Friday, 23 October 2020

ஒன்றுசேர்ந்து இறைவேண்டல் செய்வது ஒரு கொடை

 உலக அமைதிக்காக பல்சமய வழிபாடு


இயேசுவைப்போல் நம்மையே தாழ்த்தி, மற்றவருக்கு உதவுவதற்கு, மற்றவராக மாறுவோம், இயேசுவோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமோ, அவ்வளவுக்கு, பரந்த மனதுடையவராய், மற்றவருக்குப் பொறுப்பானவர்கள் என்பதை உணர்வோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அன்பு மட்டுமே, காழ்ப்புணர்வை அணைத்துவிடுகின்றது, அன்பு மட்டுமே அநீதியை வெற்றிகாண்கிறது, அன்பு மட்டுமே மற்றவருக்கு இடமளிக்கிறது, அதுவே நம் மத்தியில் முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 20, இச்செவ்வாயன்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் உரோம் நேரம் மாலை 4 மணிக்கு வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, உரோம் நகரின் Campidoglio குன்றில் அமைந்துள்ள ஆராச்சேலி (Aracoeli) அன்னை மரியா ஆலயம் சென்று, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ, இங்கிலாந்தின் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Portal Welby) ஜெர்மனியின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை அவையின் தலைவர் ஆயர் ஹெய்ன்ரிச் (Heinrich Bedford-Strohm) ஆகியோருடன் இணைந்து, உலகின் அமைதிக்காக, பல்சமய செப வழிபாடு ஒன்றை தலைமையேற்று நிறைவேற்றினார்.

"எவரும் தனியாகக் காப்பாற்றப்பட முடியாது, அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வு" என்ற தலைப்பில் நடைபெற்ற, இந்த வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “உன்னையே விடுவித்துக்கொள்!” (மாற்.15:30) என்று, சிலுவையில் தொங்கிய இயேசுவை நோக்கி பழித்துரைக்கப்பட்ட சொற்களை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

“உன்னையே விடுவித்துக்கொள்”

ஒன்றுசேர்ந்து இறைவேண்டல் செய்வது ஒரு கொடை என்று, தன் மறையுரையைத் துவக்கிய திருத்தந்தை, இயேசு அனுபவித்த துன்பங்களின் உச்சகட்டத்தில் அவரை நோக்கி கொடூரமாய் உதிர்க்கப்பட்ட, “உன்னையே விடுவித்துக்கொள்” என்ற சொற்கள், நம்மையும், நமது சொந்தங்களையும் காப்பாற்றிக் கொள்வதை மட்டும் நினைக்கவைக்கும் மிகப்பெரும் சோதனையாகும், இது, சிலுவையில் அறையுண்ட கடவுள் எதிர்கொண்ட இறுதி சோதனையாகும் என்று கூறினார்.

“உன்னையே விடுவித்துக்கொள்” என்ற சொற்கள், முதலில், கல்வாரி வழியே சென்ற  சாதாரண மக்களாலும் (மாற்.15,29), இரண்டாவதாக, தலைமை குருக்கள் மற்றும், மறைநூல் அறிஞர்களாலும், மூன்றாவதாக, இயேசுவின் பக்கத்தில் சிலுவையில் அறையுண்டிருந்த ஒரு குற்றவாளியாலும் என்று, மூன்று விதமான குழுக்களிடமிருந்து இயேசுவை நோக்கி பழித்துரைக்கப்பட்டன என்றுரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். மக்களின் எதிர்பார்ப்பு

“சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்” என்ற கூறிய மக்கள், புதுமைகளை விரும்பினர், நாமுமே சிலவேளைகளில் வியப்புக்குரிய செயல்களை ஆற்றும் கடவுளை விரும்புகிறோம், ஆனால் இவரல்ல கடவுள், அது கடவுள் பற்றிய நமது உருவாக்கம் என்று கூறியத் திருத்தந்தை, பலநேரங்களில் நாம் கடவுளின் சாயலாக மாறாமல், நமது சாயலாக கடவுள் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.

