ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அக்டோபர் 7, இப்புதனன்று வெளியான "Il Mio Papa" என்ற வார இதழின் இஸ்பானிய பதிப்பில், திருத்தந்தை வழங்கியுள்ள ஒரு நேர்காணலில், அவர், லொயோலாவின் புனித இக்னேசியஸ் மனம் மாறிய நிகழ்வின் 500ம் ஆண்டையொட்டி, இஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல விழைவதாகக் கூறியுள்ளார்.
இயேசு சபையை உருவாக்கிய புனித இக்னேசியஸ், 1522ம் ஆண்டு, மனம் மாறி, மன்ரேசா குகையில் தங்கியிருந்த நிகழ்வின் ஐந்தாம் நூற்றாண்டு நிறைவு கொண்டாடப்படும் வேளையில், இஸ்பெயின் நாட்டுக்கு ஒரு திருப்பயணியாக தான் செல்லவிழைவதாக, திருத்தந்தை இந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
இயேசு சபையின் உலகத்தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள், 2021 மற்றும் 2022 ஆகிய இரு ஆண்டுகள், இக்னேசிய ஆண்டாக சிறப்பிக்கப்படும் என்று, இவ்வாண்டு ஜூலை மாதத்தில், அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
2021ம் ஆண்டு, மே மாதம் 20ம் தேதி துவங்கும் இந்த இக்னேசிய ஆண்டு, 2022ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி, புனித இக்னேசியஸ் திருநாளன்று நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1521ம் ஆண்டு, மே 20ம் தேதி, பாம்பலோனா கோட்டையில் குண்டடிபட்ட இக்னேசியஸ், குணமடைந்துவந்த வேளையில் மனம்மாறி, ஒரு திருப்பயணியாக நடந்து, 1522ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, மன்ரேசா குகையை அடைந்து, அங்கு, 11 மாதங்கள் தங்கியிருந்தார்.
இந்த மனமாற்ற நிகழ்வின் 500ம் ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் நிகழ்வில் கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் விருப்பத்தை வெளியிட்டிருந்தாலும், இது குறித்த முடிவுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு நவம்பர் மாதம், தாய்லாந்து, மற்றும், ஜப்பான் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தூதுப் பயணங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறுதியாக மேற்கொண்ட பயணங்கள் என்பதும், 2020ம் ஆண்டிற்கென திட்டமிடப்பட்ட பயணங்கள், கோவிட்-19 கொள்ளைநோயின் காரணமாக இரத்து செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கன. (CNA)
No comments:
Post a Comment