Tuesday, 27 October 2020

கடவுள் விரும்புவது கபடற்ற மனதை

  காலணிகள் கடை ஒன்றில் சிறுவன்


நாம் எப்போதெல்லாம் கனிவன்பை வெளிப்படுத்துகிறோமோ, அப்போதெல்லாம் கடவுளாகிறோம். காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்

மேரி தெரேசா: வத்திக்கான்

சிறுவன் ஒருவன், குளிர் காலம் ஒன்றில், காலணிகள் கடை ஒன்றின் சன்னல் வழியே அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலணிகளை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். அந்நேரத்தில் அந்தச் சிறுவனின் தோளில் மென்மையான  கரமொன்று படிந்தது. அவன் திரும்பிப் பார்த்ததும், அவனைத் தொட்ட பெண்மணி ஒருவர், புன்னகை நிறைந்த முகத்துடன், அச்சிறுவனிடம், என்ன பார்க்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்றான். உடனே சிறுவனை கடையின் உள்ளே தூக்கிச் சென்ற அந்த பெண்மணி, புழுதிபடிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும், காலணிகளையும் தேர்ந்தெடுத்து அவனுக்கு அணிவித்தார். பின்னர், அந்த சிறுவனிடம், அந்த பெண்மணி, நான் யார் தெரியுமா? என்று கேட்டார். தான்தான் அந்த காலணிகள் கடையின் உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பியிருந்த அந்த பெண்மணி, அந்த சிறுவனை ஆவலோடு பார்த்தார். ஆனால் அந்த சிறுவனோ, எனக்குத் தெரியுமே, நீங்கள்தான் கடவுளின் துணைவியார் என்று பதில் சொன்னான்.

No comments:

Post a Comment