கடவுளுக்குப் பதிலாக, நம்மையே வணங்கவிரும்பும் மனநிலை, அடுத்திருப்பவர் மீது புறக்கணிப்பை வளர்க்கிறது, இந்த புறக்கணிப்பு, கடவுளின் உண்மையான முகத்திலிருந்து நம்மைத் தொலைவில் நிறுத்துகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

தலைமை குருக்கள், மறைநூல் அறிஞர்கள்

இயேசு ஆபத்தானவர் என்று, அவரை சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிட்ட தலைமை குருக்கள் மற்றும், மறைநூல் அறிஞர்கள் போன்று, நாமும், நம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, மற்றவரைச் சிலுவையில் அறைவதில் சிறந்தவர்களாக உள்ளோம், இந்த யூதத் தலைவர்களுக்கு, மற்றவரைக் காப்பாற்றுவது என்பது, பயனற்றது என்று திருத்தந்தை கூறினார்.

“பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை” (மாற்.15,31)  என்று சமயத் தலைவர்கள், கேலியாகக் குற்றம்சாட்டப்பட்ட சொற்களில், விடுவிக்க என்பது இருமுறை வந்துள்ளது, ஆனால், உன்னை விடுவித்துக்கொள் என்பதன் நற்செய்தி, மீட்பின் நற்செய்தி அல்ல, மாறாக, அது, போலியானது, ஆனால், உண்மையான நற்செய்தி, மற்றவரின் சிலுவையைச் சுமந்து நடக்க அழைப்பு விடுப்பது ஆகும் என்றும் திருத்தந்தை கூறினார்.  

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்

இறுதியாக, “உன்னையும் எங்களையும் காப்பாற்று!” (லூக்.23: 39) என்று, குற்றவாளிகளுள் ஒருவன் இயேசுவைப் பழித்துரைத்து பற்றி விளக்கிய திருத்தந்தை, மற்றவருக்கு எதிராகப் பேசுவது, மற்றவரை குறைகூறுவது, நம்மிலுள்ள தீமையை அல்ல, மாறாக, அடுத்தவரில் இருக்கின்ற தீமையைச் சுட்டிக்காட்டுவது, பலவீனமானவர்கள் மற்றும் மற்ற இனத்தவரைக் குறைகூறுவதுகூட எவ்வளவு எளிதாக உள்ளது என்று கூறினார்.

இயேசுவை இவ்வாறு கேட்டு மனம்வருந்தச் செய்தது, அன்பில்லாத தன்மையே என்றும், இதுவே, தனிப்பட்ட, சமுதாய, பன்னாட்டு, மற்றும், சுற்றுச்சூழல் தீமைகளுக்கு முதல்  காரணம் என்று கூறியத் திருத்தந்தை, நம்மைப் பற்றி மட்டுமே நினைப்பது, அனைத்துத் தீமைகளுககும் தந்தை என்றுரைத்த திருத்தந்தை, அதேநேரம், மற்றொரு குற்றவாளி, இயேசுவில் தாழ்ச்சிநிறைந்த அன்பை நோக்கியதால், அவர் விண்ணகம் சேர்ந்தார் என்று எடுத்துரைத்தார்.

கல்வாரியில் கடவுளின் வெற்றி வெளிப்படுத்தப்பட்டது, அவரின் இரக்கம், இவ்வுலகிற்கு இரங்கி வந்தது, சிலுவையிலிருந்து மன்னிப்பு பொழியப்பட்டது, உடன்பிறந்த அன்பு மீள்பிறப்பு அடைந்தது என்று மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பே, நம் மத்தியில் முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையாகும் என்று கூறினார்.

நாம் உடன்பிறந்த உணர்வில் அதிகமதிகமாக வளர்வோம், இந்த உலகின் பாதையைப் பின்பற்றச் சோதிக்கப்படுகையில், “தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்” (மாற் 8:35) என்ற இயேசுவின் திருச்சொற்களை நினைவுகூர்வோம் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இயேசுவைப்போல் நம்மையே தாழ்த்தி, மற்றவருக்கு உதவுவதற்கு, மற்றவராக மாறுவோம், இயேசுவோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு, பரந்த மனதுடையவராய், மற்றவருக்குப் பொறுப்பானவர்கள் என்பதை உணர்வோம், உடன்பிறந்த உணர்வுப் பாதையில் ஒன்றுசேர்ந்து பயணிக்க ஆண்டவர் நமக்கு உதவுவராக, இவ்வாறு உண்மையான கடவுளின் நம்பிக்கைக்குரிய சான்றுகளாக மாறுவோம் என்று மறையுரையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவுசெய்தார்.

அதன்பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Campidoglio குன்றில் உள்ள Michelangelo வளாகத்தில் இடம்பெறும் அனைத்து சமயப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

 

No comments:

Post a Comment