மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற புதிய திருமடலைப் பாராட்டி, உலகின் பல்வேறு திருஅவைத் தலைவர்களும், பல்சமயத்தவரும் தங்கள் கருத்துக்களை வத்திக்கான் செய்தித்துறையில் பதிவுசெய்துள்ளனர்.
ஈராக் நாட்டு கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், உலகில், குறிப்பாக, நீண்டகாலமாக போர்கள் மற்றும், பெருந்துன்பங்களால் சீர்குலைந்துள்ள பகுதிகளில் புதிய விடியலுக்கு, இந்த புதிய திருமடல் வழியமைக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகில் அநீதிகள் முடிவுக்குவர இந்த திருமடல் தேவையான ஒன்று என்றும் கூறியுளள கர்தினால் சாக்கோ அவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில், தொடர்ந்து நிலவும் அரசியல் பதட்டநிலைகள் மற்றும், தற்போதைய கொள்ளைநோயின் எதிர்தாக்கம் ஆகியவற்றின் மத்தியில், திருப்பலிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த புதிய திருமடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள, நியுசிலாந்து நாட்டின் Wellington பேராயரான கர்தினால் John Dew அவர்கள், இந்த பூமிக்கோளத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதரையும், இந்த பூமிக்கோளத்தையுமே, உடன்பிறந்தோராக நோக்கவும், எல்லைகளைக் கடந்து உலகத்தைப் பார்ப்பதற்கு நம் கண்களைத் திறக்கவும், இந்த திருமடல் அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த புதிய திருமடலைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள, அமெரிக்க மற்றும், இலத்தீன் அமெரிக்க ஆயர்கள், இந்த திருமடலில், இஸ்பானிய மற்றும், இலத்தீன் கலாச்சாரம் பிரதிபலிக்கின்றது என்று கூறியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கின்ற இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்கர், இந்த செப்டம்பர் 15ம் தேதி முதல், அக்டோபர் 15ம் தேதி முடிய, இஸ்பானிய மற்றும், இலத்தீன் பாரம்பரிய கலாச்சார மாதத்தைச் சிறப்பித்துவரும்வேளையில், இந்த திருமடல், கத்தோலிக்கரின் சிந்தனைக்குப் பெரிதும் உதவுகின்றது என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவரான Los Angeles பேராயர் Jose Gomez அவர்கள் கூறுகையில், இந்த திருமடல், திருஅவையின் சமுதாயப் போதனைகளுக்கும், மனித மாண்பு மதிக்கப்படும் முறைக்கும், கருத்தாழமிக்க மற்றும், அழகான சிந்தனைகளை வழங்கியுள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் நிலை தொடங்கி, உலகளாவிய நிலை முடிய, அனைத்து அரசியல் மற்றும், பொருளாதார அமைப்புகள், உடனடியாகப் புதுப்பிக்கப்படவேண்டிய அறநெறிக் கடமைக்கும், மனிதரின் நலனுக்கு உண்மையாகப் பணியாற்றும், பொதுவான வருங்காலத்தை அமைக்கவும் இந்த திருமடல் அழைப்பு விடுக்கின்றது என்றும், பேராயர் கூறியுள்ளார்.
நம் கலாச்சாரத்தில் தனிமனிதக்கோட்பாட்டை புறந்தள்ளி வாழ்வதற்கும், ஒவ்வொரு மனிதரிலும் இயேசு கிறிஸ்துவைக் கண்டு, அன்பில் பணியாற்றுவதற்கும், இந்த திருமடல் சவாலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள பேராயர் Gomez அவர்கள், கத்தோலிக்கரும், நன்மனம் கொண்ட அனைவரும், மனிதக் குடும்பத்தின் ஒற்றுமைக்கு தங்களை அர்ப்பணிக்கவும், திருத்தந்தையின் வார்த்தைகளைச் சிந்திக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment