Tuesday, 6 October 2020

மதச்சுதந்திரத்தைக் காக்கும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு

 அமெரிக்க வெளிநாட்டு உறவுகள் துறையின் செயலர் மைக்கில் பொம்பேயோ, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்


சீனாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டில், அரசுத்தலைவர் தேர்தலில் பயன்படுத்துவது, சரியான வழிமுறை அல்ல - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரச்சனைகளைத் தீர்க்கும் அரசியல் திறமைகள் வழியே, பன்னாட்டு மதச்சுதந்திரத்தைக் காக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்யும் கருத்தரங்கு ஒன்றை, திருப்பீடத்திற்கென பணியாற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரகம் செப்டம்பர் 30 இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்தது.

திருப்பீடத்தின் சார்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களும், இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பில் இக்கருத்தரங்கில் பங்கேற்ற வெளிநாட்டு உறவுகள் துறையின் செயலர் மைக்கில் பொம்பேயோ அவர்கள், மதச் சுதந்திரம் தொடர்பாக சீனாவில் நிகழும் அடக்கு முறைகள் குறித்து தன் துவக்க உரையில் கவலையை வெளியிட்டார்.

திருத்தந்தையின் வாழ்த்துக்களை இக்கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன் பகிர்ந்துகொண்ட பேராயர் காலகர் அவர்கள், பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படும் அரசியல் திறமைகள், பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் இரு தரப்பினர் அல்லது பல தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

மதங்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் எப்போதும் உடல் சார்ந்த வன்முறைகளாக மட்டும் இல்லாமல், அவை உள்ளம் சார்ந்ததாகவும் அமைந்துள்ளன என்று பேராயர் காலகர் அவர்கள் குறிப்பிட்டு, 'சரியான அரசியல் கண்ணோட்டம்' என்ற பெயரில், மனசாட்சி தொடர்பான சுதந்திரங்கள் பறிக்கப்படுவதும் மதத்திற்கு எதிரான வன்முறையே என்று கூறினார்.

இக்கருத்தரங்கின் இறுதியில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், தனிப்பட்ட மனிதரின் சுதந்திரம் என்ற கருத்து, பெருமளவு மிகைப்படுத்தப்படுவதால், அது, ஒருவரின் மனசாட்சி தொடர்பான விடயங்களிலும் தலையிட்டு, தனி மனிதர்களுக்கு துன்பங்களைத் தருகிறது என்று குறிப்பிட்டார்.

சுயநலத்தை மட்டும் முன்னிறுத்தும் பல்வேறு கொள்கைகள், மனித வாழ்வின் வேறு பல உயர்ந்த கொள்கைகளை புறந்தள்ளி விடுவது, மதச் சுதந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கூறு என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

சீனாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டில், அரசுத்தலைவர் தேர்தலில் பயன்படுத்துவது, சரியான வழிமுறை அல்ல என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளின்போது கூறினார்.

No comments:

Post a Comment