மேரி தெரேசா: வத்திக்கான்
ஒருமுறை டெல்லிக்குச் செல்லும் இரயில் பயணம் ஒன்றில், 12 வயது சிறுவன் ஒருவனும், அவனது அப்பாவும் பகலும் இரவுமாக சதுரங்கம் விளையாடியபடியே இருந்தனர். தற்செயலாக அந்தச் சிறுவனின் அப்பாவிடம், சக பயணி ஒருவர் பேச்சுக் கொடுத்தபோது சில உண்மைகளை அவர் அறிந்துகொண்டார். அந்தச் சிறுவன் அவரது மகன் அல்ல, மாறாக, அவன், அவரது வீட்டு பணியாளரின் மகன். அவனுக்கு அப்பா கிடையாது. சதுரங்க விளையாட்டில் அதிக ஆர்வமாக இருக்கும் அவன், தொடர்ந்து பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறான். எனவே, அவனை, அவரே போட்டி நடைபெறும் நகரங்களுக்கு அழைத்துச் சென்று வருகிறார். இவ்வாறு அவரைப் பற்றி தெரிந்துகொண்ட சகபயணி, ஆர்வம் மிகுதியால், அவரிடம், உங்களுக்கு சதுரங்க விளையாட்டில் அவ்வளவு ஆர்வமா? என்று கேட்டார். அதற்கு அவர், அப்படியெல்லாம் கிடையாது. அந்தச் சிறுவனுக்காக, நானே இப்போதுதான் இந்த விளையாட்டைக் கற்றுக்கொண்டேன். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் எவருக்கும் விளையாட்டில் ஆர்வம் கிடையாது. இந்தச் சிறுவன் ஆர்வமாக இருக்கிறான், ஏதோ என்னால் முடிந்தது. இவனுக்குத் துணையாகச் செல்கிறேன், இவனது வெற்றி என்னை மகிழ்ச்சிப்படுத்துகின்றது என்று சொன்னார். நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இடம்பெறும் நிகழ்வுகள் ஒரு பக்கம் நம்பிக்கைகள் பொய்த்துப்போவதுபோல் காட்டினாலும், இன்னொரு பக்கம், நம்மை வியக்க வைக்கும் மனிதர்களையும் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. அவர்களின் அர்ப்பணிப்புகள், அக்கறைகள், தியாகங்கள் போன்றவை, இந்த உலகத்தில் நல்ல விடயங்களும், நல்ல மனிதர்களும் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை என்பதற்குச் சான்றுகளாக உள்ளன. இந்த கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காலத்திலும், இவ்வாறு பலர் வாழ்ந்து வருகின்றனர்.
99 வயது நிரம்பிய கவுசல்யா பாட்டி
சென்னை நகரில், நங்கநல்லுார், 45வது தெருமுனையில் தள்ளுவண்டி உணவுக் கடை நடத்தும், 99 வயது நிரம்பிய கவுசல்யா பாட்டியைப் பாராட்டி, கடந்த வாரத்தில் செய்தி ஒன்று வெளியானது. “உழைப்புக்கு இலக்கணம்”, உழைக்காமல் ஒரு நாளும், உண்ண வேண்டாம்' என்பதற்கு, இந்தப் பாட்டி சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று, அச்செய்தியில் பதிவாகியிருந்தது. கவுசல்யா பாட்டி அவர்கள், மாயவரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் முன்னோர்களும், சமையல் கலையில் சிறந்தவர்கள். அதனால், அந்த பக்குவம், இவரையும் ஒட்டிக்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பலரை பெயர் சொல்லி அன்போடு அழைத்து, 'நல்லா சாப்பிடுப்பா!' என்று, கனிவோடு சொல்லும்போது, சிலருக்கு அவர் தாயாகத் தெரிகிறார். 99 வயது என்றாலும், அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து, மகள், மகனுடன் சேர்ந்து, மூன்று மணி நேரத்தில், உணவுகளைத் தயார் செய்வது முதல், வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவை, தெளிவான பார்வையுடன், நிதானமாக வழங்கி, பகல் 12 மணிக்குள் கடையை மூடி, வீட்டிற்கு புறப்படுவது வரை கவுசல்யா பாட்டி விறுவிறுப்பாக இயங்குகிறார். வீட்டிற்குச் சென்றதும், மகள், மகன் ஓய்வு எடுக்கும் நேரத்தில், அவர்களுக்கு மதிய உணவு தயார் செய்துவிட்டு, அடுத்த நாளுக்குத் தேவையான வேலைகளைப் பார்க்கத் துவங்குகிறார். கொரோனா கொள்ளைநோயால், இருபது நாள்கள், கடையைத் திறக்க முடியாமல் போனது, பணத்தளவில் பாதிப்பு இல்லை என்றாலும், மனத்தளவில் தங்களைப் பாதித்தாக, கவுசல்யா பாட்டி கூறியுள்ளார். நல்ல விடயங்கள், நல்ல மனிதர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம்
