மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருப்பீடத்தின் பொருளாதாரம், கண்ணாடி வீடுபோன்று, ஒளிவுமறைவின்றி விளங்கவேண்டும், என்றும், திருப்பீடம், அதன் வளங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றது என்பதை அறிந்துகொள்வதற்கு, விசுவாசிகளுக்கு உரிமை உள்ளது என்றும், திருப்பீட பொருளாதாரச் செயலகத்தின் (SPE) தலைவர், அருள்பணி ஹூவான் அந்தோனியோ குவரேரோ ஆல்வெஸ் (Juan Antonio Guerrero Alves) அவர்கள் கூறினார்.
அக்டோபர் 01, இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் 2019ம் ஆண்டின் நிதிநிலைமை குறித்து, வத்திக்கான் ஊடகத்திற்குப் பேட்டியளித்த இயேசுசபை அருள்பணியாளரான குவரேரோ அவர்கள், திருப்பீடத்தின் வளங்கள், அதன் மறைப்பணிக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை விளக்குவதற்கு விரும்புகின்றோம் என்று கூறினார்.
2019ம் ஆண்டில் திருப்பீடத்தின் மொத்த வருவாய் 30 கோடியே 70 இலட்சம் யூரோக்கள், ஆனால், அதன் செலவு 31 கோடியே 80 இலட்சம் யூரோக்கள் என்றும், இதனால் 1 கோடியே 10 இலட்சம் யூரோக்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த அளவு, 2018ம் ஆண்டைவிட குறைவு என்றும், 2018ம் ஆண்டில் 7 கோடியே 50 இலட்சம் யூரோக்கள் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும், அருள்பணி குவரேரோ அவர்கள் கூறினார்.
திருப்பீடம் என்று சொல்கையில், நற்செய்தி அறிவிப்புப்பணி, சமூகத்தொடர்பு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், கல்வி, தேவையில் உள்ள திருஅவைகளுக்கு உதவி, அருள்பணியாளர்கள் பயிற்சி போன்ற, அகில உலக திருஅவைக்கு, திருத்தந்தை ஆற்றும் மறைப்பணியில், அவருக்கு உதவுகின்ற அறுபது துறைகள் மட்டுமே என்றும், அருள்பணி குவரேரோ அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த வரவுசெலவு விவரங்கள், வத்திக்கான் நகர நாடு முழுவதையும், அதாவது வத்திக்கானின் மேலாண்மை அலுவகம், வத்திக்கான் வங்கி (IOR), புனித பேதுரு காசு நடவடிக்கை, மற்றும், திருப்பீடத் துறைகளோடு பணியாற்றும் பல அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது அல்ல என்பதையும் குறிப்பிட்டார், அருள்பணி குவரேரோ.
தான் செய்தித்தாள்களை வாசிக்கிறேன் எனவும், சில விவகாரங்களில், திருப்பீடத்திற்கு தவறான ஆலோசனைகள் மட்டும் வழங்கப்படுவதில்லை, மாறாக, திருப்பீடம் ஏமாற்றப்படுகின்றது எனவும் உரைத்த அருள்பணி குவரேரோ அவர்கள், கடந்தகாலத் தவறுகளிலிருந்து அல்லது, கவனமின்மைகளிலிருந்து பாடம் கற்றுவருகிறோம் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில், இத்தகைய தவறுகளைக் களைவதற்கு, திருப்பீடத்தின் பல்வேறு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பும், தொடர்புகளும் உள்ளன என்றும், ஒத்துழைப்பில் முக்கிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், திருப்பீடச் செயலகம், APSA அமைப்பு, பொருளாதாரச் செயலகம் ஆகிய மூன்றும் ஒன்றுசேர்ந்து செயல்படுகின்றன என்றும் அருள்பணி குவரேரோ அவர்கள் கூறினார்.
திருப்பீடத்தின் சொத்துக்களை மேலாண்மை செய்யும் APSA அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் வத்திக்கான் முதலீடுகள் அனைத்தும் கொண்டுவரப்படவேண்டும் என்று, 2018ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், திருத்தந்தையின் இந்த விண்ணப்பம் சிறிது சிறிதாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் அருள்பணி குவரேரோ அவர்கள் கூறினார்.
கடந்த மே மாதத்தில், கொரோனா தொற்றுக்கிருமி பரவத்தொடங்கியதிலிருந்து, திருப்பீடத்தின் வருவாய், அடுத்த நிதியாண்டில், 30 முதல் 80 விழுக்காடு வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் எடுத்துரைத்த அருள்பணி குவரேரோ அவர்கள், புனித பேதுரு காசு நடவடிக்கைக்கு விசுவாசிகள் வழங்கும் நன்கொடைகள், திருப்பீடத்தின் 35 விழுக்காடு செலவுக்கு உதவுகின்றது என்றும் கூறினார்.
விசுவாசிகள், திருஅவையின் மறைப்பணிக்கு உதவ விரும்புகின்றனர், இவற்றை நேர்மை, முன்மதி, மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றுடன் நிர்வகிக்க வேண்டும், அதேநேரம், இந்த நன்கொடைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு கொள்கைகள் அவசியம் என்றும், பொருளாதாரச் செயலகத்தின் தலைவரான அருள்பணி குவரேரோ அவர்கள் கூறினார்.
உலக அளவில் 125 திருப்பீடத் தூதரகங்கள் மற்றும், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளில் திருப்பீடத்தின் நிரந்தர பிரதிநிதிகளாகப் பணியாற்றும் குழுமங்களுக்கு 4 கோடியே 30 இலட்சம் யூரோக்கள் செலவாகின்றன, அதோடு ‘லொசர்வாத்தோரே ரொமானோ’ நாளிதழ், ஒவ்வொரு நாளும் 40 மொழிகளில், 24 மணி நேரமும் ஒளி-ஒலிபரப்பும் வத்திக்கான் வானொலி, மற்றும், வத்திக்கான் ஊடகங்களுக்கும் குறிப்பிட்ட அளவு செலவாகின்றது என்பதையும் அருள்பணி குவரேரோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment