கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
திருஅவையின் துவக்கக் காலம், இயேசுவின் வன்முறை மரணத்தின் தொடர்ச்சியான ஒரு காலக் கட்டமாக இருந்தது. இயேசுவின் சீடர்கள் வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரிந்துசென்று, நற்செய்தியை அறிவிக்கத் துவங்கிய காலத்தில், அதாவது கி.பி.41ம் ஆண்டு, பேரரசன் Caligula (இயற்பெயர் - Gaius Caesar Augustus Germanicus. ஆட்சிக் காலம் கி.பி. 37-41), ஏரோது அக்ரிப்பாவை (இயற்பெயர் - Marcus Julius Agrippa. ஆட்சிக் காலம் கி.பி. 44 வரை), யூதர்களின் அரசராக நியமித்தபோதுதான், கிறிஸ்தவர்கள் என்ற ஒரு மதத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டனர். இக்காலத்தில்தான் புனித பேதுருவும், சிறையிலிருந்து புதுமையான விதத்தில் தப்பினார். இது நடந்து 21 ஆண்டுகளுக்குப்பின், உரோம் நகரில், கிறிஸ்தவ மதம் வேகமாகப் பரவிவந்த காலத்தில், 64ம் ஆண்டு, ஜூலை மாதம், உரோம் நகரில் பெருந்தீ பரவி, பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அப்போது, மன்னர் நீரோவுக்கு எதிரான எதிர்ப்பும் வலுப்பெற்றிருந்தது. பார்த்தார், மன்னர். இன்றைய அரசியல்வாதிகளைப்போல், அவருக்கும், யார் மீதாவது பழியைப்போட்டு, மக்கள் கவனத்தைத் திசை திருப்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிறிஸ்தவர்கள்தான் அவர் கண்முன் வந்தனர். கிறிஸ்தவர்களே உரோம் நகரை எரித்ததாகக் கூறி, மக்களைத் தூண்டிவிட்டு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான மக்களின் போக்கையும், அதன் வழி சித்ரவதைகளை இரசிக்கும் மனப்பான்மையையும் அதிகரித்து, நியாயப்படுத்தினார்.
இத்தகையச் சுழலில், உரோமைக் குடிமகனாக இருந்த புனித பவுல், தலை துண்டிக்கப்பட்டும், யூதரான புனித பேதுரு தலைகீழாய் சிலுவையில் அறையப்பட்டும், கொல்லப்பட்டனர். புனித பேதுருவின் இடத்தில் உரோமைய ஆயராக, அதாவது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டவர்தான், புனித லீனுஸ். புனிதர்கள் இரேணியுஸ், Hippolytus, வரலாற்று ஆசிரியர்கள் Julius Africanus, Eusebius, ஆகியோரின் குறிப்புகளிலும், 354ம் ஆண்டின் லிபேரிய அட்டவணை என்ற ஏட்டிலும், லீனுஸ் அவர்களே, திருஅவையின் இரண்டாவது திருத்தந்தை என்பது கூறப்பட்டுள்ளது. இவர்தான், புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமடலின் 4ம் பிரிவு, 21ம் இறைவாக்கியத்தில் குறிப்பிடப்படும் (‘ஆபூல், பூதன்சு, லீனு, கிளாதியா மற்ற எல்லாச் சகோதரர்களும் சகோதரிகளும் உனக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்) லீனு என்று, சுட்டிக்காட்டுபவர்களும் உள்ளனர். ஏறத்தாழ 12 ஆண்டுகள் இவர் திருஅவையை வழிநடத்திச் சென்றார். இத்தாலியின் Tuscanyயைச் சேர்ந்த இத்திருத்தந்தை, மறைசாட்சியாக உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவருக்குப்பின் வந்த திருத்தந்தையே, புனித கிளீட்டஸ் (கி.பி. 79-92). இவர் குறித்துச் சிறு குழப்பம் மத்திய காலங்களில் இடம்பெற்று வந்தது. அதாவது Cletus, Anacletus என இரு பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால், இரு வேறு திருத்தந்தையர்கள் அடுத்தடுத்து இருந்ததாக நம்பப்பட்டது. ஆனால், உண்மையில், இருவரும் ஒருவரே. Anacletus என்ற பெயர் கொண்டவரே, சுருக்கமாக, Cletus என அழைக்கப்பட்டார் எனத் தெரியவந்தது. இவர், ரோம் நகரை 25 பங்குத்தளங்களாக பிரித்து, பல அருள்பணியாளர்களை திருநிலைப்படுத்தினார். இவர், பேரரசர் Vespasian (கி.பி. 69 - 79) காலத்திலும், பேரரசர் Domistian (கி.பி. 81 - 96) காலத்திலும் திருத்தந்தையாக இருந்தார். புனித பேதுருவின் சீடர்களான, திருத்தந்தையர்கள் Linus, Cletus ஆகிய இருவரும், மறைசாட்சிகளாக உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
