தற்போது, அவர் இவ்வாறு துன்புறுவதை எதிர்த்து கேள்விகேட்பது எங்கள் கடமை என்று அருள்பணி ஹாவர்டு அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

தன் வாழ்நாளெல்லாம் நீதிக்காகவும், அமைதிக்காகவும் உழைத்து வந்த அருள்பணி ஸ்டான் அவர்கள் மீது பொய்யான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதும், அவரை இந்த முதிர்ந்த வயதில் சிறையில் அடைத்திருப்பதும், சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியாவில் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று இயேசு சபை மறைப்பணிகள் அமைப்பின் இயக்குனர் திருவாளர் பால் சிட்னிஸ் (Paul Chitnis) அவர்கள் கூறினார். (ICN)

No comments:

Post a Comment