Wednesday, 27 March 2019

நிலம் திருடும் நிறுவனங்களுக்கு எதிராக...

நிலம் திருடும் நிறுவனங்களுக்கு எதிராக... பெரும் நிறவனங்களுக்கு எதிராகப் போராடும் Trócaire 'அயர்லாந்து கத்தோலிக்க உதவி மற்றும் முன்னேற்ற இயக்கம்'

வறிய நாடுகளில், இயற்கை வளங்களை, நீதியற்ற முறைகளில் அபகரித்து வரும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் கொள்ளை முயற்சிகளை தடுத்து நிறுத்த, Trócaire அமைப்பு, போராடி வருகிறது.
ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்
Trócaire என்றழைக்கப்படும் 'அயர்லாந்து கத்தோலிக்க உதவி மற்றும் முன்னேற்ற இயக்கம்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், 2019ம் ஆண்டின் தவக்காலத்திற்கென, பொருள் நிறைந்ததொரு கொள்கைப்பரப்பு முயற்சியை (Lenten Campaign) மேற்கொண்டுள்ளனர். "கொலையைத் தொழிலாக்குதல்: தொழில் நிறுவனங்களின் நிலம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குக் கணக்குக் கேட்பது" என்ற மையக்கருத்துடன், இத்தவக்கால முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகெங்கும், குறிப்பாக, வளர்ந்துவரும் வறிய நாடுகளில், நிலம், நீர், நிலத்தடி கனிமங்கள் என, இயற்கை வளங்களை, நீதியற்ற முறைகளில் அபகரித்து வரும் பெரும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் கொள்ளை முயற்சிகளை தடுத்து நிறுத்த, Trócaire அமைப்பு, போராடி வருகிறது. இவ்வமைப்பினர் மேற்கொண்டுள்ள தவக்கால விழிப்புணர்வு முயற்சியில், அயர்லாந்து கத்தோலிக்கர்கள் அனைவரும் இணையுமாறு, அந்நாட்டு ஆயர்கள், தங்கள் தவக்கால அறிக்கை வழியே விண்ணப்பித்துள்ளனர்.
உலகில் இன்று இயங்கிவரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களில், முதல் பத்து நிறுவனங்கள் இணைந்து, ஓராண்டில் சம்பாதிக்கும் மொத்த வருமானம், 180 வறிய நாடுகளின் மொத்த ஆண்டு வருமானத்தைவிட கூடுதலாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்தால், நாட்டில் வேலைவாய்ப்பு கூடும் என்ற நம்பிக்கையில், வறுமைப்பட்ட நாடுகளின் அரசுகள், தங்கள் நாட்டிற்குள் பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்று, தங்கள் நாட்டின் இயற்கை வளங்களை இந்நிறுவனங்களுக்கு விற்று வருகின்றன. இந்தப் பகல் கொள்ளையைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோர், வெகு எளிதாகக் கொலை செய்யப்படுகின்றனர்; அல்லது, காணாமல் போகின்றனர்.
Trócaire அமைப்பு, இத்தவக்காலத்தின் ஆரம்பத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பதிவு செய்துள்ள வேதனையான புள்ளி விவரங்களில், ஒரு சில இதோ:
2018ம் ஆண்டு, தங்கள் நிலத்தையும், மக்களின் உரிமைகளையும் காக்க போராடியவர்களில், 247 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், பன்னாட்டு நிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடிய 1400க்கும் அதிகமான மனித உரிமையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
வறுமைப்பட்ட நாடுகளின் அரசுகள், அயர்லாந்தைப்போல், ஆறு மடங்கு பரப்பளவும், இயற்கை வளங்களும் கொண்ட நல்ல நிலங்களை, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன.
Trócaire அமைப்பினர் இத்தவக்காலத்தில் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வுப் போராட்டம், நல்ல பலன்களைத் தரவேண்டுமென வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...