Thursday, 1 October 2020

சமூகத் தீமைகளிலிருந்தும் குணம் பெறவேண்டும்

 புதன் மறைக்கல்வியுரையின்போது - 300920


இறைவன் வழங்கியுள்ள மதிப்பீடுகளுக்கு இயைந்தவகையில், ஒரு சமூகத்தை வடிவமைப்பதில், மனித மாண்பை மதித்தல், ஒருமைப்பாடு, ஒருங்கிணைந்து உழைத்தல் போன்றவை முக்கியத்துவம் நிறைந்தவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கொரோனா தொற்றுநோய் குறித்தே கடந்த பல வாரங்களாக தன் புதன் மறைக்கல்வி உரைகளில் சிந்தனைகளைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், வத்திக்கான் புனித தமாசு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, 'நம்மை மீட்டு குணப்படுத்தும் இயேசுவோடு இணைந்து, வருங்காலத்திற்குத் தயாரித்தல்' என்ற தலைப்பில் கருத்துக்களை வழங்கினார்.

முதலில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் 12ம் பிரிவிலிருந்து முதல் பகுதி வாசிக்கப்பட்டது.

எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும், அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின்பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். (எபிரே.12,1-2)

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, கடந்த சில வாரங்களாக, தற்போதைய கொள்ளைநோயின் விளைவுகளைக் குறித்து, கத்தோலிக்கத் திருஅவையின் கோட்பாடுகளின் ஒளியில் நாம் நோக்கி வந்த மறைக்கல்வித்தொடர், இன்று நிறைவுக்கு வருகிறது. இந்த நம் உலகம், இந்த கொள்ளைநோயிலிருந்து மட்டுமல்ல, இந்த மனித குலத்தின் நம் சகோதரர் சகோதரிகளுக்கு, பெரும் துயர்களை அளித்துவரும், அநீதி, சரிநிகரற்றத்தன்மை, மக்களை ஒதுக்கிவைத்தல் போன்ற சமூகத் தீமைகளிலிருந்தும் குணம் பெறவேண்டும். இறைவன் வழங்கியுள்ள மதிப்பீடுகளுக்கு இயைந்தவகையில், ஒரு சமூகத்தை வடிவமைப்பதில், மனித மாண்பை மதித்தல், ஒருமைப்பாடு, ஒருங்கிணைந்து உழைத்தல் போன்றவை எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தவை என்பதை நாம் கடந்த வாரங்களில் சிந்தித்துப் பார்த்தோம்.

இறை மதிப்பீடுகளின்படி நாம் கட்டியெழுப்பவேண்டும் என எதிர்பார்க்கப்படும் உலகம்,  சமூகத்தின் நலிந்த மக்களுக்கும், ஏழைகளுக்கும் முதலிடம் கொடுப்பதாகவும், படைப்பின் கனிகளை பொறுப்புடன் காக்கும் நம் கடமையை உள்ளடக்கியதாகவும் இருக்கும். நோயுற்ற மக்களுக்கு இயேசு, உடல், மற்றும், உள்ள நலத்தைக் கொணர்ந்ததுபோல், நாமும் செயல்படவேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும்,  சமூகத்தின் பங்கேற்பையும், அனைவரையும் உள்ளடக்கிய சூழலையும், அங்கு நீதியையும், உருவாக்குவதற்குத் தேவைப்படும் நற்செய்தியின் குணப்படுத்தும் சக்தியை கொணர்பவர்களாக நாம் செயல்படவேண்டும். இவ்வாறு செயல்படுவதன் வழியாக, நாம் இறையருளின் துணையுடன் தற்போதைய கொள்ளைநோய் நெருக்கடியிலிருந்து புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளுடன் வெளிவந்து, மனித மாண்புக்கும், மனிதரின் உன்னத அழைப்பிற்கும் இயைந்த உலகை கட்டியெழுப்ப முன்வருவோம்.

"Sacrae Scripturae affectus"

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், புனித. ஜெரோமின் திருவிழாவான இப்புதனன்று, "Sacrae Scripturae affectus" என்ற திருத்தூது மடலில், தான் கையெழுத்திட்டுள்ளதைக் குறிப்பிட்டார். புனித. எரோணிமுஸ் என தமிழில் அழைக்கப்படும் புனித ஜெரோம் அவர்கள், இறைபதம் சேர்ந்ததன் 1,600ம் ஆண்டு இப்புதனன்று நினைவுகூரப்படுவது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்தை தன் வாழ்வின் மையமாக வைத்து செயலாற்றிய திருஅவையின் மறைவல்லுனராகிய இவரின் எடுத்துக்காட்டு, புனித விவிலியத்தின் மீது, நாம் புதுப்பிக்கப்பட்ட அன்பை கொண்டிருக்கவும், இறைவார்த்தையோடு தனிப்பட்ட முறையில் உரையாடவும் உள்ள ஆவலைத் தூண்டுவதாக, என்றார்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

No comments:

Post a Comment