Wednesday, 6 March 2019

மற்றுமொரு இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லை

மற்றுமொரு இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லை நொபெல் அமைதி விருது பெற்ற இளம்பெண் மலாலா

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் - நொபெல் அமைதி விருது பெற்ற மலாலா அவர்களின் வேண்டுகோள்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை என்றும், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்றும், நொபெல் அமைதி விருது பெற்ற இளம்பெண் மலாலா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த பதட்ட நிலைகுறித்து மலாலா அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் எல்லையில் பதட்டம் அதிகரித்து வருவதால், எல்லையில் வாழும் மக்கள் மீது அக்கறை கொண்டு நான் இதை கூறுகிறேன். அனைவருக்கும், போரின் கொடுமைகள் தெரியும். பழிவாங்குவதும், பதிலடி தாக்குதல்களும் ஒருபோதும் தீர்வாகாது. போர் ஆரம்பித்துவிட்டால், அது அழிவில்தான் முடியும். நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை. தற்போது, உலகின் வேறு நாடுகளில், போரின் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை, இவ்வுலகம் கண்டுகொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.
“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களும், இந்திய பிரதமர் மோடி அவர்களும், கடினமான இத்தருணத்தில், உண்மையானத் தலைமைப் பண்பை காண்பிக்க வேண்டும். இருவரும் பேச்சு வார்த்தை வழியே, தற்போதுள்ள மோதல், மற்றும், காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழப்புகளை தவிர்க்க, இந்தியா - பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை, பன்னாட்டு அரசுகள் ஆதரிக்க வேண்டும்.
“இரு நாடுகளின் குடிமக்களுக்கும் எதிரிகளாக இருப்பது, தீவிரவாதமும், படிப்பறிவின்மையும் என்பதை, இருநாட்டு மக்களும் நன்கு அறிவர்” என்று மலாலா அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். (தி இந்து)

No comments:

Post a Comment