Friday, 4 September 2020

வாக்களிப்பது ஒன்றே, மியான்மாரில் நீடித்த அமைதியைக் கொணரும

 மியான்மாரில் பெண் ஒருவர் தேர்தல் அட்டையைப் பார்த்துக்கொண்டிருக்கின்றரர்


வாக்களிப்பது, அனைவருக்கும் உள்ள முக்கியமான கடமை, வாக்களிப்பது ஒன்றே, மியான்மார் நாட்டில் நீடித்த அமைதியைக் கொணரும் - யாங்கூன் பேராயர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டின் நலனை மட்டுமே மனதில் கொண்டு, ஓர் அரசியல் தலைவராக அல்ல, மாறாக, ஓர் ஆன்மீகத் தலைவராக உங்களுக்கு இச்செய்தியை வழங்குகிறேன் என்று, மியான்மார் நாட்டின் யாங்கூன் பேராயர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், பத்து கருத்துக்கள் அடங்கிய செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

உலகெங்கும் பரவியுள்ள கொள்ளைநோய், மியான்மார் நாட்டிற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று தன் செய்தியின் துவக்கத்தில் கூறும் கர்தினால் போ அவர்கள், இந்த நெருக்கடியானச் சூழலில், வருகிற நவம்பர் மாதம் மியான்மார் சந்திக்கவிருக்கும் தேர்தலை மற்றொரு சவாலாக விவரித்துள்ளார்.

மக்கள் ஆற்றவேண்டிய கடமைகளாக பத்து கருத்துக்களை தன் செய்தியில் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், வாக்களிப்பது, அனைவருக்கும் உள்ள முக்கியமான கடமை என்பதையும், வாக்களிப்பது ஒன்றே, மியான்மார் நாட்டில் நீடித்த அமைதியைக் கொணரும் என்பதையும் தன் முதல் இரு கருத்துக்களாக கூறியுள்ளார்.

ஏனைய நேரங்களில் குரல் எழுப்ப இயலாமல் தவிக்கும் மக்களுக்கு, வாக்களிப்பது ஒன்றே குரல் எழுப்பும் வாய்ப்பு என்றும், வறியோருக்காக உழைக்க முன்வரும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது முக்கியம் என்றும், கர்தினால் போ அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.

வெறுப்பையும், பிரிவையும் விதைத்து, வளர்த்துவரும் வேட்பாளர்களை அடையாளம் கண்டுகொள்வதும், பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டோரை தெரிவு செய்வதும், வாக்காளர்களின் முக்கிய பணி என்பதையும், கர்தினால் போ அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டில் பல ஆண்டுகளாகப் பரவியுள்ள, வறுமை, பாகுபாடு, தரக்குறைவான கல்வி, பட்டினி ஆகிய கொள்ளைநோய்களை அழிக்க விழையும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க, இந்தத் தேர்தல் நமக்கு உதவவேண்டும் என்ற விண்ணப்பத்துடன், யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள், தன் செய்தியை நிறைவு செய்துள்ளார். (Fides)

No comments:

Post a Comment