Tuesday, 1 September 2020

இருப்பதில் நிறைவு காண்போம்

 பாகிஸ்தான் நாட்டு பணம்


கிடைத்தவற்றை அனுபவிக்கத் தெரியாமல், கிடைக்காதவற்றைத் தேடியலைந்து அல்லலுறுகிறது, மனித மனம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் செல்கிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொள்ளவே, 100 பத்து ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்து விடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்.

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்து ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடந்தது. அந்த ஒற்றை பத்து ரூபாய் நோட்டு கிடந்த வழியில் ஒருவர் வந்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்து, அந்த நோட்டை எடுத்துக்கொண்டு உணவு விடுதிக்குப் போனார். ஒரு காப்பி குடித்துவிட்டு, அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னார். மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்.

மீதி 99 பத்து ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவர் வந்தார். இந்த நோட்டுக்கட்டை எடுத்தார். பரபரவென்று எண்ணினார். 99 நோட்டுகள். மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினார். 99 நோட்டுகள்தான்.

வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டுக் கொடுக்கமாட்டார்களே, அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு இங்கே பக்கத்தில்தான் கிடக்கவேண்டும் என்று தேட ஆரம்பித்தார். அந்த ஒற்றை பத்து ரூபாயைத் தேடினார், தேடினார், இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறார்.

பத்து ரூபாய் கிடைத்தவர் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாகச் சென்றார். 990 ரூபாய் கிடைத்தவரோ அதை அனுபவிக்காமல், இன்னும் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறார். கிடைத்தவற்றை அனுபவிக்கத் தெரியாமல் கிடைக்காதவற்றைத் தேடியலைந்து அல்லலுறுகிறோம்

No comments:

Post a Comment