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், அக்டோபர் 25, இஞ்ஞாயிறன்று நல்லதொரு செய்தியை வெளியிட்டுள்ளார். அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம், உலக அளவில் 2021ம் ஆண்டு, சனவரி மாதம் 22ம் தேதி, நடைமுறைக்கு வரும் என்பதே அந்தச் செய்தி. அணு ஆயுதங்கள் வெடிப்பு, மற்றும், அந்த ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டவேளைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த ஒப்பந்தம் சமர்ப்பணம் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார். அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று, அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்திற்கு, ஐம்பதாவது நாடாக, மத்திய அமெரிக்க நாடான கொன்டூராஸ் (Honduras) ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது. ஏனென்றால், இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவோம் என்று ஐம்பது நாடுகள் அறிவித்தால் மட்டுமே, இது நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம், இன்னும் 90 நாள்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன் மூலம், இனிமேல் அணு ஆயுதங்கள் வைத்திருப்பது, அறமற்றது மற்றும், சட்டத்துக்கு புறப்பானது என்று கருதப்படும். இந்நிலையில், இந்த தடை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள், இனிமேல் என்ன செய்யும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும், கூட்டேரஸ் அவர்களும், 2017ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.நா.பொது அவையில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த 122 நாடுகளும், அதனை அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம், நடைமுறைக்கு வருவது பற்றி பல்வேறு தரப்புகள், மகிழ்ச்சியோடு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. உலக அளவில் அணு ஆயுதங்கள் தடைசெய்யப்படுவதற்கு முழுவீச்சுடன் உழைத்துவரும் ICAN உலகளாவிய அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Beatrice Fihn அவர்கள், இது, “அணு ஆயுதக் களைவில், புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை கொண்டுவரமுடியாது என்று பலர் கூறியிருந்தவேளையில், பல ஆண்டுகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இது சாத்தியமாகியுள்ளது என்றும், Fihn அவர்கள் கூறியுள்ளார். ICAN அமைப்பு ஆற்றிவரும் இப்பணிகளுக்கென, அந்த அமைப்பிற்கு, 2017ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகில் முதன்முதலாக, இரண்டாம் உலகப் போரின்போது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில், ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி ஆகிய நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டன. இந்த நிகழ்வின் 75ம் ஆண்டு நிறைவு நினைவுகூரப்படும் இவ்வாண்டில், இந்த நற்செய்தி வெளிவந்துள்ளது. இந்த அணு குண்டு தாக்குதல் உடனடியாகப் பேரழிவை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், 75 ஆண்டுகள் சென்றும், இன்றும் அதன் அணுக்கதிர் தாக்கம் பலரின் உடலிலும், மனத்திலும் உணரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த உலகில் இன்றும், ஏறத்தாழ 14 ஆயிரம் அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன. ஆயினும், 1980களின் மத்தியில் உலக நாடுகளில், எழுபதாயிரம் அணு ஆயுதங்கள் இருந்ததைவிட தற்போது அவை குறைவாகவே உள்ளன என்பது ஓரளவு ஆறுதல் தரும் செய்தியாகும். அமெரிக்க ஐக்கிய நாடும் இரஷ்யாவுமே அதிகமான அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு அடுத்த நிலையில், பிரான்ஸ், சீனா, பிரித்தானியா, இந்தியா, பாகிஸ்தான் வடகொரியா இஸ்ரேல் என்று நாடுகளின் பட்டியல் நீள்கிறது.
