Tuesday, 15 September 2020

சிறந்த நீதிபதி

 குற்றவாளி


குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாதவண்ணம் தண்டனை வழங்குகிறவர்தான் சிறந்த நீதிபதி ஆவார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நீதிபதி ஒருவர், பிக் பாக்கெட் புகழ் பக்கிரியிடம், “திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடித்துவிட்டு சிறைக்கு வருகிறாயே, நீ திருந்தவே மாட்டாயா?” என்று கேட்டார். அதற்கு பக்கிரி, எத்தனை முறை பிக் பாக்கெட் அடித்தாலும் அதே தண்டனையையே தருகிறீர்கள், நீங்கள் சட்டத்தைத் திருத்தமாட்டீர்களா?” என்று கேட்டார். அந்த கேள்வி நீதிபதியின் மனதை தைத்தது. பின்னர், பக்கிரியை சிறைக்கு அழைத்துப்போகச் சொல்லிவிட்டு, சிறைக்காவலரைத் தனியாக அழைத்து, ஏதோ பேசினார் நீதிபதி. அந்த காவலரும், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பகுதியில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சாப்பாடு கிடையாது. இந்த பகுதிக்கு ஒரு சிறிய உணவகம் இருக்கிறது. நீ செய்யும் வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி தருகிறோம். அதைக் கொண்டுபோய் காசு கொடுத்து, அங்கு நீ சாப்பிட வேண்டும். காலை சிற்றுண்டி ஐம்பது ரூபாய். மதியம் ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மீதி இருக்கிற பணம் உனக்கு என்று சொல்லி அனுப்பினார். பக்கிரியும் அதை மகிழ்வாக ஒப்புக்கொண்டார். சிறைக்காவலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார். “பக்கிரி கூலியை வாங்கிக்கொண்டு, அறைக்குப் போகிற வழியில், அவனை பிக் பாக்கெட் அடிப்பது உங்கள் வேலை. அவனுக்கு அது தெரியவே கூடாது. தினம் ஒவ்வொருவராக இந்த வேலையைச் செய்யவேண்டும், யார் எப்போது செய்கிறீர்கள் என்றுகூடத் தெரியக் கூடாது. தெரிந்தால் உங்களில் யாருக்கும் சாப்பாடு கிடையாது” என்றார். அவர்களும் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள். முதல் நாளே பக்கிரி பிக் பாக்கெட்டில் காசை விட்டார். எவ்வளவு கெஞ்சியும் அவருக்கு இலவசமாக உணவு தரப்படவில்லை. பசியில் பக்கிரியைத் துடிக்கவிட்டனர். கெஞ்சி கெஞ்சிக் கேட்டபிறகு, சிறிது சாப்பிட கொடுத்தார்கள். பக்கிரி சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக்கொண்டிருந்தாலும், ஆட்டத்தை அவர்கள் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களும் பட்டினிதான். அந்த பத்துப்பேரும் விடுதலைபெற்று, வீடு திரும்பும் அந்த நாளில் அந்த நீதிபதி வந்தார். அவர் அவர்களிடம், “சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கு இல்லை. ஆனால் சிறையின் வழக்கங்களை, முன்அனுமதியோடு மாற்றும் அதிகாரம் சிறைக்காவலருக்கு உண்டு. உங்கள் மனப்பான்மை இப்போது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். அப்போது பக்கிரி “ஒரு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைசெய்து கிடைத்த பணத்தை ஒரு நொடியில் பிக் பாக்கெட் அடிச்சிட்டுப்போவது எவ்வளவு கொடுமை என்று இப்போது புரிகிறது, இனிமேல் பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனது வராது” என்றார். மற்ற ஒன்பது பேரும், நீதிபதியிடம் “பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில் துடிக்கிறதைப் பார்க்க சகிக்கவில்லை. செத்தாலும் இனிமேல் பிக்பாக்கெட் அடிக்கவே மாட்டோம்” என்று சொன்னார்கள். ஆம். குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாதவண்ணம் தண்டனை வழங்குகிறவர்தான் சிறந்த நீதிபதி ஆவார்.

No comments:

Post a Comment