Tuesday, 27 October 2020

இயேசுவின் படிப்பினைகளின் மூலைக் கல்லாக அன்பே இருந்தது

 மூவேளை செபவுரை - 251020


அடிபணிய வைக்கும் சட்டங்களால் அல்ல, மாறாக, அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதன் வழியாகவே, நன்னெறி, மற்றும், ஆன்மீக வாழ்வு அமைகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுள் மீதும் நமக்கு அடுத்திருப்பவர் மீதும் நாம் கொள்ளும் அன்பே, நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைக்கூறு, என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு தன் கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இயேசுவின் படிப்பினைகளின் மூலைக்கல்லாக அன்பே இருந்தது என்றார்.

இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன், திருச்சட்ட அறிஞர் ஒருவர், திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? என கேள்வி தொடுத்ததையும், அதற்கு இயேசு, ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்துவதும், நமக்கு அடுத்திருப்பவர் மீது அன்பு செலுத்துவதுமே அனைத்திற்கும் அடிப்படை என கூறியதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிபணிய வைக்கும் சட்டங்களால் அல்ல, மாறாக, அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதன் வழியாகவே, நன்னெறி, மற்றும், ஆன்மீக வாழ்வு அமைகிறது, என்பதை எடுத்துரைத்தார்.

கட்டாயப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதலின் வழியாக, நன்னெறி, மற்றும், ஆன்மீக வாழ்வைக் கட்டி எழுப்பமுடியாது, மாறாக, அன்பை அடிப்டையாகக் கொண்டதாக அது இருக்க வேண்டும் எனவும், இரண்டாவது கூறாக, கடவுள்மீதும் நமக்கு அடுத்திருப்பவர் மீதும் கொள்ளும் அன்பு, ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதது என்பதையும் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு, அடுத்தவர் மீது நாம் காட்டும் அன்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக அமைவது, இறைவன் மீதும் நமக்கு அடுத்திருப்பவர் மீதும் நாம் காட்டும் அன்பேயாகும் என இயேசு கூறியது, இறைவன் நமக்கு வழங்கியுள்ள அனைத்து நன்னெறி நெறிமுறைகளுடன் தொடர்புடையது என, மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பு, செபங்களில், குறிப்பாக, வழிபாடுகளின் வழி  வெளிப்படுத்தப்படுவதுபோல், அடுத்திருப்பவர் மீது நாம் கொண்டுள்ள அன்பு, அருகாமை, செவிமடுத்தல், மற்றவர் மீது அக்கறை போன்றவைகளை உள்ளடக்கிய உடன்பிறந்த அன்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் மனம் தளர்ந்துவிடாமல் செயல்பட, இறை இரக்கம் நமக்கு உதவிபுரிகிறது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியில் நாம் தினமும் தொடர்ந்து வாழ இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கிறார் என மேலும் கூறினார்.

No comments:

Post a Comment