Wednesday, 27 March 2019

அஸ்ஸாம் குழந்தைகளின் தேர்தல் அறிக்கை

அஸ்ஸாம் குழந்தைகளின் தேர்தல் அறிக்கை  தேர்தல் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் அஸ்ஸாம் மாணவிகள்

அஸ்ஸாமை, கடந்த 50 ஆண்டுகளில் 13 மிகப்பெரிய வெள்ளப்பெருக்குகள் தாக்கியுள்ளன. அவற்றில், 3,093 பேர் இறந்துள்ளனர் மற்றும், 17 கோடியே 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் முறையாகப் பள்ளிப் படிப்பைக்கூட பெறவில்லை
மேரி தெரேசா - வத்திக்கான்
இந்தியாவின் மிகப் பெரிய சனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலின் ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல்  போன்ற வேலைகளில் ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ``நீர், கல்வி, சுற்றுச்சூழல்" என்ற தலைப்பில், அஸ்ஸாம் மாணவிகள், தேர்தல் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர். 14க்கும் 19 வயதுக்கும் உட்பட்ட ஐந்நூறு மாணவிகள், அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டுவரும், 21 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய, அஸ்ஸாம் மற்றும், இளம்பருவ மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்பு (ACRNA), மற்றும் யுனிசெப் (UNICEF) அமைப்பு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளனர். இது குழந்தைகளின் தேர்தல் அறிக்கை என அழைக்கப்படுகிறது. அந்த அறிக்கை, நலவாழ்வு, நீர், கல்வி, சுற்றுச்சூழல், இயற்கைப் பேரிடர்கள், குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற, அஸ்ஸாம் மாநிலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை அலசுகிறது. மேலும் அந்த அறிக்கை, பல்வேறு வகையான கோரிக்கைகளையும் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.
அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பைச் சமாளிக்கக்கூடிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவது, பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்குச் சென்று சேர்ந்துள்ள அரசின் சேவைகள், வளர்ச்சி மேலாண்மைகள், பாலியல் வன்முறை போன்றவை குறித்தும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் அஸ்ஸாம் மாநிலத்தில், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் காலங்களில், மிக நீண்ட நாள்களுக்குப் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அக்காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடக்கூடியவை. மீதமுள்ள பள்ளிகளும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுவிடும். வெள்ளப் பாதிப்புகள் எல்லாம் முடிந்து இயல்புநிலைக்குத் திரும்பினாலும், கல்வி ஆண்டில் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரிக்கும். மாணவிகள் தங்களது தேர்தல் அறிக்கையை பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் அஸ்ஸாம் கன பரிஷித் உட்பட, அஸ்ஸாமின் முக்கிய ஐந்து கட்சிகளுக்கும் கொடுத்துள்ளனர். இது, தேசிய அளவில் மிக முக்கியமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. (நன்றி: விகடன்)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...