மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பெலாருஸ் நாட்டில் மீண்டும் நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் அந்நாட்டு பேராயர் ஒருவர், மீண்டும் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட அனைவரும் செபிக்குமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
செப்டம்பர் 02, இப்புதனன்று, பெலாருஸ் கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்ட அறிக்கையில், மறைமாவட்டத்தின் ஆயர் ஒருவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஒப்படைக்கப்பட்ட மறைமாவட்டத்தில் தங்கி, தன் திருப்பணியை செய்வதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறப்பட்டுள்ளது.
பேராயர் Tadeusz Kondrusiewicz அவர்கள் தடைசெய்யப்பட்டிருப்பது, சட்டத்திற்கு முரணானது மட்டுமல்ல, பெலாருஸ் அரசுக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையேயுள்ள உறவுக்கு ஊறுவிளைவிக்கும் என்றும், பெலாருஸ் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
போலந்து நாட்டிற்குச் சென்றிருந்த, பெலாருஸ் நாட்டின் Minsk-Mohilev உயர்மறைமாவட்ட பேராயர் Kondrusiewicz அவர்கள், எந்தவிதமான விளக்கங்களும் சொல்லப்படாமல், எல்லைப் பாதுகாப்பு வீரர்களால், மீண்டும் நாட்டில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளார் என்று, அந்நாட்டு திருஅவையின் இணையபக்கத்தில், ஆகஸ்ட் 31ம் தேதி செய்தி பதிவாகியிருந்தது.
இதற்கிடையே, போலந்தின் கிழக்குப் பகுதியில், தனது உறவினர் ஒருவர், முதன் முதலாக திருநற்கருணை வாங்கிய திருவழிபாட்டை நிறைவேற்றுவதற்காக, அங்குத் தான் சென்றதாகவும், எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் செயல், முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதது எனவும், பேராயர் Kondrusiewicz அவர்கள் கூறியுள்ளார்.
பெலாருஸ் நாட்டில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலின் முடிவை ஏற்காத மக்கள், அரசுத்தலைவருக்கு எதிராகப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பேராயர் Kondrusiewicz அவர்கள், இந்த போராட்டதாரர்களுக்கு ஆதரவாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெலாருஸ் நாடு, முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து விடுதலை அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப்பின், 1994ம் ஆண்டிலிருந்து, அந்நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் Alexander Lukashenko அவர்கள், தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்து வருகிறார். இவர், கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 80 விழுக்காடு வாக்குகளுடன், வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்தார்.
95 இலட்சம் மக்கள் தொகையைக்கொண்ட பெலாருஸ் நாடு, இரஷ்யா, உக்ரைன், போலந்து, லித்துவேனியா, லாத்வியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. (CNA)
No comments:
Post a Comment