Monday, 21 September 2020

பாரம்பரியம் சுமத்தும் பாரங்கள்

 மடத்தில் வளர்ந்த வெள்ளைப் பூனைக்குட்டி


பூஜைக்குத் தடையாக இருந்ததால் கட்டப்பட்ட பூனை, பூஜைக்கு முக்கியமாகத் தேவைப்பட்டது. எச்சரிக்கை! பாரம்பரியம் சுமத்தும் பாரங்கள் ஆபத்தானவை!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

துறவிகள் மடம் ஒன்றில், அனைவரும் பூஜைக்கு அமர்ந்தனர். அந்த மடத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த ஒரு பூனை, பூஜை நேரத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. மடத்தின் பெரிய குரு, அந்தப் பூனையை, ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். இவ்வாறு, சில நாட்கள், பூனை கட்டப்பட்டது, பூஜை நடந்தது. ஒரு மாதம் கழித்து, பூஜை ஆரம்பிக்கப்போகும் நேரத்தில், பூனையைக் காணவில்லை. சீடர்கள், மடம் எங்கும் தேடி, பூனையைக் கண்டுபிடித்து கொண்டுவந்து, தூணில் கட்டிவைத்துவிட்டு, பூஜையை ஆரம்பித்தனர். நாளடைவில், பூனை இல்லாமல் பூஜையைத் துவக்கக்கூடாது என்பது, எழுதப்படாத சட்டமாக உருவானது.

அடுத்த ஆண்டு, மடத்தின் பெரிய குரு இறந்தார். அதைத் தொடர்ந்து, சில மாதங்களில், அந்தப் பூனையும் இறந்தது. அடுத்தநாள், பூனையின்றி பூஜை செய்யமுடியாது என்ற கவலை மடத்தில் பரவியது. இறந்தப் பூனையைப் போல் இன்னொரு பூனையை வாங்கி வர, அல்லது, தேடி கண்டுபிடிக்க, சீடர்கள் புறப்பட்டுச்சென்றனர். புதியப் பூனை, இறந்த பூனையைப்போலவே வெள்ளையாக இருக்கவேண்டும், அதன் இடதுகண்ணைச் சுற்றி, ஒரு கருப்பு வட்டம் இருக்கவேண்டும் என்ற பல்வேறு குறிப்புகளுடன், தேடல் நடைபெற்றது.

பெரும் முயற்சிகள் எடுத்து, இறந்த பூனையைப் போலவே, மற்றொரு பூனையைக் கண்டுபிடித்தனர். அதைக் கொண்டுவந்து, மடத்தில், முந்தையப் பூனை கட்டப்பட்ட அதே தூணில் கட்டியபின்னரே, பூஜைக்கு அமர்ந்தார்கள். பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சட்டம், அந்த மடத்தில் உருவாக்கப்பட்டது.

பூஜைக்குத் தடையாக இருந்ததால் கட்டப்பட்ட பூனை, பூஜைக்கு முக்கியமாகத் தேவைப்பட்டது. எச்சரிக்கை! பாரம்பரியம் சுமத்தும் பாரங்கள் ஆபத்தானவை!

No comments:

Post a Comment