மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்த உலகம் கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து மீண்டுவர முயற்சித்துவரும் இவ்வேளையில், இயற்கையில் கிடைக்கும் மின்சக்தியைப் பெறவும், காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும், மக்களை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற இயலும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.
TERI எனப்படும், மின்சக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தை உருவாக்கிய தொழிலதிபர் Darbari Seth அவர்களின் நினைவாக, 2002ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 28ம் தேதி, பல்வேறு முக்கிய நபர்கள் உரையாற்றி வருகின்றனர்.
ஆகஸ்ட் 28 இவ்வெள்ளி, இந்திய நேரம் பகல் 11 மணிக்குத் தொடங்கிய, 19வது Darbari Seth அவர்களின் நினைவு நிகழ்வில், ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், "புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் இடம்பெறும் முன்னேற்றம்: நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு சுடர்விடும் ஒளி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிலத்தடி எரிசக்தியைப் பயன்படுத்துவதிலிருந்து விலகி, புதுப்பிக்கத்தக்க மின்சக்தியைப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில், இந்தியா, தீவிரம் காட்டினால், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு உலகில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இந்தியா, உண்மையிலேயே, முன்னோடியாக மாற இயலும் என்று, கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.
உலகளாவியப் பொருளாதாரத்தை மாற்றுதல், இயற்கை மின்சக்தி தயாரிப்பு மற்றும், மக்களின் வாழ்வைக் காப்பாற்றும் நலவாழ்வு அமைப்புகளை ஊக்குவித்தல், எல்லாரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குதல், காலநிலை மாற்றம் முன்வைக்கும் அச்சுறுத்தலைத் தடுத்தல் போன்றவற்றில், இந்தியா, உலகை வழிநடத்துமாறு, கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
சூரியசக்தியைப் பயன்படுத்தி, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி தயாரிப்பில் இந்தியாவில் முன்னேற்றம் காணப்படுகிறது என்பதையும் ஐ.நா. பொதுச்செயலர் குறிப்பிட்டார். (UN)
No comments:
Post a Comment