முதலாம் நூற்றாண்டு திருத்தந்தையர்களுள் புனித பேதுருவுக்குப்பின் முக்கிய இடத்தை வகிக்கிறார், புனித முதலாம் Clement (கி.மு. 88-99). புனித பேதுருவுக்குப்பின் இரண்டு திருத்தந்தையர்களை கடந்து வந்தாலும், உரோம் நகரின் பெரும் தீ விபத்துக்குப்பின், தீவிரமான கிறிஸ்தவ சித்ரவதைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. இவ்வேளையில், திருத்தந்தை முதலாம் Clement, அரசவையில் உள்ள முக்கிய தலைவர்களையே மனம் திருப்பி, கிறிஸ்தவ மறையைத் தழுவச் செய்து விடுகிறார். ஏறத்தாழ 424 அரசவை உயர்மட்டத்தினர் மதம் மாறினால் மன்னர் பார்த்துக் கொண்டிருப்பாரா? உரோம் நகர ஆட்சியாளராக இருந்தவர், உரோம் ஆயரும் திருத்தந்தையுமான முதலாம் கிளமென்டை கைதுசெய்து, மன்னர் Trajan (கி.பி. 98-117) அவர்களிடம் அனுப்பினார். மன்னரோ, திருத்தந்தை Clement அவர்களை, பளிங்குக் கல் வெட்டும் இடத்திற்குக் கூலியாளாக தண்டனையளித்து அனுப்பிவைத்தார். இத்திருத்தந்தை, கல்லுடைக்கும் சிறைக்கூடத்திலாவது சும்மா இருந்திருக்கலாம். இறைவனுக்கு ஆற்றவேண்டிய தொண்டு, அவரை அமைதியாய் இருக்கவிடவில்லை. சிறைக்கைதிகளிடையேயும் சிறைக்காவலர்களிடையேயும் நற்செய்தியைப் பரப்பினார். தண்ணீரின்றி தாகத்தால் துன்புற்ற சிறைக்கைதிகளுக்கு, அற்புத விதமாக, நீரூற்றிலிருந்து தண்ணீர் கிடைக்கச் செய்தார். பலர் மனம் மாறினர், புதுமதம் தழுவினர். இனிமேலும் இவரை விட்டுவைத்தால், கிறிஸ்தவ மறை பரவிவிடும்; நமக்கு ஆபத்து என்பதை உணர்ந்த மன்னர், இவரை நங்கூரத்தில் கட்டி கடலில் வீசிவிட ஆணை பிறப்பித்தார். கடலில் வீசப்பட்டு உயிரிழந்தார், திருத்தந்தை முதலாம் Clement.
புனித முதலாம் Clementன் உடல், பின்னர் இவரின் சீடர் Phoebius என்பவரால் ஒரு கோவிலில் பாதுகாக்கப்பட்டது. இது 860ம் ஆண்டுகளில் புனித சிறிலால் கான்ஸ்டான்டிநோபிளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது உடலின் ஒருசில பகுதிகள், உரோமுக்கும் கொணரப்பட்டு, புனித Clement பசிலிக்காவில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. புனித Clementக்குப்பின் திருத்தந்தையாக வந்தவர், கிரேக்கத்தின் Antiochவைச் சேர்ந்த புனித Evaritus (99 – 107). இவரின் தந்தை பெத்லகேமில் பிறந்த ஓர் யூதர். புனித Evaritus அவர்கள் திருத்தந்தையாக இருந்த காலத்தில்தான் Domitian கொடுங்கோலாட்சி காலம் நிறைவுற்று, Nervan-Antonine அரச வம்ச ஆட்சி இடம்பெற்றுக் கொண்டிருந்தது (கி.பி. 96 – 192). இத்திருத்தந்தை Evaritus அவர்கள், 99ம் ஆண்டு முதல் 107, அல்லது, 108வரை ஆண்டார் எனவும், அல்லது, 100 முதல் 105 வரையே ஆண்டார் எனவும் இரு வேறு சரித்திர சான்றுகள் உள்ளன. ஆனால், பரவலான கருத்துப்படி, இவர் 8 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்றார். இவர் 15 ஆயர்களையும் 7 அருள்பணியாளர்களையும் இரண்டு தியாக்கோன்களையும் திருநிலைப்படுத்தியுள்ளார்.
புனித பேதுரு உட்பட, முதல் நூற்றாண்டின் 5 திருத்தந்தையர்கள் குறித்து மிகச்சுருக்கமாக நோக்கிய நாம், வரும் வாரம், அடுத்த 5 திருத்தந்தையர்கள் குறித்து நோக்குவோம்.
No comments:
Post a Comment