Monday, 7 September 2020

யார் காரணி?

 பிரதிபலிக்கும் கண்ணாடி


என் பிரச்சினையை யாரோ வந்து தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல், நானே தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

ஒரு துறவி இருந்தார்,   அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார் .

அவ்வப்போது அதை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்வார். அவருடைய சீடர்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது. சில சமயங்களில் தங்கள் குருவை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் அந்நாட்டு மன்னர் அந்தத் துறவியைப் பார்க்க வந்திருந்தார். அவன் பணிவுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து துறவியை வணங்கியபோது அவர் வழக்கம் போல கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது மன்னருக்கு அதிர்ச்சி!

" சுவாமி நீங்கள் எல்லாவற்றையும் துறந்தவர், ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா என்ன?  என்று அவரிடம் கேட்டார் மன்னர் .

துறவி சிரித்தார். " இதே சந்தேகம் என் சீடர்கள் பலருக்கு இருக்கிறது,  அவர்கள் கேட்கவில்லை, நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.  எனக்கு ஏதாவது பெருமை கிடைத்தால் அதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள இந்த கண்ணாடியை பார்ப்பேன் .அதில் என் உருவம் தெரியும். எனக்கு பெருமை கிடைக்க நானே முதல் காரணம் என்பதை உணர்ந்து கொள்வேன். இந்த பெருமையை மண்டைக்கு ஏற்றி தலைகனம் கொண்டால் வீழ்ச்சி அடைய போவது யார் என்று கேட்டுக் கொண்டு கண்ணாடியை பார்ப்பேன் .அதில்  நான் தெரிவேன். இந்த உண்மையை புரிந்து கொண்டு என்னுடைய இயல்பு நிலையை பெறுவேன். கூடவே எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்,  பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியை பார்ப்பேன் .

சரி,  பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா அதற்கு பொருத்தமான நபர் யாரென்று தேடுவதற்காக மறுபடியும் கண்ணாடியை பார்ப்பேன், அங்கே நான் மீண்டும் தெரிவேன். எனவே, என் பிரச்சினையை யாரோ   வந்து தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல்,  நானே தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன். எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால் எனக்கு நேரும் நன்மைக்கும் தீமைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது . என் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் காரணமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் துறவி .

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...