ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
'அமைதி' என்ற கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த ஓவியத்திற்கு பரிசு வழங்கப்படும் என்று அரசர் அறிவித்திருந்தார். நாட்டிலிருந்த பல ஓவியர்கள் தங்கள் திறமைகளையெல்லாம் வெளிப்படுத்தி, ஓவியங்களைத் தீட்டி, அரண்மனைக்குக் கொணர்ந்தனர்.
ஓவியங்கள் அனைத்தையும் பார்த்த அரசர், இறுதியில் இரண்டு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார். அவ்விரண்டில், எது மிகவும் சிறந்ததெனத் தீர்மானிப்பது, அரசருக்குக் கடினமாக இருந்தது. எனவே, அவர், ஏனைய அமைச்சர்களின் உதவியை நாடினார்.
முதல் ஓவியத்தில், சலனமற்ற நீர்ப்பரப்பைக் கொண்ட ஏரி ஒன்று தீட்டப்பட்டிருந்தது. அந்த ஏரியைச் சுற்றி, பசுமையான மலைகளும், வெண்மேகங்கள் மிதந்துவந்த நீல வானமும் தீட்டப்பட்டிருந்தன. மலைகள் மற்றும் மேகங்களின் பிம்பங்கள், கண்ணாடிபோல் தெரிந்த அந்த நீர்ப்பரப்பில் தெளிவாகத் தெரிந்தன.
இரண்டாவது ஓவியத்திலும், மலைகள் வரையப்பட்டிருந்தன. ஆனால், அந்த மலைகள், கரடுமுரடான பாறைகளாக வரையப்பட்டிருந்தன. அந்தப் பாறைகளின் நடுவே, நீர்வீழ்ச்சியொன்று கொட்டிக்கொண்டிருந்தது. மலைகளுக்கு மேல், வானத்தில், கருமேகங்கள், மின்னல்கள், மழை ஆகியவை தீட்டப்பட்டிருந்தன.
அவ்விரு ஓவியங்களையும் கண்ட அமைச்சர்கள் அனைவரும், அமைதி என்ற கருத்தை, முதல் ஓவியமே சிறந்த முறையில் வெளிக்கொணர்ந்ததெனக் கூறினர்.
ஆனால், மீண்டும் ஒருமுறை, அவ்விரு ஓவியங்களையும் கூர்ந்துநோக்கிய அரசர், இரண்டாவது ஓவியத்திற்குப் பரிசு வழங்கினார். அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், காரணம் கேட்டபோது, அரசர், இரண்டாவது ஓவியத்தில் வரையப்பட்டிருந்த ஒரு பறவையைச் சுட்டிக்காட்டினார்.
ஆர்ப்பரித்து, கொட்டிக்கொண்டிருந்த அருவிக்குப் பின்புறம் வரையப்பட்டிருந்த ஒரு புதரில், தாய்ப்பறவை, தன் கூட்டில் அமர்ந்து, குஞ்சுப்பறவைகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்ததை அரசர் சுட்டிக்காட்டினார்.
"அமைதி என்றால், நம்மைச் சுற்றி, பிரச்சனை ஏதுமற்ற நிசப்தமானச் சூழல் அல்ல. மாறாக, நம்மைச்சுற்றி அச்சுறுத்தும் பிரச்சனைகள் இருந்தாலும், உள்ளத்தில் உணரும் அமைதியே, உண்மையான அமைதி. அந்த அமைதியை, தாய்ப்பறவை உணர்த்துகிறது. எனவே, இரண்டாவது ஓவியமே, அமைதியின் முழு பொருளை வெளிக்கொணர்கிறது" என்று அரசர் விளக்கம் அளித்தார்.
இவ்வுலகை நீ துரத்திச் செல்லும்போது, கூச்சலும், குழப்பமுமே மிஞ்சும். இவ்வுலகை உன்னிடம் வருவதற்கு அனுமதித்தால், அமைதி நிச்சயம். – Zen Gatha
No comments:
Post a Comment