ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இவ்வுலகை ஒருங்கிணைக்க கிறிஸ்தவர்கள் காணும் கனவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள "அனைவரும் உடன்பிறந்தோர்" (Fratelli tutti) திருமடல் அமைந்துள்ளது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அக்டோபர் 20 இச்செவ்வாயன்று உரோம் நகரின் Campidoglio குன்றில் நடைபெற்ற அமைதிக்காக வேண்டும் இறைவேண்டல் நாள் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயோ அவர்கள், திருத்தந்தையின் திருமடல், அக்கறையற்ற நிலை மற்றும் குற்றம் காணும் நிலையிலிருந்து நம்மை வெளிவர அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
மனிதர்கள் அனைவரும், குறிப்பாக, நலிவுற்றோர் அனைவரும் இறைவனால் அன்புகூரப்படுபவர்கள் என்பதை தன் செய்திகளிலும், உரைகளிலும் கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் ஒருமுறை அந்தக் கருத்தை இத்திருமடல் வழியே வலியுறுத்தியுள்ளார் என்று முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயோ அவர்கள் குறிப்பிட்டார்.
இத்திருமடலின் முதல் பிரிவில் இவ்வுலகில் நிலவும் இருளைக் குறித்து பேசும் திருத்தந்தை, இன்றைய உலகின் பாவங்களை நீக்க, அறிவியல் சார்ந்த முன்னேற்றங்கள் உதவி செய்வதில்லை என்றும், அவற்றைப் புரிந்துகொள்ள ஆன்மீகக் கண்ணோட்டம் தேவை என்றும், முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயோ அவர்கள் கூறினார்.
இவ்வுலகம் சந்தித்துவரும் பெரும்பாலான தீமைகளுக்கு, கிறிஸ்தவ மறையின் உயிர் நாடியான அன்பு என்ற மந்திரம் பெரும் உதவியாக இருக்கும் என்றும், இதுவே, கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகிற்கு வழங்கக்கூடிய உண்மையான தீர்வு என்றும் இத்திருமடல் உணர்த்துகிறது என்பதை, முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயோ அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள இத்திருமடலில் நல்ல சமாரியரை மையப்படுத்திக் கூறியிருக்கும் கருத்துக்கள், இவ்வுலகிற்கு மட்டுமல்ல, இன்னும் குறிப்பாக மத உணர்வு கொண்டவர்கள் அனைவருக்கும் தேவையானவை என்பதை, முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயோ அவர்கள் எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment