மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை அருள்சகோதரிகள், அருள்சகோதரர்கள் மற்றும், ஆயிரக்கணக்கான உடன்உழைப்பாளர்கள் வழியாக, புனித அன்னை தெரேசா, ஏழைகளிலும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, இன்றும், தொடர்ந்து சேவையாற்றி வருகிறார் என்று, கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள் கூறினார்.
செப்டம்பர் 05, இச்சனிக்கிழமை காலையில், பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையின் தலைமை இல்லத்தில், புனித அன்னை தெரேசாவின் திருவிழா திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் தாமஸ் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோயால், நம்மைச் சுற்றிலும், மரணமும், பசியும், வறுமையும் நிலவுகின்றன என்று கூறினார்.
இந்த நம் காலத்தின் மிகச்சிறந்த நல்ல சமாரியர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை தெரேசாவை கூறியிருப்பது போன்று, இந்த கோவிட்-19 நெருக்கடி காலத்தில் தன்னலமற்ற மற்றும், மனத்தாராளத்துடன் சேவையாற்றும் பல மதங்களைச் சார்ந்த அனைவரும் அன்னை தெரேசாவின் வாழ்வால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று பேராயர் தாமஸ் அவர்கள் கூறினார்.
இத்திருப்பலியின் இறுதியில், அன்னை தெரேசா அவர்கள் உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையின் இன்றைய உலகத்தலைவர், அருள்சகோதரி பிரேமா அவர்கள், புனித அன்னை தெரேசா அவர்களின் கல்லறைக்கு முன்பாக வாசித்த செய்தியில், அன்னை தெரேசாவின் இதயம், கடவுளின் இதயத்தைப் பிரதிபலித்தது என்று கூறினார்.
அன்னை தெரேசா, வல்லமையும், மனஉறுதியும் கொண்டவர், அதேநேரம், மக்களின் மனங்களைத் தொடுவதில் மிகச்சிறந்த கனிந்த இதயம் கொண்டவர் என்று கூறிய அருள்சகோதரி பிரேமா அவர்கள், அன்னையின் சொற்கள், இந்த நெருக்கடி காலத்தில் துணிவைத் தருகின்றன என்றும் தெரிவித்தார். (AsiaNews)
No comments:
Post a Comment