மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உரோம் நகரம், இத்தாலிய ஆட்சிப்பகுதியோடு இணைக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய நிகழ்ச்சி ஒன்றில், உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இந்த இணைப்பிற்குப்பின் இடம்பெற்ற திருஅவையின் வரலாறு பற்றி எடுத்துரைத்தார்.
1870ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, இத்தாலிய அரசர் 2ம் விக்டர் இம்மானுவேலின் ஆணையின்பேரில், படைத்துருப்புக்கள், உரோம் நகரின் Porta Pia பாதுகாப்பு வாயில் வழியாக நுழைந்தது, பாப்பிறை அரசுகள் முடிவுக்கு வந்ததன் அடையாளமாக இருந்தது.
இந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக, இத்தாலிய இராணுவத்தின் வரலாற்றுத் துறையின் தலைவர்களின் ஒத்துழைப்போடு, பாப்பிறை வரலாற்று அறிவியல் குழுமம், இவ்வியாழன், இவ்வெள்ளி (அக்டோபர் 1, 2) ஆகிய நாள்களில், உலகளாவிய கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில், ஏராளமான சமய, இராணுவ மற்றும், பொதுமக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், அக்டோபர் 2, இவ்வெள்ளியன்று உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இத்தாலிய முடியாட்சியின் இராணுவம், Porta Pia வாயிலில் அத்துமீறி நுழைந்ததை, திருப்பீடம் ஒருபோதும் இராணுவ நிகழ்வாகக் கருதவில்லை, மாறாக, அது, திருத்தந்தையின் உலகியல் சார்ந்த இறையாண்மைக்கு எதிராக, மதத்திற்கு எதிரான கருத்தியல்களால் தூண்டப்பட்ட மக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் அடையாளம் என்று திருப்பீடம் கருதுவதாகக் கூறினார்.
அரசர் பெப்பின் மற்றும், திருத்தந்தை 2ம் ஸ்தேவான் ஆகிய இருவருக்கும் இடையே, கி.பி.754ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கையெழுத்திடப்பட்ட Quierzy ஒப்பந்தத்திலிருந்து, திருத்தந்தையின் உலகியல் சார்ந்த இறையாண்மை ஆரம்பமானது என்றும், திருத்தந்தை, எந்தவித அரசியல் அதிகாரத்திலிருந்தும் சுதந்திரமாக இருப்பதற்கும், ஆயுதம் ஏந்திய போர்களில் திருத்தந்தையைக் காப்பாற்றுவதற்கும் என, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் விளக்கினார்.
1866 மற்றும், 1867ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அருள்பணியாளர்களுக்கு எதிராக எழுந்த போக்கால், துறவுசபைகள் தடைசெய்யப்பட்டன, கடுமையான அரசியல் சக்திகளுக்கு மத்தியில், திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், பாப்பிறையின் சுதந்திரத்தைக் காப்பாற்றினார் என்றும் கூறிய கர்தினால், 1878ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் சிங்கராயர் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர், திருஅவையின் வாழ்வில், புதிய வழிகள் திறக்கப்பட்டன என்றும் விளக்கினார்.
Porta Pia நிகழ்விலிருந்து இன்றையக் காலக்கட்டம் முடிய, திருப்பீடத்தில் இடம்பெற்றுவரும் இறைப்பராமரிப்புச் செயல்கள், அதன் நினைவுகளில் தொடர்ந்து இருந்து வருகின்றது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையின் இறுதியில் கூறினார்.
No comments:
Post a Comment