லிபியாவில் போர்நிறுத்தம்
அக்டோபர் 23, இவ்வெள்ளியன்று லிபியா நாட்டில் போரிடும் தரப்புகள், போர்நிறுத்தத்திற்கு இசைவு தெரிவித்துள்ளதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது. லிபியாவில் ஐ.நா. அமைப்பின் (UNSMIL) பிரதிநிதியாகப் பணியாற்றும் Stephanie Williams அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், லிபியா நாட்டின் சிறந்த, பாதுகாப்பான மற்றும், அமைதியான வருங்காலத்தைக் கண்முன்கொண்டு, போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அக்டோபர் 18 ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், லிபியா நாட்டின் அமைதி மற்றும், நிலையான தன்மைக்காகச் செபித்தார். அந்நாட்டில் ஏறத்தாழ 11 ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக்கொணரும் நோக்கத்தில் இடம்பெற்ற பன்னாட்டு உரையாடல்கள் நல்ல பலன்களை அளிக்கட்டும் என்றும் திருத்தந்தை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஆப்ரிக்க நாடான சூடானும் இஸ்ரேலுடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் பயனாக, மத்திய கிழக்கு வான்பரப்பு வழியாக இஸ்ரேல் விமானங்கள் பறக்கலாம் என்றும், இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு வரும் விமானங்களின் பயண நேரம் மற்றும், செலவு குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. நல்ல உள்ளம் கொண்ட உன்னத மனிதர்களால் நல்லவைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
நெல்சன் மண்டேலா
தென்னாப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவராகிய நெல்சன் மண்டேலா அவர்கள், அந்நாட்டில், 1948ம் ஆண்டு முதல், 1991ம் ஆண்டு வரை, நடைமுறையில் இருந்த கடுமையான நிறுவெறிக்கு எதிராகப் போராடியதற்காக, ராபன் தீவில், தனிமைச் சிறையில், சுண்ணாம்புக்கல் உடைப்பில், 27 ஆண்டு சிறையில் இருந்தவர். பின்னர் 1994ம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, அவர் அரசுத்தலைவரானார். அச்சமயத்தில் ஒருநாள், அவர், தனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன், உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்தார். அங்கு அவர்கள் எல்லாரும் ஒரே மேஜையில் அமர்ந்தனர். ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தினர். அப்போது அவர் அமர்ந்திருந்த மேஜைக்கு எதிராக இருந்த மற்றொரு மேஜையில் ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார். அதைக் கவனித்த நெல்சன் மண்டேலா அவர்கள், அவரது படைவீரர் ஒருவரை அனுப்பி, எதிர் மேஜையில் அமர்ந்திருந்த அந்த நபரையும், அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு வந்து அவர்களுடன் ஒன்றாக உணவருந்தும்படி அழைத்துவரச் சொன்னார். அந்த நபரும் அவர் ஆர்டர் கொடுத்த உணவோடு வந்து, அவர்களது வட்டத்தில் அமர்ந்து சாப்பிட்டார். எல்லாரும் உணவு உண்டு முடித்தவுடன், அந்த நபரும் புறப்பட்டார். அவர் சென்றபின்னர், மண்டேலா அவர்களின் படை வீரர் ஒருவர், அவரிடம், அந்த மனிதர் பார்ப்பதற்கு கடும் நோயாளியாகத் தெரிகிறார். ஏனென்றால், அவர் உண்ணும்போது கைகள் மிகவும் நடுங்கின என்றார். அப்போது மண்டேலா அவர்கள் இவ்வாறு சொன்னார். வீரரே, உண்மை அதுவல்ல. நான் முன்னர் சிறையில் இருந்தபோது, இந்த மனிதர்தான் எனக்கு சிறைக்காவலராக இருந்தார். அவர் என்னை அடிக்கடி கொடுமைப்படுத்தித் துன்புறுத்தும்போதெல்லாம், நான் கூக்குரலிட்டு, களைத்து, இறுதியில் கொஞ்சம் தண்ணீர் அருந்தக் கேட்பேன். ஆனால் அவ்வேளையில், இதே அந்த மனிதர், என்னிடம் வந்து நேராக, என் தலைமேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார். இப்போது அவர் என்னை இனம் கண்டுகொண்டார். நான் இப்போது தென்னாப்ரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், அவருக்கு பதிலடிக் கொடுப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார். ஆனால் இது எனது பழக்கமல்ல. எனது குணமும் அல்ல. பழிக்குப் பழி வாங்கும் மனநிலை, ஒரு நாட்டையோ, தனி மனிதரையோ ஒருபோதும் தட்டியெழுப்பாது. மாறாக அது நாட்டையே அழித்துவிடும். அதேநேரம் சில விடயங்களில் மனதின் சகிப்புத்தன்மை, பெரிய பேரரசுகளையே உருவாக்கும்"(https://orupaper.com). இவ்வாறு சொல்லியுள்ள, கறுப்பு காந்தி என அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா அவர்கள், இந்த உலகை மாற்றி, அதை வாழ்வதற்குச் சிறந்த இடமாக அமைப்பது, நம் ஒவ்வொருவரின் கையில் உள்ளது என்றும் கூறியுள்ளார். நாமும், நல்ல மனிதர்களாக, இந்த உலகு, அனைவரும் வாழ்வதற்குச் சிறந்த இடமாக அமைய நம் பங்கை ஆற்றுவோம்.
No comments:
Post a Comment